உலக மயமாதலின் இன்னொரு வடிவமாக அரச பயங்கரவாதமும் அரசுக்கெதிரான யுத்தத்தின் பயங்கரவாதமும் “அங்கீகரிக்கப்பட்ட- உலகமயமாகும்” சூழலில் மார்க்சியத்திற்கெதிரான திரிபுகளும், இடதுசாரியத்திற்கெதிரான பிறழ்வுகளும் மறுபடி ஒருமுறை புதிய உத்வேகத்துடன் அரங்கிற்கு வருகின்றன. மேற்குலகின் உற்பத்தித் திறனற்ற பொருளாதாரம் ஆட்டம்கண்டு பொறிந்து விழவாரம்பித்த 2007 இற்குப் பின்னான காலப்பகுதியில், இதுவரை மார்க்சியத்தைக் கேலி செய்த டைம் போன்ற வலதுசாரிப் பத்திரிகைகள் கூட மார்க்ஸ் சொன்னதில் உண்மையிருக்கிறது என்று ஒத்துக்கொள்ள முன்வந்திருக்கின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மூலதனம் என்ற மார்க்ஸிய நூலின் விற்பனையைக்கண்டு புத்தகக் கடைக்காரர்கள் திகைத்துப் போனார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரைச் சொல்லியே தேர்தலில் கணிசமான வாக்கு வாங்கக் கூடிய நிலையிலுள்ள இந்தியாவிலோ, நவ மார்க்சியம், அல்தூஸரிசம், பின்நவீனத்துவம் என்று மார்க்சியத்திற்கு மாற்றுத் தத்துவம் தேடும் போக்கு அதிகரித்து வருகின்றது.
யாராவது ஒரு வெள்ளைக்காரக் கல்வியாளன் காந்தியை மறுபடி தூக்கினிறுதினால், இந்திய இடதுசாரி அறிவுசீவிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுவிடுகிறது. பிரான்ஸ் நாட்டில் உருவான பிரத்தியோக சூழ்னிலைகளில் உருவான அல்தூசர், தெரீதா, பூக்கோ போன்றோரின் அச்சூழ்நிலையை ஒட்டிய சிந்தனைகளை, அவை உருவான சமூக புறச் சூழ்நிலைகளைக் கூட ஆராயாமல் அப்படியே பின்பற்றுகின்ர் அபாயம் எதிர்கொள்ளப்படவேண்டும்.
சமூகத்தின் இயக்கத்திற்கான காரணத்தை தர்க்கரீதியாக ஆராய மறுத்து, சமூகத்தின் இருப்பை, ஏற்கனவே தோற்றுப் போன மேற்கத்தைய சிந்தனைகளுடன் அதுவும் தமது ஏகாதிபத்திய நலனுக்காக மேற்கத்திய அரசுகளால் ஊக்குவிக்கப்பட்ட சிந்தனைகளுடன் பொருத்தி நியாயப்படுத்தும் போக்கானது மார்க்சிய சிந்தனை முறைக்கு அபாயக்குரலாகும்.
1920 களுக்குப் பின்னதாக ஐரோப்பாவில் எழுந்த ஏகபோக முதலாளித்துவம் 60 களில் அதன் உச்ச நிலையை அடைந்ததது. இந்த ஏகபோகத்தின் வளர்ச்சியானது மத்தியதர வர்க்கத்தைப் நெருக்கடிக்குள்ளாக்கியது. வலுவிழந்த மத்தியதர வர்க்கம் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் சார்ந்து போராட்டங்களை முன்னெடுக்க அவர்களின் தாழ்வு மனப்பாங்கு இடம் கொடாத நிலையில், தற்கொலைகளும், மனோ வியாதிகளும் அதிகரித்துச் செல்ல பிரய்ட் போன்ற மனோவியலாளர்கள் தோன்றினர். இவர்கள் தனிமனித இயல்புகள் தொடர்பான புதிய விளக்கங்களை முன்வைத்தனர்.
