முகாம்களிலுள்ள மக்களை அரசாங்கம் திட்டமிட்டு அடைத்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் மக்களை விடுவித்து அவர்கள் சுதந்திரமான காற்றை சுவாசிக்கும் சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதேவேளை, ஆட்கள் இல்லாத பிரதேசத்தில் புனர்நிர்மாண, அபிவிருத்திப் பணிகளை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
முகாம்களிலுள்ள மக்கள் தற்போது கோருவது ஒரு போக விவசாயத்துக்கான உதவியை மட்டுமேயாகும். இதற்கு அரசு செவிசாய்க்காது இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தயோகபூர்வ வாசஸ்தலமான கேம்பிரிஜ் டெரசில் நேற்று முன்தினம் சனிக்கிழமை விசேட அறிக்கையொன்றை அவர் விடுத்திருக்கிறார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
அகதி முகாம்களிலுள்ள மக்களை அரசாங்கம் திட்டமிட்டே அடைத்து வைத்துள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு 6 மாதத்தில் 80% முதல் 90% பேரை மீளக் குடியமர்த்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக எதுவித ஆக்க பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் வீடுகளில் 70% மானவை சிறியளவில் சேதமடைந்தவையாகும். இந்நிலையில் ஏன் அம்மக்களை மீளக் குடியமர்த்த முடியாதுள்ளது. இந்த மக்கள் வேண்டி நிற்பது தமது ஒரு போக விவசாயத்துக்கான உதவியையேயாகும்.
இதன் பின்னர் தமக்கு எந்த உதவியும் தேவையில்லையென அவர்கள் கூறியிருப்பதுடன், தமது வாழ்க்கையைத் தாமே கட்டியெழுப்ப முடியுமெனத் தெரிவித்துள்ளனர். அதனால் அரசு இதற்கு செவிசாய்க்காதுள்ளது.
இந்நிலையில் முகாம்களில் இம்மக்கள் தொடர்ந்து இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏன் இவர்களை ஒன்றிணைக்க முடியாது? முகாம்களில் மரணங்கள் அதிகரிக்கின்றன. இதனையிட்டு அரசாங்கத்திடம் கேட்கும் போது சனநெருக்கடி மிக்க பிரதேசங்களில் மக்கள் இறப்பார்கள் என்று கூறுகிறது.
ஏனைய பிரதேசங்களில் மக்கள் இயற்கை மரணத்தை அடைகின்ற நிலையில், முகாம்களில் மக்கள் செயற்கை மரணத்தை தழுவுகின்றனர். இதற்கு உணவு, குடிநீர் பற்றாக் குறையாகக் காணப்படுவதுடன், போசாக்கின்மை மற்றும் சுகாதார வசதி குறைபாடே காரணமாகும். இவற்றை மூடி மறைப்பதற்காகவே எதிர்க் கட்சியினரை முகாம்களுக்குச் செல்லவிடாது அரசு தடுக்கின்றது.
இங்குள்ள சுகாதார நிலைமைகளைக் கூறுவதற்கு வைத்தியர்கள் அஞ்சுகின்றனர். முகாம்களில் புலிகள் இருப்பார்களாயின் அவர்களை இனம்கண்டு புனர்வாழ்வு முகாம்களில் பராமரிக்க வேண்டும். இதனைச் செய்யாது ஒட்டு மொத்தமாக சகல மக்களையும் முட்கம்பி வேலிக்குள் அடைக்கின்றனர்.
இந்தியாவிலிருந்தும் ஏனைய சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் மக்களின் மீள் புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்காக உதவிகளைப் பெறுகின்ற நிலையில் இப் பணத்துக்கு என்ன நடக்கின்றதென தெரியாதுள்ளது. இந்நிலையில் மறுபுறத்தில் வரிச் சுமையை மக்கள் மீது சுமத்துகின்றது. முகாம்களில் மக்களை அடைத்து வைத்துக்கொண்டு எவ்வாறு அபிவிருத்தியைச் செய்ய முடியும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படாமல் தடுப்பதற்கு முகாம் மக்களை மீளக் குடியேற்றுமாறு கேட்கிறேன்.