மனித வாழ்க்கையில் இடம் பெயர்வு என்பது ஆதி காலத்திலிருந்தே தொடர்வதுதான். உணவுதேடி ,வாழ்விட வசதிகள் தேடி , பஞ்ச காலங்களில் பிழைப்புத் தேடி , பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைவாய்ப்புகள் தேடி , இயற்கைப் பேரிடர்கள் மற்றும் போர்ச் சூழலில் உயிரைத் தக்கவைத்துக்கொள்ளப் பாதுகாப்பான இடம் தேடி அவ்வப்போது மக்கள் கூட்டம்கூட்டமாகத் தங்கள் வாழ்விடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். போர்ச்சூழல் காரணமாக , உயிர் வாழ்தலுக்காகவும் தங்கள் அடையாளத்தை இழந்துவிடாதிருப்பதற்காகவும் கடல் கடந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் மொழி , கலாசாரம் , பருவ நிலைகள் முற்றிலும் வேறுபட்ட அந்நிய நாடுகளில் அகதிகளாகச் சென்றுள்ள லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு ஏனைய இடப்பெயர்வுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
1981இல் யாழ் நூலக எரிப்புக்குப் பின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. 1983இல் கொழும்பில் நடந்த இனப் படுகொலையைத் தொடர்ந்து இலங்கைப் படையினருக்கும் ஈழப் போராளிகளுக்குமிடையேயான நேரடி மோதல்களால் ஈழம் போர்க்களமானது. தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவத்தின் வன்முறைகள் , போராளிக் குழுக்களிடையிலான மோதல்கள் , 1987 – 1990 வரை இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிலைகொண்டிருந்தபோது நடந்த மோதல்கள் காரணமாக , லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்தனர்.
“ஈழப் போர் காரணமாக , நாலு பேருக்கு ஒருவர் புலம் பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. எட்டிலிருந்து ஒன்பதரை லட்சம் பேர் வரையிலான ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து கனடா , நோர்வே , ஜேர்மனி , சுவிட்சர்லாந்து , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் , இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசித்து வருகின்றனர். புலம்பெயர்ந்தோர் என்று நாங்கள் சொல்வது அவர்களைத்தான்” என்கிறார் சேரன் (‘காலச்சுவடு’ 102இ ஜூன் 2008.)
ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வுக்கு அரசியல் மட்டுமே காரணமல்ல , “. . . லண்டன் கனா ஐம்பது விழுக்காடும் , அரசியல் ஐம்பது விழுக்காடும் என்பதே மிகச் சரியானது” என்ற கருத்தும் உண்டு (கி.பி.அரவிந்தன் , ‘கனவின் மீதி . . .’ கவிதைத் தொகுப்பின் முன்னுரை). உயர் கல்வி கற்பதற்காகவும் பின்னர் அந்தத் தகுதிக்கேற்ற பணிக்காகவும் யாழ்ப்பாணத் தமிழர்கள் மேற்குலக நாடுகளுக்கு – குறிப்பாக இங்கிலாந்துக்கு – செல்வது தமிழகம் போலவே அங்கும் வழக்கத்தில் இருக்கலாம்தான். அவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலானதாகவே இருக்கக்கூடும். எனவே , எண்பதுகளுக்குப் பின்னான ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வை ‘ஐம்பது விழுக்காடு லண்டன் கனா சார்ந்தது’ என்று சொல்ல இயலாது. உயர் கல்வியையும் பின்னர் அதற்கேற்ற உயர் பதவியையும் நாடிச் செல்கிறவர்கள் கலை – இலக்கியச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. போர்ச் சூழல் காரணமாகப் புலம்பெயர்ந்தவர்களே தங்கள் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ளக் கலை – இலக்கியச் செயல்பாடுகளில் , கடும் நெருக்கடிகளுக்கிடையிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் மனநெருக்கடிகளுக்கு ஒரு வடிகாலாக அச்செயல்பாடுகள் அமைகின்றன என்றும்கூடச் சொல்லலாம்.
