நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்பூரை சேர்ந்த அப்சல் குரு சனிக்கிழமையன்று டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். ஆதாரங்களுடன் நிரபராதி என உறுதிசெய்யப்பட்டிருந்த அப்சல் குரு இந்திய அரசால் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். அப்சல் குருவின் மனைவி உட்பட அவரது குடும்பத்தினருக்கே அறிவிக்கப்படாமல் சுயநிர்ணய உரிமை கோரிப் போராடும் கஷ்மீர் மக்களை மிரட்டும் வகையிலும், தனது இஸ்லாமிய எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் இக்கொலை நிகழ்த்தப்பட்டது.
கொலைக்கு எதிராக கஷ்மீரில் நிராயுதபாணிகளான மக்கள் போராட்டங்களை நடத்த ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி அப்சல் குரு தூக்கிலிட்டதைக் கண்டித்து அம்மாநிலத்தில் பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அப்சல்குரு தூக்கில் போடப்பட்ட பிறகு டெல்லி திகார் ஜெயிலுக்குள்ளேயே புதைக்கப்பட்டார். அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3-ம் எண் ஜெயில் பக்கத்தில் அவன் உடல் புதைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அப்சல்குரு உடலை அவரது குடும்பத்தினரிடம் கொடுக்காமல், ஜெயில் உள்ளேயே புதைத்த இந்திய அரசின் அருவருப்பான செயல் கஷ்மீர் மக்களை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
இந்தப் போராட்டங்களில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 70 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் கஷ்மீர் வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதால் உண்மை நிலவரம் யாருக்கும் தெரியாது.
மாநிலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த 4 நாட்களாக நாளிதழ்கள் வெளியாகவில்லை. வரும் வெள்ளிக்கிழமை வரை நாளிதழ்களை அச்சிட வேண்டாம் என்று அரசுத் தரப்பில் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இணைய இணைப்புகள் செயல்படவில்லை. தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இலங்கை வன்னியில் நடைபெற்றதைப் போன்று மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு சாட்சியின்றி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.