சமூகப் புறச்சூழ்னிலைகளின் தனிமனித இயபுகள் மூதான தாக்கத்தை நிராகரித்த இவர்கள் நலிவடைந்த மத்தியதர வர்க்கத்தைத் திருப்திப்படுத்தும் தத்துவங்களுடன் முன்வந்தனர்.
60 களில் ஏகபோக முதலாளித்துவம் கொடிகட்டிப்பறந்தத்து. சில்லறை விற்பனைத்துறை நிறுவன மயப்படுத்தப்பட்டு செய்ன்ஸ்பரிஸ், கர்பூர் போன்ற ராட்சத அங்காடிகள் சிறிய விற்பனை தாபனங்களைத் துடைத்தெறிந்தன. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் நிறுவனங்களால் விழுங்கப்பட்டன. இது நவீனத்துவத்தின் விழைவாகக் கருத்தப்பட, நவீனத்துத்துவத்தால் நெருக்கடிக்குள்ளான மத்தியதரவர்க்கத்தின் மத்தியிலிருந்து நவீனத்துவத்திற்கெதிரான பின்நவீனத்துவக் கருத்துக்கள் எழுந்தன.
மத்தியதர வர்க்கத்தால் தலைமைதாங்கப்பட்ட போராட்டங்கள் அவர்களின் வர்க்க இயல்பு காரணமாக அதிகார வர்க்கத்துடன் சமரசம் செய்துகொள்ளபப்ட பின்நவீனத்துவ-பின்னமைப்பியற் கருத்துக்கள, அரசியல், இலக்கியம், கலை துறை போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தவாரம்பித்தன.
நிலப்பிரபுத்துவத்திலிருந்து நவீனத்துவம் உருவானபோது, நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்த உணர்ச்சிசார்ந்த உறவுகள் அழியவாரம்பித்த நிலையில் நிலப்பிரபுத்துவம் சார்ந்து நவீனத்துவத்திற்கு எதிராகத் தத்துவப் போராட்டம் நடாத்திய நீட்சே போன்றவர்களும் இந்தப் பின்நவீனத்துவ கர்த்தாக்களின் வரிசையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ஆக, நீட்சேயிலிருந்து ஆரம்பிக்கும் நவீனத்துவத்திற்கு எதிரான கருத்தாடல்கள், மத்திய தரவர்க்கத்தின் அபிலாசைகளிலிருந்து அதிகாரத்துடன் சமரசம் செய்துகொள்ளும் போக்கினூடக புரட்சிக்கான முன் நிபந்தனைகளை மழுங்கடித்தத்து.
பின்நவீனத்துவத்தின் அடையளா அரசியல் என்பது தன்னார்வ நிறுவனங்களையும், “அரசியலற்ற” தலித்தியத்தையும், குடிமைச் சமூகங்களையும் நியாயப்படுத்த இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதே போல் தமிழவன் போன்ற சிலர் அல்தூசரின் சிந்தனைகளை முன்வைத்து இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையையும், ஏன் புலிகளின் பாசிசப் போக்கையும் கூட நியாயப்படுத்த முனைகிறனர்.
சிறீ லங்கா பேரினவாத ராணுவத்தின் கரங்களில் அழிந்து கொண்டிருக்கும் புலிகளின் அழிவிற்குப்பின்னான அரசியலில் இவ்வாறன திரிபுவாதங்களுக்கெதிரான போராட்டம் அவசியமாகிறது. இச்சூழ் நிலையில் அல்தூசர் தொடர்பான இச்சிறு கட்டுரை பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.