m m m
இரண்டாவது ஈழத்துப் போரின்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் திருமாவளவனின் முதல் கவிதைத் தொகுப்பு ‘பனிவயல் உழவு’ (2000). இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் புலம்பெயர்வின் வலி , பால்யகால நினைவுகள் , புலம்பெயர்வு வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் , இழந்த காதலின் நினைவுகள் இடம்பெற்றுள்ள போதிலும் ,
போர்
தவிர்த்து
நீள்பயணம் நடந்து
நெடுநாள் கழிந்தும்
காலடிக்கீழ்
பெருநிழலாய்த்
தொடரும் போரின் – போர்க்கால அவலங்களின் – துயர நினைவுகள் காரணமாக , ராணுவ பயங்கரவாதம் , போராளிகளின் மனிதவுரிமை மீறல்கள் , குழந்தைகளைப் போரில் ஈடுபடுத்துவது குறித்தான கடும் விமர்சனங்களை வெளிப்படுத்தும் கவிதைகள் பலவும் உள்ளன.
அடுத்து , குறுகிய கால இடைவெளியில் வெளிவந்த ‘அஃதே இரவு அஃதே பகல்’ (2002) தொகுப்பிலும் போர்க்காலக் கொடுமைகளின் துயர நினைவுகள் வெளிப்பட்டுள்ள போதிலும் , புகலிட வாழ்க்கையின் அவலங்களே பெருமளவு கவிதைகளுக்கான விஷயங்களாக உள்ளன. புகலிட வாழ்க்கையின் உடல் – மன ரீதியான வலிகளும் , துக்கங்களும் திருமாவளவனின் சுய அனுபவங்களின் வெளிப்பாடாக நின்றுவிடாமல் , புகலிட வாழ்க்கை அனுபவங்களாகவே விரிவுகொள்கின்றன. அதன் காரணமாகவே கவிதைகளாகின்றன. புலம்பெயர் வாழ்வின் அலைந்துழல்வும் வலியும் தனிமையுணர்வும் வாசக மனத்தில் பெரும் துக்கத்தைக் கவியச்செய்யும் வகையில் இத்தனைக் கலைத் திறனுடன் வேறெந்தக் கவிதைத் தொகுப்பிலும் வெளிப்பட்டிருப்பதாகச் சொல்லத் தோன்றவில்லை.
புகலிட வாழ்க்கையின் அலுப்பிலிருந்தும் வலியிலிருந்தும் விடுபடவும் , போலியான மனிதர்கள் மீதான விரக்தி ஏற்படுத்தும் தனிமையிலிருந்து விடுபடவும் கவிஞர் இயல்பாக நாடிச் செல்லும் இயற்கையுடனான மானசீக உரையாடலும் அக்கணங்களில் அவர் அடையும் மனநிறைவும் சில கவிதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.
‘இருள் – யாழி’ (2008) திருமாவளவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இதிலுள்ள கவிதைகளில் ஒன்றைத் தவிர மற்றவை 2004 – 2008 காலகட்டத்தில் எழுதப்பட்டவை.
தொகுப்பின் முதல் கவிதை ‘சுயம்.’
வெய்யில்
நீர் வற்றிக்கொண்டே போகிறது
உச்சியில் இன்னும் மிச்சமாய்
ஓரிரு ஆம்பல் பூக்கள்
தப்புத் தண்ணியில் அள்ளிப் போவதற்கு
பறியடு காத்திருக்கிறான் செம்படவன்
நீரிடைத் துலங்கும் திட்டில்
ஓடு மீன் ஓடி உறுமீன் வருமென
ஒற்றைக்காலில் தவங்கிடக்கிறது கொக்கு
எந்தவிதச் சலனமுமின்றி
வாழுமிக் கணத்தை நீந்திச் சுகிக்கிறது
மீன் குஞ்சு
இன்றைய தன்னுடைய நிலை பற்றி அல்லது தான் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பது பற்றி எழுதியதாக இந்தக் கவிதையைக் கொள்ளலாம். அதேசமயம் இந்தக் கவிதை மனித வாழ்க்கை குறித்த ஒரு கனவாகவும் விரிவுகொள்கிறது. காலத்தின் விரைவில் முதுமை கூடி மரணம் நெருங்குவது தவிர்க்கவியலாதது. மேலும் , சூழல் சார்ந்த பல நெருக்கடிகளும் நம்மை அலைக்கழிக்கக்கூடும். அதுபற்றியெல்லாம் கவலைகொண்டு மனமுடைந்து போகாமல் ,வாழும் இன்றைய வாழ்க்கையை மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்னும் கருத்தியலை அனுபவம் சார்ந்து வெளிப்படுத்தும் கவிதையாக விரிவுகொள்கிறது ‘சுயம்.’ அதே சமயம்இ கடந்தகால வாழ்க்கை அவலங்களையும் , நெடுநாள் கடந்துவிட்ட புகலிடவாழ்விலும் ‘காலடிக்கீழ்ஃபெருநிழலாய்த் தொடர்கிற’ போரின் கொடிய நினைவுகளையும் புறமொதுக்கி இன்றைய வாழ்க்கையை அனுபவிக்க விரும்பிய போதிலும் , ‘மனசு மகிழ்ந்து விரியும் கணங்களில்ஃ சடுதியில் புகுந்து அழித்துவிட்டுப் போகிறது’ கடந்தகாலத் துயரங்களின் கொடு நினைவு. இத்தகைய கனவுகளையும் மன அலைக்கழிப்பையும் வெளிப்படுத்தும் கவிதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. இத்தகு கவிதைகளே – ‘சுயம்’இ ‘மரம்’ , ‘இஃதோர் இனிய மாலை’ , ‘முரண்’ , ‘கால் முளைத்த மரம்’ ,’அவர்கள் ஒரு கவிஞனைக் கொன்றனர்’ – திருமாவளவனின் முந்தைய கவிதைத் தொகுப்புகளிலிருந்து இத்தொகுப்பை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றன.
இன்னொரு முக்கியமான அம்சத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்க் கவிஞர்களிடம் – பெரும்பாலும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் – பால்ய கால நினைவுகளுடன் சொந்த மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுவதைக் காணலாம். அது இயல்பானதே. ஆனால் திருமாவளவன் கவிதைகளில் ஒன்றோ , இரண்டோ சந்தர்ப்பங்களில்தான் – அதுவும் ஆரம்பகால கவிதையில்தான் – அத்தகைய விருப்பம் வெளிப்பட்டுள்ளது.
ஈழத்தில் போர்ச்சூழல் மறைந்து சமாதானம் ஏற்பட்டாலும்கூட ஊர் திரும்புதல் இனி சாத்தியமல்ல என்னும் கசப்பான யதார்த்தத்தை அவர் உணர்ந்துகொண்டிருப்பதையே இது காட்டுகிறது. ஈழத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் போரின் நினைவுமட்டுமே – அதன் பேரழிவுகள் மட்டுமே – அவரை அலைக்கழிப்பதை , திருமாவளவனின் கவிதைகளைக் காலவரிசையில் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. இரண்டாவது தொகுப்பில் , பெருமளவிலான கவிதைகளில் புலம்பெயர் வாழ்வின் அவலத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்திய அவர் , ‘இருள் – யாழி’ கவிதைத் தொகுப்பில் அதனையும் தவிர்த்துவிடுகிறார். என்றபோதிலும்இ புலம்பெயர் சூழலில் அவரால் முழுமையாக ஒன்றிப்போய்விடவும் இயலவில்லை. இந்த அந்தர நிலையே – அந்நியமாகிப்போன உணர்வே – இத்தொகுப்பின் பல கவிதைகளில் வெளிப்படக் காணலாம்.
திருமாவளவனின் முதலிரு தொகுப்புகளுக்கு மதிப்புரை எழுதிய வெங்கட் சாமிநாதன் பின்வருமாறு கூறுகிறார்: “திருமாவளவனின் கவிதை நேராகப் பேசுகிறது. அலங்கார ஜோடனைகள் ஏதுமற்றுப் பேசுகிறது. சில வேளைகளில் அது படிமமாகப் பேசுகிறது என்று சொல்லக்கூடும். அப்போதும் அப்படிமங்கள் பார்வை அனுபவங்களிலிருந்து ,உண்மையின் தாக்கத்திலிருந்து பேசுகிறது. படிமங்களும் அனுபவத்தில் இருந்தே பிறக்கின்றன” (‘புதுசும் கொஞ்சம் பழசுமாக’இ பக். 139). இத்தகைய படிமங்களை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளிலும் காணலாம். பெரும்பாலும் அவை காட்சிப் படிமங்கள்; அரூபத்தன்மை கொண்டவை வெகு அபூர்வமே.
