தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தம்மிடம் ஆவணங்கள் இருந்ததாகவும், எனவேதான் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தம்மை பயமுறுத்துவோர் தேர்தலின் போது மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பான சாட்சியங்கள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்த அவர், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதனை மக்களுக்கு தெரியப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
தமது அலுவலகத்தில் தேடுதல் நடத்துவது, பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை, நெருங்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டமை போன்ற செயல்களில் இறுதியாக தம்மை படுகொலை செய்வதற்கே அரசாங்கம் தயாராகி வருவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு பாதுகாப்பளித்த 90 படைவீரர்களுக்கு பதிலாக தற்போது 4 பொலிஸ்காரர்கள் கைத்துப்பாக்கிகளுடன் மாத்திரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படைகளில் இருந்து சட்டரீதியாக வெளியேறிய 3 ஜெனரல்கள், 3 பிரிகேடியர்கள், மற்றும் 2 கேணல்கள் தமக்கு ஆதரவளித்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் சண்டேலீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் சமபந்தப்பட்டவர்கள் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது பொய்யான தகவலாகும். நேற்று மாத்திரம் தமது அலுவலகத்தில் இருந்த 20 பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் 23 கணணிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை யாவும் நீதிமன்ற ஆணையின்றியே இடம்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு அனைத்தும் உடைந்துபோய் உள்ளது. யாரும் பொலிஸிற்கோ நீதிமன்றத்திற்கோ செல்லமுடியாது. எந்த நேரத்திலும் யாரும் கைதுசெய்யப்படலாம். இந்தநிலையில் நாட்டில் அனைவரும் தமது பணிகளை உரியமுறையில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தான் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை எனக்குறிப்பிட்ட அவர், தமது உயிரை பாதுகாப்பதற்காக மறைந்து வாழவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தானும் தமது குடும்பத்தினரும் ( மனைவி வெளிநாட்டில் படிக்கும் இரண்டு மகள்மார்) நாட்டில் இருந்து வெளியேற முடியாதவாறு விமானநிலையத்தில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தாம் தமது பாதுகாப்புக்காகவே சினமன் லேக்சைட் ஹோட்டலில் 20 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்ததாக கூறிய அவர், இதன் போது அரசாங்கம் தன்னையோ அல்லது எதிர்க்கட்சி தலைவரையோ கொலை செய்ய திட்டமிடுவதாக செய்தி தனக்கு கிடைத்ததாக குறிப்பிட்டார்.
எனினும் இதனை மறைப்பதற்காகவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்ய தாம் திட்டமிட்டதான செய்தியை அரசாங்கம் பரப்பிவிட்டது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.