இலங்கை முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் உயிர்கொல்லும் மர்மமான சிறுநீரக வியாதி ஒன்று பரவிவருவது கடந்த இரண்டுவருடங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கில் சுன்னாகம் பிரதேசத்திலும், மலையகத்திலும் இந்த நோய் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலிகொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே வகையான நோய் எல்- சல்வடோர் உட்பட பல லத்தீன் அமெரிக்க விவசாய நாடுகளிலும் பரவியிருந்தது. பல்வேறு உள்ளூர் நிறுவனங்களின் ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் பயன்படுத்தப்படும் களைக் கொல்லி மருந்து ஒன்றே இந்த நோய்க்கான அடிப்படைக் காரணம் எனக் கண்டறியப்பட்டது..
இதனைப் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான விவசாயிகள் மருந்துகள் பலனளிக்காமல் மரணித்துப் போயினர்.
பூச்சிக்கொலி மற்றும் களைக்கொல்லிகளை உள் நாட்டில் விற்பனை செய்யும் தரகு முதலாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசுகள் விவசாயிகளின் மரணத்தின் பின்னணியிலுள்ள காரணத்தையோ இறந்துபோகும் ஏழை விவசாயிகளின் எண்ணிக்கையையோ வெளியிடுவதில்லை என்பதால் சாகடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவரவில்லை.
களைகளை மட்டுமன்றி மனிதர்களையும் கொன்று பேரழிவை ஏற்படுத்தும் இந்தக் களைநாசினியைப் தடைசெய்ய வேண்டும் என உள்ளூர் அமைப்புக்கள் பல ராஜபச்க அரசிற்கு எதிராகப் போராடி வந்தன.
குறிப்பாக தேயிலைச் செடிப் பயிர்ச்செய்கைக்கும், நெல் வயல்களிலும் பயன்படுத்தப்படும் மொன்சந்தோ(monsanto) என்ற களை நாசினியே அழிவிற்குக் காரணம் என்றதும் இலங்கை அரசு அதனைத் தடைசெய்து மாற்று வழிகளைப் பயன்படுத்துவதாக அறிவித்தது.
களைகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளில் பயன்படுத்தப்படும் நச்சுப் பொருட்களை இலங்கை, இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பேரிழப்புக்களை ஏற்படுத்துகிறது என Consortium of Investigative Journalists என்ற அமைப்பு பல்வேறு விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படியில் தெரிவித்திருந்தது.
கிளிபோசைட் என்ற இரசாயனப் பொருள் கலந்துள்ள கிருமி நாசினிகளும் களைக் கொல்லிகளும் இந்த நோயை ஏற்படுத்துவதால் மகிந்த ராஜபக்ச அரசு இவற்றிற்குத் தடைவிதிப்பதாக 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எம்.சந்திரசேன என்ற உதவியமைச்சர் அறிவித்தார்.
‘Monsanto is a sustainable agriculture company. We deliver agricultural products that support farmers all around the world’ என்று தம்மைப்பற்றிக் கூறிக்கொள்ளும் மொன்சந்தோ நிறுவனம் அமெரிக்காவின் மல்ரி பில்லியன் பல்தேசிய நிறுவனங்களுள் ஒன்றாகும்.இலங்கையில் கந்தான என்ற இடத்தில் இந்த நிறுவனத்தின் கிளை அமைந்துள்ளது.
இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கும் நெல்வயல்களுக்கும் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகளை வழங்கிவருகிறது. இந்த நிறுவனத்திடம் சில மில்லியன்களைப் பெற்றுக்கொண்டு மீண்டும் கிளிபோசேட் கலந்திருக்கும் மொன்சாந்தொ மருந்துகளை அனுமதிப்பதற்கான கண்துடைப்புத் தீர்மானத்தையே ராஜபக்ச அரசு நிறைவேற்றவிருப்பதாக அறிவித்தது.
பின்னர் மொன்சாந்தோ உற்பதிகளைத் தடைசெய்வதா இல்லையா என்ற ஆய்வை இலங்கை அரசு இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டது. இந்த இடைவெளிக்குள் மொன்சாந்தோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கத்தைச் சந்தித்து அழுதங்களை வழங்கியதுடன் பரிமாறவேடியவற்றைப் பரிமாறிக்கொண்டனர்.
இறுதியாக Technical Committee, Monsanto உம் agrochemical industry groups என்ற அமைப்பும் மகிந்த
ராஜபக்சவைச் சந்திதது. இதன் பின்னர் தடை இடை நிறுத்தப்பட்டுள்ளது.
குடியரசுக்கட்சிக்கு பெரும் பணம் வழங்கிய மொன்சந்தோ ஒபாமா ஆட்சிக்கு வந்ததும் Monsanto Protection Act என்ற சட்டத்தை அமெரிக்காவில் நிறைவேற்றக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஏழைத்தொழிலாளர்களின் உரிமைகளை மட்டுமன்றி உயிரையும் தயவு தட்சண்யமின்றிப் பறிமுதல்செய்யும் இப் பல்தேசிய நிறுவனங்களின் உள்ளூர் அடியாள் அரசுகளில் ராஜபக்ச அரசு மிகவும் பிரதானமானது. அமெரிக்க அரசினதும் பல்தேசிய நிறுவனங்களதும் நம்பிக்கை மிக்க அரசே ராஜபக்ச அரசு. இலங்கையின் தரகு முதலாளித்துவத்தின் நம்பிக்கையான பிரதிநிதியான ராஜபக்ச சர்வாதிகாரம் தனது பகல்கொள்ளையையும், பிணங்களின் மீது பணம் சம்பாதிக்கும் திருட்டுத்தனததையும் மறைப்பதற்காக பேரினவாதத்தைக் கையிலெடுக்கிறது. ராஜபக்சவினால் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மலையக, முஸ்லீம் மக்களையும் சிங்கள உழைக்கும் வர்க்கத்தையும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தில் இணைத்துக்கொள மறுக்கும் தமிழ் இனவாதிகள் ராஜபக்சவைப் பலப்படுத்துகின்றனர்.
ஏழை விவசாயிகளதும், தொழிலாளர்களதும் பிணங்களின் மீது பணம் சுருட்டும் பல்தேசிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமெரிக்க ஏகபோக அரசிற்கு அரசிற்கு இலங்கையில் மனித உரிமைப் பிரச்சனை ஒரு பொருட்டல்ல. தமிழ்ப் பிழைப்புவாதிகளின் துணையோடு அமெரிக்கக் கொலைகாரர்கள் தமிழ் மக்களுக்கு மீட்பர்களாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.