அந்தியில் காணும் சூரியாஸ்தமனம் திருமாவளவனுக்கு – அவரது மனவுணர்வுகளுக்கேற்ப –
இனந் தெரியாத நபர்களால்
சுட்டுக் கொல்லப்பட்ட உடலொன்றின்
இறுதிக் கணமென அடங்குகிறது
சூரியனின் கடைசி மூச்சு
என்றவகையிலேயே படிமமாகக் காட்சிப்படுகிறது.
ஈழப்போரின் கொடுநினைவு புலம்பெயர்ந்து வாழும் தேசத்திலும் ‘காலத்துய’ராக நீடித்து ,
துயரக் குரங்கு துரத்திப்
பின்தொடர்ந்து
அப்பிப் பிடித்து
இறகிறாய்ப் பிடுங்கிச் சுகிக்கிறது.
காலைக் கருக்கலில்இ சீ.என். கோபுர நுனியில் ஒளிமயங்கித் தெரியும் நிலவு திருமாவளவனுக்கு ,
செவ்வரத்தம் பூச்சூட்டி
மஞ்சள் குங்குமம் சாத்தி
தலையில் தேசிக்காய் குத்திவைத்த
ஆலடி வைரவர் சூலம்
போலவே காட்சியளிக்கிறது. இவையெல்லாம் கவித்துவச் சாமர்த்தியத்தை வாசகர் மேல் திணிப்பதற்காக வலிந்து புனையப்பட்ட நவீனக் கவிதையணிகள் அல்ல. திருமாவளவன் என்னும் கவிஞனின் வாழ்க்கையனுபவங்களின் சாராம்சத்திலிருந்து இயல்பாக உருப்பெற்ற காட்சிப் படிமங்கள்.
சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்டு , புகலிடத்திலும் முற்றாக வேர் பாவ முடியாமல்இ பாவனைகளுடனான சகமனிதர்களுடனும் இணையவியலாமல் ஓர் அந்நியனாகத் தனித்து நிற்கும் ஒரு கலைஞனுக்கு – கவிஞனுக்கு – இயற்கைதானே துணையாக , ஆறுதலாக இருக்கவியலும். திருமாவளவனுக்கும் சூரியனும் நிலவும் விண்மீன்களும் ஆறும் மரங்களும் பறவைகளும்தான் அவரது அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்வதற்குகந்த நண்பர்களாகின்றன. அவற்றோடு அவருக்கு இணக்கமான மானசீக உரையாடலை நிகழ்த்த முடிகிறது. கொந்தளித்தவையும் அவரது மனமும் அக்கணங்களில் அமைதிகொள்கிறது; புத்துயிர்ப்பு பெறுகிறார் கவிஞர்.
டொன் ஆற்றங்கரை. சிறு மழைக்கான சாத்தியங்களுடன் கூடிய மாலைப் பொழுது. உடல் மொழியால் பறவைகளுடன் மரமும் , அதனுடன் கிசுகிசுக் குரலில் பறவைகளும் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறார் கவிஞர். அவருள் இளமைக்கால நினைவுகள் கிளர்கின்றன. பறவைகளிடம் பாடம் கேட்கிறார். முயன்றால் முடியாததும் உண்டோ? மரங்களின் மொழி வசப்பட , தன் பிரியத்தைச் சொல்கிறார். மலர்களையும் தேனையும் சொரிகிறது மரம். மெல்ல அவரும் ஒரு மரமாகி மலர்கிறார். ஒரு நாள் அவர் ,
காலையில் எழுந்தபோது
மொட்டவிழ்த்திருந்தன
மரங்கள்
பூக்களில் தேன்சிட்டுக்கள்
இனி
தொடரும் பறவைகள் பாடல்.
‘விளக்கத்திற்கு அப்பாற்பட்ட வியப்பை’ ஏற்படுத்தும் இந்தக் ‘கால் முளைத்த மரம்’ கவிதைஇ ‘மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்’ என்று சுந்தர ராமசாமி கண்ட கனவின் இன்னொரு வகையான வெளிப்பாடு. “இன்றுவரையிலும் மகிழ்வாய் ஒரு கவிதை வாய்க்கவில்லை என்பதுகூட வருத்தந்தான்” (‘அஃதே இரவு அஃதே பகல்’இ பக். 121) என்ற திருமாவளவனின் கவலையைப் போக்கும் கவிதை இது.
கவிதையின் அடிப்படைக் குணாம்சங்களில் முதன்மையானதாக நான் கருதுவது , அது கவிஞனின் உள்மனக் குரலாக வெளிப்பட வேண்டும் என்பதைத்தான். உள்மனக் குரல் கவிஞனின் நம்பிக்கை சார்ந்தது – அவனளவில் உண்மையானது என்னும் நம்பிக்கை சார்ந்தது. அதில் வாசகனுக்கு உடன்பாடில்லாமலிருக்கலாம். ஆனாலும் கவிஞனின் நேர்மையில் நம்பிக்கைகொண்டு அத்தகைய கவிதையுடன் வாசகனால் மனம் திறந்த உரையாடலை நிகழ்த்த முடியும். அதேசமயம் அந்தக் குரல் மோஸ்தர் சார்ந்தது – போலியானது என்றால் , கவிதையின் பிற அம்சங்களின் சிறப்பினால் கூட அந்தக் கவிதையைக் காப்பாற்றிவிட இயலாது. தேர்ந்த வாசகனால் கவிதையின் உண்மையான குரலை அடையாளம் கண்டுகொள்ளவியலும்.
திருமாவளவனின் கவிதைகள் அவரது உள்மனதின் குரலாக இருப்பதால் அவர் நம்பும் உண்மையின் குரலாக வெளிப்படுகின்றன. அவரது கருத்துடன் முரண்படும் வாசகர்களும் அவரது கவிதைகளுடன் நேசம்கொள்ள வைப்பது கவிதையில் வெளிப்படும் இந்த அம்சம்தான். கூடவே அவருக்கான மொழியும் , பார்வையும்இ தொனியும் சிறப்பாக அமைவதால் அவை கவனிப்புக்குரிய கவிதைகளாகின்றன.
m m m
தொண்ணூறுகளுக்குப் பின்னர் எழுதத் தொடங்கிய புதுக்கவிஞர்கள் பலரின் கவிதைகளில் – தமிழகத்திலிருந்து எழுதுகிறவர்களைவிடவும் அதிகளவில் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளில் – வரியமைப்பில் , வரியை மடக்கிப் போடுவதில் எவ்விதமான ஒழுங்கமைவும் கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. யாப்புக் கவிதைகளின் வரியமைப்பு , அவை எழுதப்படும் யாப்பு வகைமையின் இலக்கணம் சார்ந்தது; பொருளமைதிக்கு அங்கு இடமில்லை. இன்றைய சுதந்திரமான கவிதைகளில் வரியமைப்பு கவிஞனின் மனம் சார்ந்ததாக மட்டுமே அமைகிறது. அதேசமயம் பொருளமைதியும் மௌன இடைவெளியும் கொண்டதாக கவிதைவரி அமைவதே இயல்பாக இருத்தல் வேண்டும். ஆனால் , பலரும் உரைநடை போன்ற அச்சமைப்பைத் தவிர்க்கவே வரிகளைப் பிரித்துப் போடுவதாகத் தோன்றுகிறது. இதனால் கவிதை வாசிப்பில் நெருடல் ஏற்படுவது தவிர்க்கவியலாததாகிவிடுகிறது.
திருமாவளவனின் முதல் தொகுப்பில் கவிதைகளின் வரியமைப்பில் போதிய கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டாவது தொகுப்பிலுள்ள குறிப்பிடத் தகுந்த கவிதைகளில் வரியமைப்பு பொருளமைதிகொண்டதாக அமைந்துள்ளது. ‘இருள் – யாழி’ தொகுப்பில் வரியமைப்பில் கவனம் கொண்டிருப்பதை உணர முடிகிறது. இதனால் கவிதைகளும் முன்னிரு தொகுப்புகளிலிருந்தும் வித்தியாசமான வடிவ அமைதிகொண்டிருப்பதை நுட்பமான வாசிப்பில் புரிந்துகொள்ளலாம்.
