இலங்கையிலிருந்து தமது அரசியல் கருத்துக்கள் காரணமாகவும் அரசியல் நடவடிக்கைகள் காரணமாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களைத் திருப்பியனுப்புவதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் முனைப்புக் காட்டுகின்றன. அண்மைக் காலங்களில் தமிழ் அரசியல் அகதிகளின் விண்ணப்பங்கள் கிரமமாக நிராகரிக்கப்படுகின்றன. இலங்கையில் எல்லாம் வழமைக்குத் திரும்பிவிட்டது என்று கூறி அகதிகள் திருப்பியனுப்புவதற்கான முயற்சிகள் இடம் பெறுகின்றன.
சண்டேலீடர் இதழின் ஆசிரியரும் ராஜபக்ச குடும்ப அரசினால் மிரட்டப்பட்டு இலங்கையை விட்டு இடம்பெயர்ந்தவருமான பிரடெரிக்கா ஜான்ஸ் இலங்கைக்குத் திரும்பிச் செல்வது பாதுகாப்பற்றது எனத் தெரிவித்துள்ளார். போர்த் தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவினால் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என கொழும்பு ரெலிகிராபில் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகதி உரிமை கோரியுள்ள பலரை தம்மோடு அடையாளப்படுத்தினால் அகதிகளாக அங்கீகரிக்கப்படுவீர்கள் எனப் புலம்பெயர் அமைப்புக்கள் சில அகதிகளின் அவலத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.
அகதிகளுக்கான ஐ.நாவின் அமைப்பு அகதிகளைத் திருப்பியனுப்பும் முயற்சிகள் குறித்து மூச்சுக்கூட விடவில்லை. புலம்பெயர் தலைமைகள் இவ்வமைப்புக்களை இதுவரை அணுகி அவர்களிடமிருந்து எந்த உறுதியையும் பெற்றுக்கொள்ளவில்லை. அகதிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது என்ற போராட்டங்களை ஒழுங்குபடுத்தவும் இந்த அமைப்புக்க்கள் முன்வரவில்லை.
கோரமான போர்க்குற்றவாளிகளை சுத்ந்திரமாக உலாவர விட்டுள்ள மைத்திரிபால சிரிசேனவின் அரசில் நம்பிக்கை வைத்து இலங்கைக்குத் திரும்பிச் செல்வது என்றாவது ஒருநாள் உயிராபத்தை ஏற்படுத்தும்.