அல்தூஸர்: அரசியற் பின்னணி
1996 வரை 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரஞ்சு ஜனாதிபதியாகவிருந்த பிரான்சுவா மித்திரோன், 1993 இல் பிரான்ஸ் 2 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில், “வளர்ச்சியடைந்த நாடுகளாகிய நாம் மூன்றாமுலக நாடுகளைச் சுரண்டி வாழ்கிறோம், இதற்காக நான் கூச்சப்படுகிறேன்” என்று கூறியது உலக அரங்கில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியிருந்தது. மறு புறத்தில் இவரது ஆட்சிக்காலகட்டத்திலேயெ வறிய நாடுகளான அல்ஜீரியா, மரோக்கோ, துனிசியா போன்ற நாடுகள் மீது மட்டுமல்லாது பல ஆபிரிக்க நாடுகள் மீது கொடுமையான சுரண்டல் மேற்கொள்ளப்பட்டது.
தீவிர சோசலிச வாதியாக இனம்காணப்பட்ட பிரான்சுவா மித்திரோன் பிரஞ்சு ஏகபோக முதலாளித்துவத்திற்கு எப்போதும் ஆதரவளிப்பவராகவே இருந்தார்.
மார்க்சிற்காக ( Pour Marx)என்ற நூலில் இதைத்தான் அல்தூசர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“பிரஞ்சு பூர்சுவா வர்க்கம் புரட்சிகரமானதாக இருந்ததது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியபிறகும் கூட இவ்வாறான நிலை நீடித்தது. பிற நாடுகளைப் போலன்றி அறிவுஜீவிகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அறிவாளிகளைத் தன்னுடையை கோட்பாடுகளுக்குள் இணைத்துக் கொண்டது. கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் அதன் கொள்கைகள் குறித்தும் அவ நம்பிக்கை உருவாவதற்கு இதுவும் காரணமாக அமைந்தது.”
இவ்வாறான தந்திரோபாயத்தைப் பிரயோகித்த பிரஞ்சு ஆளும் வர்க்கம், ஆரம்பத்தில் தீவிர மவோயிசக் கருத்தக்களோடிருந்த மிஷேல் பூக்கோ போன்ற அறிவாளிகளைக் கூட மார்க்சியத்திற்கெதிரான திரிபுகளை உருவாக்கப் பயன்படுத்திக் கொண்டது. அல்தூசர் பூக்கோ போன்றவர்கள் மட்டுமல்ல “எனா” என்று பிரபல மான ( Ecole normale supérieure) இல் பிரன்சுவா மித்திரொன், ஷிராக், லியொனல் ஜொஸ்பன் போன்ற பிரபலமான முதலாளித்துவ அரசியல் வாதிகளும் இங்கிருந்து உருவானவர்கள் தான்.
இத்தகைய சூழ்னிலைகளில் மார்க்சியத்தின் திரிபுவாதக் கருத்துக்கள் பிரஞ்சு அரசுகளின் ஆசீர்வாதத்துடன் உருவாகி வளர்ந்தது.
தவிர, ரஷ்யப் புரட்சிக்குப் பின்னதாக ஸ்டாலின் தலைமையில் புதிய ரஷ்யாவைக்கட்டியெழுப்பும் பணியில், முன்வைக்கப்பட்ட கருத்துக்களைப் பொதுவானதாக மாற்றிய தத்துவார்த்தத் தவறுகளும் கூட அல்தூசர் போன்றின் திரிபுவாதப் போக்கிற்கு உரமூட்டியது எனலாம்.
அல்தூசரின் திரிபு
மார்க்சியம் சமூக அமைப்பை சமூக அடித்தளம் சமூக மேற்கோப்பு என்று இரு வேறான ஆனால் ஒன்றையொன்று சார்ந்த பகுதிகளாக வரையறுக்கிறது. அடித்தளம் என்பது உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் அவைசார்ந்த இயக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது.
உற்பத்தி சக்திகள் என்பது உற்பத்தியில் ஈடுபடும் கருவிகள் மற்றும் மனித உழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
மேற்கோப்பு என்பது சமூகத்தின் சித்தாந்தப் பகுதியாகும். மதம், கலை, ஒழுக்கம், சித்தாந்தம்,சட்டம், அரசமைப்பு என்பன மேற்கோப்பாகும்.
