ஈழத் தமிழர்களின் கண்ணீரும் அவலமும் விற்பனைப்பண்டமாக உலகம் முழுவதும் வியாபாரம் செய்யப்படுகின்றது. தன்னார்வ நிறுவனங்கள், புலம் பெயர் நாடுகளில் பதுக்கப்பட்ட பணம், பல் தேசிய வியாபார நிறுவன முதலீடுகள், இந்தியா உட்ப்ட ஏகபோக அரசுகளின் முதலீடுகள் போன்ற உலகம் தழுவிய மாபியா வலைப் பின்னல்கள் மனிதப் பிணங்களையும் அவலங்களையும் முன்வைத்து தமது வியாபாரத்தைத் துரிதப்படுத்தியுள்ளன. தன்னார்வ நிறுவனப் பண வழங்குனர்களிடமிருந்து தமது முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளும் அபாயகரமான கூட்டங்களுக்கு திடீர் மனிதாபிமானம் முளைத்து அது ஈழத்தை நோக்க்கி வேர்விட ஆரம்பித்திருக்கிறது. இந்த வரிசையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த லீனா மணிமேகலை என்பவரது ‘வெள்ளை வான்’ ஆவணப்படம் அவலங்களை முதலீடு செய்துள்ள இன்னொரு காட்சியாகிறது.
ஆதிவாசிகளை அழிக்கும் நிறுவங்களில் டாட்டாவும் ஒன்று. டாட்டா ஆதிவாசிப் பெண்களின் வாழ்கையை மேம்படுத்துகிறது என்ற தொனிப் பொருளில் ஆவணப்படம் தயாரித்துக்கொடுதவர் லீனா மணிமேகலை.
இலங்கை அரச ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்ற லீனா மணிமேகலை ஆவணப்படுத்திய படம் தான் ‘வெள்ளைவான்’. இலங்கை இனக்கொலை இராணுவத்தின் காலடியில் வாழும் வடகிழக்குத் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட முன்னை நாள் போராளிகளைக் காட்டிக்கொடுக்கும் வகையில் வெள்ளைவான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பல தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடறு என்ற இணைய ஊடகம் இது குறித்த செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளமை கவனத்திற்குரியது.
“வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர். உளவுத்துறைக்கு தமது கருத்துக்கள் போய்விட்டது என்றும் தமது போட்டோக்களை தாங்கள் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டும் அப்படத்தை எடுத்த லீனா மணிமேகலை என்பவர் அதை கணக்கு எடுக்காமல் பிரசுரித்திருப்பதாகவும் உளவுத்துறையாலும் இராணுவத்தினராலும் தமது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்றும் அஞ்சுகின்றனர். தமது பேட்டியை நீக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். அவை நீக்கப்பட்டதா இல்லாயா என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லையாம்.
இன்றும் கருத்தடை பாலியல் வன்முறைகள் என வேண்டுமென்றே முன்னாள் போராளிகள் மேல் இலங்கை இராணுவம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு கொண்டு இருக்கும் வேளையில் லீனா மணிமேகலையின் இந்த செயற்பாடு எம்மை அதிர்ச்சியும் அச்சமும் அடைய வைத்துள்ளது. பெண் போராளிகளின் உயிரை பாதுகாக்க வேண்டியது எமது கடமை
எந்த ஒரு நாட்டு அரசுக்கும் எதிரான கருத்துக்களை கூறும் நபரின் முகங்கள் மீடியாக்களில் மறைக்கப்பட்டே காட்டப்படுகின்றன. ஆனால் முன்னாள் போராளிகளின் படங்களை வெளியிட்டு அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் நடவடிக்கையே இதுவாகும் என்ற என்னுடைய கண்டனத்தையும் நான் இங்கு பதிவு செய்கின்றேன். ”
-வன்னியிலிருந்து சந்தியா இஸ்மாயில் (பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம்)