பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்பிரகாரம் இந்த விபரங்களை திரட்டி தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களின் கவனத்துக்கு சமர்பிக்கும்படி சபை செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜமமு தலைவர் மனோ கணேசன் செய்தியாளர்களுக்கு முன்னணி ஊடக செயலகம் மூலம் அறிவித்ததாவது,
வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும் இருத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒரு சாரார் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை காலத்தை அனுபவிக்கின்றனர். இன்னொரு சாரார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நடைபெறுகின்றன. பிறிதொரு சாரார் இன்னமும் விசாரணை நிலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வருடக்கணக்கில் குடும்பங்களை பிரிந்து வாழும் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். தண்டனை பெற்றவர்களும் குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும். வழக்குகளை எதிர்கொள்கின்றவர்களுக்கு பிணை வழங்கப்படவேண்டும். அல்லது அவர்களும் புனர்வாழ்வு பயிற்சி திட்டத்தில் சேர்க்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும். இவையே இந்த நீண்டகால பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்துவைக்க கூடிய வழிமுறைகள் ஆகும்.
சிறைகளில் அல்லது முகாம்களில் இருப்போரில் ஒரு சிலர் பற்றி அவர்களது குடும்ப அங்கத்தவர்களிடம் உரிய தகவல்களும் இல்லை. சிலரது உறவினர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். எனவே கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியே திரட்டப்படுவதற்கு சமானமாக அதிகாரப்பூர்வமாக அரசின் சார்பாகவும் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் கைதிகளின் விபரங்கள் வெளியிடப்படுவது அவசியமானது ஆகும். புதிய அரசாங்கத்தை நமது அரசு என்று சொன்னால் அது தரும் நன்மை நமது மக்களுக்கும் கிடைக்க வேண்டும். சிறைகளுக்கு உள்ளே வாழ்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.
மனிதாபிமானம் கொண்டு தமிழர்களை சிங்கள தேசம் இதுவரை அணுகவில்லை. ஆனால் தமிழர்கள் அனைவரோடும் மனிதாபிமானத்தோடு வாழ்ந்து வருவதனை உலகம் ஏற்றால் உலகத்தமிழர்களின் சுதந்திரத்தை மனிதாபிமானத்தோடு அங்கீகரக்க வேண்டும் சிறையில் வாழும் தமிழ் கைதிகள் வெளியில் அவர்களை தேடும் தமிழர்கள் தமது சுதந்திர வாழ்வைத்தொலைத்து அரசியல் எனும் பெயரால் சிங்கள இராணுவ அடக்கு முறையின் கீழ் வாழ்வதனையும் தமிழர்கள் தமது பாதுகாப்பிற்காக போராடியதன் தேவைகளை நிராகரித்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எதிரியின் சிறையில் வாழும் உறவுகளினது விடுதலையானது காலத்தின் அவசியம் என்பதனை உணர்ந்து செயல்படுவதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின் றோம்.