உதாரணமாக ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவச் சமூகம் நிலவிய போது, மன்னர்களும், மதங்களும் மக்களை இணைக்கும் சங்கிலியாக அமைந்திருந்தன. குறித்த உயர்குலத்தினரே அடிப்படைக் கல்வியைப் பெறும் வாய்ப்பிருந்தது.
பெண்கள் வேலைக்குச் செல்லும் உரிமை முற்றாக மறுக்கப்பட்டிருந்தது. அடிமைகளாகப் பண்ணைகளில் வேலை செய்வதென்பது நியாயமெனப் போதிக்கப்பட்டதுடன், அடிமைகளும் அதை ஏற்றுக் கொண்டிருந்தனர். அதற்கேற்ற போதனைகளும் சித்தாந்தங்களும் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருந்தன.
இன்றோ நிலைமை முற்றாக மாறிவிட்டது. அடிமைகள் போல வேலை வாங்குதல் என்பது சட்டவிரோதமாக்கப் பட்டுவிட்டது. புதிய சிந்தனைகள், புதிய ஒழுங்குமுறைகள் என்பன சமூகத்தில் விதைக்கப்பட்டு முதலாளித்துவ சமூகம் உருவாக்கப்பட்டது. இன்றைய ஒழுங்கு முறைகள் நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் இருந்திருக்கமுடியாது. அப்படி இருந்திருந்தால் அவ்வமைப்பு நிலைபெற்றிருக்க முடியாது. ஆக, அடித்தளத்தின் தன்மைக்கேற்ப மேற்கோப்பும் மறுபடுகிறது என்பதே உண்மையாகும்.
முதலாளித்துவ சமூகம் உருவானபோது முதலாளிகளுக்கு இலாபம் பெறுவதே பிரதான நோக்கமாக இருந்தது. சாதி, மதம், நிறம் என்பன அவர்களைப் பாதிப்பதாயிருந்திருக்கவில்லை. கிராமப்புற ஏழைவிவசாயிகளும், பண்ணையடிமைகளும் நகர்புறங்களை நோக்கி நகர்ந்து நிலத்துடனான பிணைப்பை அறுத்துக் கொண்டு தொழிலாளர்களாக மாறலாயினர். உதாரணமாக பலவருடங்களாக பிரான்சின் -மார்சை( Marseille)பகுதியில் செறிவாக வாழ்ந்து வந்த மக்ரேபீன் இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பிரஞ்சுக்காரர்களுடன் இரண்டறக்கலந்து போயினர். இவர்கள் இன்று கிறிஸ்தவப் பெயர்களைக் கொண்ட பிரஞ்சுக்காரர்களே.
கிறீஸ்தவ மதம் போதித்த மேலோர் கீழோர் என்ற தத்துவங்களேல்லாம் உடைந்து போயிற்று. 50 வீதமானோரால் மட்டுமே பேசப்பட்ட கோலுவா மொழியானது மற்றை மொழிகளை எல்லாம் அழித்து பிரஞ்சு மொழியானது.
இதுதான் முதலாளித்துவ அமைப்பு உருவாக்கிய மேற்கோப்பு.
இது போலத் தான் தென் இத்தாலியிலிருந்த இந்தியர்களும் கூட இத்தாலியில் உருவான முதலாளித்துவ அமைப்புமுறையில் இத்தாலியர்களோடு அடையாளம் தெரியாமல் கலந்து போனார்கள்.
இது முதலாளித்துவ உற்பத்தி ஏற்படுத்திய மேற்கோப்பு.
ஆனால் இன்றோ ஐரோப்பாவில் முதலாளித்துவ உற்பத்தி முறையும் அதன் வளர்ச்சியும் காலவதியாகிப் போனது. உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடையவில்லை. ஒரு நூற்றாண்டுகளிற்குள்ளாகவே பிரஞ்சுதேசத்தோடு கலந்து போன மக்ரேபின் அராபியர்களின் கதை மாறி போய் இன்றைய ஏகதிபத்தியப் பொருளாதாரம் புதிதாக வரும் அராபியர்களை மேலும் மேலும் பிரித்துக் கூறுகளாக்கிக் கொண்டிருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் தமது சாதீயக் கோட்படுகளையும் அடிப்படைவாதத் தன்மையையும் பேணிய படியே வாழ்கின்றனர்.
