கடந்த 29 ஆம் திகதி கொஸ்லாந்த மீரியபெந்த தோட்டத்தில் நடந்த அனர்த்தத்தினை தொடர்ந்து நாடெங்கிலும் மழை பெய்து வரும் நிலையில் கஹவத்தை எந்தானை தோட்டத்திலும், மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த 30 திகதி இரவு எந்தானை கீழ் பிரிவிலுள்ள சுனாமி வீடமைப்புத் திட்டம், தேயிலைத் தொழிற்சாலை லயம், உத்தியோகத்தர் விடுதிகள் என்பனவற்றில் வசித்து வந்த 35 தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் எந்தானை ந. மீனாட்சியம்மாள் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். இம்மக்களை 31 ஆம் திகதி சந்தித்த கஹவத்தை பிரதேச செயலாளர், மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அவர்களுக்கான நிவாரண பொருடகளை பகிர்ந்ததுடன், முதலாம் திகதி இம்மக்களின் குடியிருப்பு பிரதேசங்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு பரிசோதிக்கும் எனவும் அதன் பின்னரே தங்களால் முடிவுகளை எடுக்க இயலுமாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் இம்மாதம் முதலாம் திகதி ஆய்வுகளை மேற்கொண்ட தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு அதன் முடிவினை கஹவத்தை பிரதேச செயலாளருக்கு அளித்தது. அதன் அடிப்படையில் கடந்த இரண்டாம் திகதி மக்களை மீனாட்சியம்மாள் வித்தியாலயத்தில் சந்தித்த எரிபொருள் மினசக்தி பிரதி அமைச்சர் திரு. பிரேமலால் ஜயசேகர, சபரகமுவ மாகாண சபை உறுப்பினர் திரு. அருண நிலந்த ஜயசிங்ஹ மற்றும் கஹவத்தை பிரதேச செயலாளர் ஆகியோர் பின்வரும் தீர்வுகளை மக்களுக்கு முன்வைத்தனர்.
1. சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் உள்ள தமிழ் குடும்பங்கள் ஏழும் எந்தானை தோட்டம், சமரகந்த பிரிவில் உள்ள மூடப்பட்டுள்ள வைத்தியசாலையில் தங்குதல்.
2. அதே குடியிருப்பில் உள்ள சிங்கள குடும்பங்கள் மூன்றிற்கும் மாற்று இடங்களை வழங்கி வீடுகளை அமைத்துக் கொடுத்தல்.
3. தேயிலைத் தொழிற்சாலை லயத்தில் உள்ளவர்களும் உத்தியோகத்தர் விடுதிகளில் உள்ளவர்களும் மீண்டும் அக்குடியிருப்புக்களுக்கே செல்லுதல். மழை பெய்தால் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும்.
இத் தீர்விற்கு உடன்படாத மக்கள் தற்போது எந்தானை கீழ்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தங்கியுள்ளனர். அம்மக்களை கடந்த மூன்றாம் திகதி சந்தித்த சபரகமுவ மாகாண சபை உறுப்பினர் திரு. க. ராமச்சந்திரன் இவர்களுக்கான தீர்வினை அமைச்சர் ஆறுமுகன் தொன்டமானுடன் தொடர்பு கொண்டு தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளார். இவர்கள் மலையக அரசியல் தலைமைகள் என்போரிடம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றனர்.
1. பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மை இனத்தோருக்கு ஒரு தீர்வும் சிறுபான்மையினருக்கு ஒரு தீர்வுமென தீர்வுகள் வேறுபடுவதேன்?
2. தேயிலைத் தொழிற்சாலை லயத்தில் உள்ளவர்களும் உத்தியோகத்தர் விடுதிகளில் உள்ளவர்களும் மீண்டும் அக்குடியிருப்புக்களுக்கே செல்லச் சொல்லும் இவர்கள் மழை பெய்தால் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்பது ஏன்? அக்குடியிருப்புக்கள் பாதுகாப்பானவை எனின், மழை பெய்யும் போது வெளியேறக் கோருவது எதற்காக? நள்ளிரவில் மழை பெய்யுமெனின் மக்கள் எங்கு செல்வர்?
3. எந்தானை தோட்டத்திற்குச் சொந்தமான தரிசு நிலங்கள் ஏராளமாக இருக்கும் போது, அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ள எமக்கு 15 பர்சஸ் காணி வழங்குவதை தடுக்கும் சக்தி எது?
4. கொஸ்லாந்தை அனர்த்தம் போல் ஒன்று நடந்ததன் பின்னர் எஞ்சியோருக்கு நிவாரணம் வழங்கவா அரசியல்வாதிகள் காத்திருக்கின்றனர்?
இந்நியாயமான கேள்விகளுக்கு விடைதர வேண்டியது உரியவர்களின் கடமை என்பதை இம்மக்கள் சுட்டிக்காட்டினர்.