அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணி நியமன ஆணைக்குப் பிறகு எழும் விவாதங்களில் வழக்கம் போல ‘ஆகமம்’ என்கிற சொல் தற்போது மீண்டும் அடிப்படுகிறது. உண்மையிலேயே நமது கோயில்களில் ஆகம விதிமுறைகள் நேர்மையாகப் பின்பற்றப்படுகிறதா? என்கிற கேள்வி எழுந்ததும் அதற்கு விடை காண நீதியரசர் மகராசன் குழுவின் ஆய்வறிக்கையை மீண்டும் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1982 இல் கோயில் வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வுசெய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. நீதியரசர் மகாராசன் தலைமையில் அமையபெற்ற அக்குழு மூன்று ஆண்டுக் காலம் தமிழகத்தின் கோயில்களுக்கு வருகை புரிந்து ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டது. .இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில செய்திகளை நேர்மையான பக்தர்களும் பரிசீலனை செய்யலாம். அறிக்கை சுட்டிய ஆகம விதிமீறல்களில் சில: முதலில், ஆகமவிதியின்படி அர்ச்சகர் ஊதியம் பெறக்கூடாது.
அதனால் தேவலோக தோசம் வருவதோடு ஆலயத்தில் புனிதமும் கெடும். ஆனால் பல கோயில்களில் இவர்கள் மாத சம்பளம் பெறுகிறார்கள். . மனைவி இல்லாதவர் (அபத்திகள்), பிரம்மச்சாரி ஆகியோர் நைமித்திகம் முதலிய பூசைகள் செய்யக்கூடாது என்பது விதி. இதற்கு மாறாகப் பல கோயில்களிலும் இவர்கள் நித்திய நைமித்திக பூசை இரண்டும் செய்கின்றனர். மேலும், விதிக்கு மாறாக உடல் குறைபாடு உடையவர்களும் பூசை செய்கின்றனர். கருவறையின் புனிதம் கெடுவதற்கான காரணங்களாகப் பிரம்ம புராணம் குறிப்பிடுவதில் குறிப்பிட்ட ஒரு கடவுளை பிற கடவுளுக்குரிய மந்திரங்களால் வழிபடுதலும் ஒன்றாகும். ஆனால் ஒரு கடவுளுக்குரிய மந்திரம் மற்றொரு கடவுள்களுக்குச் சொல்வதும், ஒரே மந்திரத்தைப் பல கடவுள்களுக்குச் சொல்வதும் நடைபெறுகிறது. தேவி மந்திரத்தை துர்க்கை, காளி, மாரிக்கு வேறுபாடு இல்லாமல் சொல்கிறார்கள். தட்சிணாமூர்த்திப் போன்ற பெருந்தெய்வங்களுக்குத் தனியாக மந்திரம் இருந்தும் அர்ச்சகர் அனைத்துக்கும் ஒரே வகையான மந்திரங்களையே சொல்கிறார்கள். மேலும், மந்திரங்கள் எழுத்துச் சோரமில்லாமல் திருத்தமாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பது ஆகமவிதி. ஆனால், பல அர்ச்சகர்கள் மந்திரங்களைப் பிழையாகவே உச்சரிக்கின்றனர். கோவிலின் மடைப்பள்ளியில் பாசகர் என்ற பிரிவுக்குரிய தீட்சை பெற்ற சிவாச்சாரியார் மட்டுமே கடவுளுக்குரிய நிவேதனத்தைச் சமைக்க வேண்டும்.
பல மடைப்பள்ளிகளில் தீட்சை பெறாதவரே சமைக்கிறார். தவிரக் கோயிலில் மடைப்பள்ளி இருந்தும் அர்ச்சகர்களின் வீடுகளில் தயாரிக்கும் உணவும் கடவுளுக்குப் படைக்கப்படுகிறது. நம்மில் பலரும் தவறாக நினைப்பது போலப் பார்ப்பனர் எல்லோரும் அர்ச்சகராக முடியும் என்பதற்கு ஆகமத்தில் இடமில்லை. இதற்குப் பனக்குடி கோயில் வழக்கு சான்றாக இருக்கிறது. அந்த வழக்கில் நீதியரசர் டி.சதாசிவ அய்யர் கோயில் அர்ச்சகர்களைத் தவிர வேறெவரும் அவர் பார்ப்பனராகவே இருந்தாலும் கருவறைக்குள் நுழைய அனுமதியில்லை என்கிறார். அர்ச்சகர் என்பவர் தீட்சை பெற்றவர். அவர் சிவாச்சாரியார் என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் பிறப்பினால் சிவாச்சரியார் ஆகமுடியாது. அக்குடியில் பிறப்பவர்களைச் சிவசிருஷ்டி என்று கூறுவது வழக்கு. ஆனாலும் எழு வயது முதலே தீட்சைகளும் ஆச்சாரிய அபிசேகமும் பெற்று வருபவரே சிவாச்சாரியார் ஆக முடியும். ஆதிசைவர்கள் என்றழைக்கப்படும் இவர்கள் சிவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவர்கள் என்பது அவர்களது நம்பிக்கை. மாறாகப் பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து தோன்றியவர்கள் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் என்பதால் இவர்களைப் பிரம்ம சிஷ்டி. என்பர். ஸ்மார்த்தத்தில் உருவ வழிபாடு இல்லை என்பதால் கோயில்களே இல்லை. எனவே, ஆகமும் இல்லை. ஆகமமே கிடையாது எனில் அவர்கள் அர்ச்சராக இயலாது. எனவேதான் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் சிவாலயங்களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்று ஆகமங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் ஸ்மார்த்தரான சங்கராச்சாரியாருக்குக் கருவறையில் பூசை செய்ய இன்றும் மறுக்கப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் 187 கோயில்களில் 218 ஸ்மார்த்தர்கள் அர்ச்சர்களாகப் பணியாற்றுகிறார்கள் என்பதை மகராசன் ஆய்வுக்குழு கண்டறிந்தது. வடபழனி, சிதம்பரம், திருவானைக்கா, இராமேசுவரம், திருவீழிமிழலை, திருவொற்றியூர், ஆவுடையார் போன்ற புகழ்பெற்ற கோயில்களும் இவற்றில் அடக்கம். பிற சாதியினர் கடவுளுக்குப் பூசை செய்யத் தகுதியற்றவர் எனில் ஸ்மார்த்த பார்ப்பனர்களுக்கும் அத்தகுதி கிடையாது என்பதுதானே உண்மை? ஆகம முறைப்படி ஒரு சிவாச்சாரியார் பூசை செய்து வந்த காளஹத்தி கோயிலில் வேடன் கண்ணப்பர் செய்த பூசையைச் சிவன் ஏற்றுக்கொண்டதால்தானே அவர் கண்ணப்ப நாயனார் ஆனார்? நாயக்கர் கால அரசியல் தலையீட்டுக்கு முன்னர் வரை சைவ பண்டார சாதியினர் செய்து வந்த பூசையைத்தானே பழனி முருகன் ஏற்றுக்கொண்டார்? உருவ வழிபாட்டை ஏற்காத ஸ்மார்த்தர்களின் பூசையை ஏற்றுக்கொள்ளும் கடவுள் உருவ வழிப்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் பூசையை ஏற்காமல் போவாரா? ஏற்க மாட்டார் எனில் அந்த அரசியல்தான் என்ன? சுப்ரமணிய சாமி அண்மையில் தனது டிவிட்டர் பதிவில் கோயில்கள் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அவர் தந்தை செய்த தவறினை செய்ய மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அண்மையில் கோயில் அர்ச்சகர் நியமனத்தில் திமுகத் தலையிட்டது என்னை மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது என்று எழுதுகிறார். ஸ்மார்த்தர்களின் விவகாரத்தைக் கள்ள அமைதியுடன் கடந்து, பிற சாதியினர் என்றவுடன் பொங்குகிறார்களே, இதுதான் அந்த அரசியலா?