மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக்கில் உள்ள மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால் இதுவரை 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்கள்.
இந்தியாவில் கொரோனா பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசியை மிகப்பெரிய வணிகமாக மாற்றியுள்ள நிலையில் மருத்துவத்துறையில் நடக்கும் தவறுகளால் நோயாளிகள் இறந்து வருகிறார்கள். சமீபத்தில் தமிழகத்தின் வேலூர் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 நோயாளிகள் உயிரிழந்த நிலையில் இன்று புதன் கிழமை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஆக்சிஜன் கொண்டு வந்த லாறியில் இருந்து அதனை மாற்றும் போது ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக 22 நோயாளிகள் இறந்துள்ளதாகவும் மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்றில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜாகிர் ஹுசேன் மருத்துவமனையில் 150 நோயாளிகள் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஹுசேன் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு 150 நோயாளிகள் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் ஒரு லாறியில் கொண்டு வரப்பட்ட ஆக்சிஜனை மருத்துவமனை டாங்கிகளில் மாற்றிய போது தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அரை மணி நேரம் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி 22 பேர் உயிரிழந்துள்ளார்கள். இது இந்தியா முழுக்க அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
இந்தியா முழுக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கையிறுப்பில் இருந்த ஆக்சிஜனை இந்திய அரசு ஏற்றுமதி செய்தது. ஆனால் இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது.