சிறிலங்காவில் போர் இடம்பெற்ற – இதுவரை ஆட்கள் அனுமதிக்கப்படாத இடங்களில் பொதுமக்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான றிச்சர்ட் ஹொவிட், பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு அச்சம் வெளியிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்டுள்ள இந்தப் பகுதிகளுக்கு முழுமையாகச் சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்போதைக்கு இந்தப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை என்றும், அந்தப் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள கிராமங்களில் ஒருவிதமான அச்ச உணர்வு மக்கள் மத்தியில் காணப்படுவதாகவும் றிச்சர்ட் ஹொவிட் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் பொதுவாக நன்றாக நடக்கின்ற போதிலும், வடக்கில் அவர்கள் அளவுக்கு அதிகமாக நிலைகொண்டிருப்பதாகவும் றிச்சர்ட் ஹொவிட் கூறியுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, பொதுமக்கள் செல்வதற்கு இதுவரை அனுமதிக்கப்படாத பகுதிகளின் எல்லைகள் வரை செல்வதற்கு, சோசலிச ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
போரின் இறுதிக்கட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இந்த பகுதிகளிலேயே சிக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சில இடங்களில் கண்ணிவெடிகள் இருப்பதனாலேயே மக்கள் இன்னமும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், அங்கு சடலங்களோ அல்லது வேறு எதுவுமோ கிடையாது என்றும் சிறிலங்கா அரசின் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரின் தனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை காலமும் போருக்குப் பின்னர் எவரும் நிலக்கண்ணிகளால் இறக்கவில்லை என்றும், அங்கு மக்களை அனுப்புவது ஆபத்து என்றும் கூறியுள்ளார்.