புஷ்பா திரைப்படம்; எப்படி மக்களை கவர்ந்தது என்ற ரகசியம் புரியாமல் அறிவுலகம் திண்டாடுவது குறித்து ராஜன் குறை ஒரு பதிவு போட்டுள்ளார். தொல்லியல், குறியியல், மானுடவியல் மற்றுமுள்ள அனைத்து இயல்களையும் கோர்த்து அவரே ஒரு கட்டுரை எழுதியிருப்பார். நேரமின்மை காரணமாக அதை தவிர்த்திருப்பார் போல. ஓ சொல்றியா பாடலும், பாடலில் இடைம்பெறும் சமந்தாவின் அங்க அசைவுகளும் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். எந்த தத்துவ பின்புலத்தில் மக்கள் இதனை ரசிக்கிறார்கள் என்ற பிரமிப்பு விடைத்து நிற்கிறது அவரது பதிவில். புஷ்பா படத்தின் இந்தி ரீமேக்கை அதிகம் விளம்பரம் செய்யவில்லை. ஆனால், படம் அங்கு பெரிய வெற்றி. இது எப்படி சாத்தியம்? ஒருவேளை கல் நாயக் படத்தின் நாஷ்டாலஜியை புஷ்பாவில் இந்தி ரசிகர்கள் பார்த்தார்களோ என்று ஒருவர் அர்த்தப்பூர்வமாக கேள்வி எழுப்ப, ‘புஷ்பா கல் நாயக்கை நினைவூட்டும் படம்தான். ஆனால் நோஸ்டால்ஜியாவால் மட்டுமே ஒரு படம் ஓடாது. பொதுவாக தியேட்டரில் அதிகம் படம் பார்ப்பவர்கள் இளம் தலைமுறையினர் (18-25). இவர்களுக்கு கல் நாயக் (1993) நினைவேக்கம் தருமளவு அனுபவமாகியிருக்காது’ என தர்க்கப்பூர்வமாக விடையளித்துள்ளார் ராஜன் குறை. புஷ்பாவின் வெற்றி தமிழ் அறிவுஜீவிகளின் உலகத்தை திணறடித்துக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் ராஜன் குறையின் அறிவுலகை.
விளம்பரம் செய்யப்படாத அல்லு அர்ஜுன் படம் எப்படி இந்தியில் ஓடியது? இதற்கு எந்த தத்துவ பின்புலமும் இல்லை. கோல்ட் மைன்ஸ் என்று ஒரு நிறுவனம் உள்ளது. இதைப் போல் பல நிறுவனங்கள் இருந்தாலும் இவர்கள்தான் தென்னிந்திய மொழிப் படங்களின் டிஜிட்டல் உரிமையை பெருமளவு வாங்குகிறவர்கள். யூ டியூபில் தென்னிந்திய மொழிப் படங்களின் இந்தி டப்பிங்கை பதிவேற்றுவது இவர்கள்தான். விஜய், அஜித், விஷால், கார்த்தி, அல்லு அர்ஜுன், ஜுனியர் என்.டி.ஆர், மம்முட்டி, மோகன்லால் என அனைத்து நடிகர்களின் படங்களின் இந்தி டப்பிங்கை யூடியூபில் பார்க்கலாம். இதில் அல்லு அர்ஜுன் படங்களுக்கே அதிக பார்வையாளர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது சரைனைடு படத்தின் இந்தி டப்பிங்கை 64 கோடி பேர் யூடியூபில் பார்த்திருந்தனர். டிஜே என்ற படத்தை 440 மில்லியன் அதாவது 44 கோடி பேர் பார்த்துள்ளனர். இதேபோல் அவர் நடித்த எல்லா படங்களும் 25 கோடிகளுக்கு மேல் பார்வைகளை பெற்றுள்ளன. பத்து வருடங்களுக்கு மேல் இந்திப்பட ரசிகர்கள் இந்தியில் அல்லு அர்ஜுனை ரசித்து வருகிறார்கள். அஜித், விஜய் படங்கள் இப்போதுதான் இரண்டு இலக்க கோடிகளை எட்டியுள்ளன. அல்லு அர்ஜுன் என்றால் யார் என்று இந்தி பேசும் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். நடைமுறை யதார்த்தத்தை கவனிக்காமல் தத்துவங்களில் தலையைவிட்டுக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் தூக்கத்தில் எழுந்து பாயை பிறாண்டுகிறார்கள். ராஜன் குறை போன்ற ஆகாச கோட்டை அறிவுஜீவிகள் தத்துவத்தில் இறங்கும் முன் ஒன்றை புரிந்து கொள்ள வெண்டும். உங்களின் பிரமிப்புகளும், வியப்புகளும் வெகுஜனங்களின் வியப்புகளோ, பிரமிப்புகளோ அல்ல.