இது தான் ஏகாதிபத்திய உற்பத்தி முறை ஏற்படுத்திய மேற்கட்டுமானம். ஏகாதிபத்திய அமைப்புமுறையில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி செத்துப் பொய்விட்டட்து. வறிய நாடுகளில் சுரண்டும் பணத்தில் உருவான வங்கிக் கடன் பொறிமுறை தான் ஐரோப்பிய அமரிக்க நாடுகளை ஓட்டிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு உருவாகும் மேற்கோப்பென்பது அடித்தளத்தைப் பாதிக்குமா?
நிச்சயமாகப் பாதிக்கும். இந்தியச் சமூக அமைப்பு இதற்கு நல்ல உதாரணம்.
நிலப்பிரபுத்துவத்தின் உருவாகத்தோடு ஐரோப்பாவைப்போலவே இந்தியாவில் உருவாகி வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சாதி அமைப்பு முறையானது அச்சமூக அமைப்பின் தத்துவார்த்த மேற்கட்டுமானமான இந்து மதத்தின் கூறாக அமைந்தது.
அயர்லாந்தின் போன்ற நாடுகளின் நிலவுடமை அமைப்பிலும் இவ்வாறான சாதி அமைப்புக் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே சாதியமைப்பு என்ற மேற்கோப்பின் ஒரு கூறை பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு நிலப்பிரப்புவத்துவ சமூக அமைப்பின் அடித்தளத்தைப் தொடர்ந்து பேணுவதற்காக மேலும் வலுப்படுத்தியது.
இதனூடாக இந்தியாவில் தேசியப் பொருளாதாரத்தின் உருவாக்கத்தை மிக நீண்டகாலத்திற்குப் பின் தள்ளியது. உலக மயமாதலின் பின்னான தவிக்க முடியாத, சிறு தொகையிலான தேசியப் பொருளாதார வளர்சிகூட முழுமையான தேசியப் பொருளாதார வளர்ச்சியாகப் பரிணாமமடைய சாதீய அமைப்பு முறையினூடான நிலப்பிரபுத்துவமே தடையாக அமைகிறதெனலாம்.
ஆக, மேற்கோப்பானது அடித்தளத்தைப் பாதிக்கும் என்பது தெளிவானது மட்டுமல்ல மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோர் தமது தத்துவார்த்த விவாதங்களில் பலதடவைகள் குறித்துக் காட்டியுள்ளனர்.
அல்தூசரின் காலப்பகுதியில் மிகப்பிரதான விவாதப்பொருளாக அமைந்தது சமூகத்தின் அடித்தள மாற்றமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்ற கருத்தாடல்களுக்கு எதிரான ததுவங்களேயாகும். அல்தூசர் இதில் முக்கியமானவர்.
பிராங் போர்ட் சிந்தனைப்பள்ளியைச் சார்ந்த ஹெர்மன் மக்கியூஸ் என்பவர், அடித்தளத்துடன் தொடர்பற்ற சித்தாந்த மேற்கோப்பே வரலாற்றைத் தீர்மானிக்கிம் என்றார். இன்றைய இந்திய பின்நவீனத்துவ வாதிகள் கூறுவது போல் வேலையற்றோர், விழிம்பு நிலை மக்கள், சமுதாயத்திலிருந்து அன்னியப்பட்ட குழுக்கள் ஆகியனவே புதிய வரலாற்றை உருவாக்கும் என்றார்.
இந்தச் சூழலில் அல்தூசர் மூன்று பிரதான கருத்துக்களுடன் வெளிவந்தார்.
