சாதீயம் கோலோச்சும் இந்திய சமூகத்தில் சுயமாக தன் கல்வி மூலம் உருவாகி வந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவரது வாழும் பணிகளும் இந்திய வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும் என்றாலும், அவரது வருகைக்குப் பின்னரும் இந்தியாவில் தலித் மக்கள் எழுச்சி கொள்ளவில்லை.
90-களுக்குப் பின்னர் அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவினையொட்டி தலித் அரசியல் கவனம் பெற்றது. அதன் பின்னர்தான் இந்திய அளவில் பரவலாக தலித் மக்கள் தங்கள் மீதான சாதிக் கொடுமைகளுக்கு பதிலடி கொடுக்கத் துவங்கினார்கள்.
அது பல இடங்களில் சாதிக் கலவரம் என பதிவானாலும் இந்த கொடூரங்களில் அரசு இயந்திரம் ஆதிக்க சாதிகளின் பக்கமே இணைந்து நின்றது. அதன் ஒரு வெளிப்பாடுதான் கர்ணன் படம் ஆனால் அது அந்த அரசியலைப் பேசவில்லை என்பதுதான் துயரம். அண்ணல் அம்பேத்கர் மதம் மாறுவதற்கு முன்னர் மூன்று முக்கிய உரைகளை நிகழ்த்தினார் அந்த உரையில் அரசு இயந்திரம் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.
“கிராமங்களில் நீங்களும் சில வீடுகளில்தான் வசிக்கின்றீர்கள். முஸ்லீம்களும் சில வீடுகளில்தான் வசிக்கிறார்கள். ஆனால் உங்களைத் தொட்டுப்பார்க்கும் சாதி இந்துக்களுக்கு ஏன் முஸ்லீம்களை தொட்டுப்பார்க்கும் துணிச்சல் வரவில்லை. இந்துக்கள் தங்கள் மீது அடக்குமுறைக்கு முயன்றால் பஞ்சாப் முதல் சென்னை வரை அனைத்து முஸ்லீம்களும் ஒன்று திரண்டு பாதுகாக்க வருவார்கள் என்பதை முஸ்லீம்கள் உணர்ந்திருப்பதால்தான் முஸ்லீம்களால் அவர்களால் அச்சமின்று சுதந்திரமாக வாழ முடிகிறது.
அதே நேரத்தில் உங்களைக் காப்பாற்ற யாரும் ஒன்று திரண்டு வர மாட்டார்கள் எந்த ஒரு பொருளாதார உதவிகளும் உங்களை வந்தடையாது. எந்த ஒரு அரசு நிறுவனமும் எந்த சூழலிலும் உதவிக்கு ஓடி வந்து விடாது என்பது சாதி இந்துக்களுக்கு நன்றாக தெரியும்., இங்கே சாதி இந்துக்களுக்கும் தீண்டாத்தாகாதோருக்கும் ஒரு பிரச்சனை என்றால் சாதி இந்துக்களாக இருக்கும் தாசில்தாரும் போலீசும் கடமையைக் காட்டிலும் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உண்மையாக இருப்பார்கள்”- 1956-ல் பெருந்திரளான மகளுக்கு முன் அண்ணலின் உரை.
இந்திய அரசு உருவாக்கத்தில் அண்ணலின் பங்கு அளப்பரியது. அரசியல் சட்டம், பொருளாதாரம் ரிசர்வ் வங்கி, தனித் தொகுதி என இன்று இந்திய பொதுச் சமூகமும் தலித் மக்களும் அனுபவிக்கும் பல உரிமைகள் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்டவை. அது இன்று காவி மயமாகி வருகிறது.