05.09.2008.
அரச படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் இடம்பெற்றுவரும் மோதல்களால் அகதிகளாகியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் சுகாதார, பொருளாதார, பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் அமைப்பு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து இருப்பதுடன், இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லையெனவும் புத்திஜீவிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அமைப்பின் நிறைவேற்றுச் செயலாளர் பேராசிரியர் ராகுல அத்தலகே இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இந்த மக்களை வருமாறு ஒருபுறம் அரசு கோருகின்றது. மறுபுறம் அதேபகுதிகளில் அவர்களை வைத்திருப்பதற்கான முயற்சிகளை புலிகள் மேற்கொண்டுள்ளனர். மனிதப் பாதுகாப்பாக இந்த அகதிகளை வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். மோதல் நடவடிக்கைகளில் சிறுவர், பெண்கள், முதியவர்களைப் பயன்படுத்துவது மனித உரிமை மீறலென ஐ.நா.வின் மனித உரிமைகள் சட்டத்தில் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை உடனடியாக புலிகள் நிறுத்த வேண்டுமென மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் அமைப்பு வலியுறுத்துகிறது.
அதேவேளை, இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான சரியான மதிப்பீடுகளை மேற்கொண்டு அவர்களின் உணவு, தங்குமிடம், சுகாதாரத் தேவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்.
மழை காலம் ஆரம்பமாகவுள்ளதால் இந்த அகதிகளின் நிலைமை மேலும் மோசமடையும் நிலைமை உள்ளது. அகதிகளுக்கு தேவையான உணவு, சுகாதார வசதிகள், பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.