1. மேல்நிர்ணயம்(Overdetermination)
2. தத்துவார்த்தச் செயற்பாடு(Theoritical Practice)
3. மானுடத்துவம்(Humanism)
மேல் நிர்ணயம்:
மேற்கோப்பு மற்றும் அடித்தளம் தொடர்பான விவாதமொன்றில் ஏங்கல்ஸ் ஜே.பிளோச் என்பவருக்கு எழுதிய கடிதமொன்றில், “வரலாறு தொடர்பான பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தில், உற்பத்தியும் மறு உற்பத்தியுமே இறுதிக்கணத்தில் நிர்ணயிக்கும் காரணிகளாகவிருப்பினும், அதுமட்டும் தான் வரலாற்றின் வளர்ச்சிக்கான காரணியல்ல. மேற்கோப்பும் வரலாற்றுப் போராட்டங்களை நிர்ணயிப்பதிலும், குறித்த அமைப்பை நிர்ணயிப்பதிலும் தீர்மானகரமான பாத்திரங்களை வகிக்கிறது.” என்று குறிப்பிடுகிறார். இக்கடிதத்தின் உட் கூறுகளை விமர்சிப்பதன் மூலமே அல்தூசர் தனது மேல் நிர்ணயம் என்ற கருத்தியலை உருவாக்க முனைகிறார்.
மிகவும் கனதியான ஒரு பகுதியை நாவலன் தொட்டிருக்கிறார்.அவர் தன் ஆய்வை முழுமையாக வைப்பார் என நம்புகிறேன்.அவருக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நாவலன், அல்தூசரை பற்றி “அயோக்கிய” தனமாக எழுதுகிறீர்கள் என்று சிலர் சொல்லப் போகிறார்கள். எதுக்கும் யோசித்து செய்யவும்.
சில பேருக்கு நாவலன் எழுதும் விடயங்கள் மேல் அல்ல மாறாக நாவலன் மேலே உள்ள கோபத்தில் கருத்து எழுதுகிறார்கள். இவர்கள் நாவலன் எப்படி எழுதினாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள்.இப்படியானவர்கள் தங்கள் நோய்க்கு தாங்கள் தான் மருந்து சாப்பிடனமேயொழிய தங்களுக்காக நாவலன் சாப்பிடனும் என்று எதிர்பார்க்கக்கூடாது.தமிழில் ஒரு பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. வைக்கப்பட்டறை நாய் தானும் படுக்காது.மற்றதையும் படுக்கவிடாது என்பார்கள்.அதுபோல் இவர்களும் நல்ல விடயங்களை எழுதமாட்டார்கள்.நாவலன் போன்றவர்கள் எழுதினாலும் விடமாட்டார்கள்.ஓடியோடி வேறு வேறு பெயர்களில் தூற்றிவாருவார்கள்.நாவலனைப் பொறுத்தவரையில் இங்கு உள்ள சிலரைப்போல் தான்மட்டும்தான் புத்திஜீவி என்று பிலிம் காட்டிக்கொண்டிருக்காமல் தன்னால் முடிந்தவரை ஆழமான விடயங்கள் குறித்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.அத்துடன் தன் கட்டுரைகள் தொடர்பாக நாகரீகமான முறையில் விமர்சனம் செய்பவர்களுடன் அவர் தொடர்ந்தும் தன் கருத்துக்களை விவாதித்து வருகிறார்.கற்றுக்கொள்வதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் அவர் என்றுமே பின்னின்றதில்லை.அப்படியிருந்தும் அவருடன் சேர்ந்து ஒரு ஆக்கபூர்வமான விமர்சனத்தை முன்வைக்காமல் தொடர்ந்தும் அவதூறுகளை அவர் மீது பொழிகின்றனர்.இப்படி செய்வதன் முலம் அவரை ஓரங்கட்டிவிடமுடியும் என கனவு காண்கின்றனர். இவர்கள் நாவலனை அம்பலப்படுத்தவில்லை மாறாக தங்களைத்தாங்களே அம்பலப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.