அதுபோல் கவிதையமைப்பிலும் திருமாவளவனிடம் மாற்றத்தைக் காணமுடிகிறது. முதல் தொகுப்பிலுள்ளவை பெரும்பாலும் ஈழத்துக் கவிதைப் போக்கின் பொதுப்பண்பான நெகிழ்வுத்தன்மை கொண்டிருக்கின்றன. இரண்டாவது தொகுப்பில் , கவிதையமைப்பில் செறிவு கூடியிருப்பதைப் பல கவிதைகளில் காணலாம். அந்தத் தொகுப்புக்கு மதிப்புரை எழுதிய க. மோகனரங்கன்இ “இருப்பிற்கும் இறந்தகாலத்திற்கும் இடையிலான இந்தத் தொலைவையும் ,துயரையும் சொற்களின் மூலமாகக் கடக்க முயலும் திருமாவளவனின் கவிதைகள் அடங்கிய குரலிலும் கூடுமானவரை சிக்கனமாகவும் நம்முடன் உரையாட எத்தனிக்கின்றன” என்றும் “நிலம்’ ஒரு சொல்கூட மிகையின்றி எழுதப்பட்டிருக்கும் கவிதை” ( ‘காலச்சுவடு’இ மார்ச் – ஏப்ரல் 2004) என்றும் கூறுவது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
‘இருள் – யாழி’ தொகுப்பிலுள்ள கவிதைகள் பெரும்பாலும் சொற்களின் மிகையின்றிச் செறிவுடன் அமைந்துள்ளன (விதிவிலக்குகள்: ‘போர் அரசன் அல்லது பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதை’இ ‘குருதியில் நனைந்த கவிதை’). கூடவே பன்முகத்தன்மை கொண்டனவாகவும் உள்ளன. உதாரணத்துக்கு , ‘வானம் பார்த்த பூமி’ கவிதை. இதை நேரடியாகவே உள்வாங்கிக்கொண்டாலும் , பாலையின் வெம்மை வாசக மனத்துள் கொடுந்தகிப்பை உணர்த்தும் வகையில் பதிந்துவிடுகிறது. சமகால ஈழத்தின் பின்னணியை மனத்தில்கொண்டு இந்தக் கவிதையை வாசிக்கும்போது – மழை , வானம் பார்த்த பூமி , முளைவிடு பயிர் , சாத்திரிகள் , தீர்க்கதரிசிகள் ,தீக்கங்குகள் , தும்பிகள் போன்ற வார்த்தைகள் குறியீடுகளாக விரிவுகொண்டு கவிதை இன்னொரு தளத்தில் நகர்கிறது. ‘இருள் – யாழி’ கவிதையும் இத்தன்மையதே.
m m m
அரச பயங்கரவாதத்துக்கெதிரான தவிர்க்கவியலாத ஆயுதம் தாங்கிய போராட்டத்திலும் அறவிழுமியங்களை வலியுறுத்தும் வகையில் போராளிகளின் செயல்பாட்டை விமர்சனத்துக்குள்ளாக்குகிறார் சேரன். இதிலிருந்தும் விலகிநின்று – சருகுகள் , இலைகள் , தளிர்கள் என்ற பேதமின்றி அலைத்துதிர்த்துப் பெரு மரங்களையும் வேரோடு சாய்க்கும் சூறை போன்ற – போர்ச்சூழலையே கடும் விமர்சனத்துக்குள்ளாக்குகிறார் திருமாவளவன். போர்ச்சூழலில் அப்பாவி மக்களின் படுகொலைகள் , குழந்தைகளும் பெண்களும் காணாமல் போவது , சிறார்கள் தற்கொலைப் போராளிகளாக்கப்படுவது போன்றவை திருமாவளவனைப் பெரிதும் துக்கத்துக்கும் கோபத்துக்குமுள்ளாக்குவதை நாம் புரிந்துகொள்ளவியலும். ஆனால் , அரச பயங்கரவாதத்தைவிடவும் , அதை எதிர்த்துப் போரிடும் போராளிகளின் அத்துமீறல்களின் மீதான கடும் விமர்சனங்களே திருமாவளவன் கவிதைகளில் அதிகமும் வெளிப்படுகின்றன. எதிரிகளினுடையவற்றைவிடவும் நம்பிக்கைக்குரியவர்களின் செயல்பாடுகள் திருமாவளவனைப் பெருமளவில் பாதித்திருக்கக்கூடும்; தன் படையே தன்னை வெட்டிச் சாய்வது அவரைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கக்கூடும் என்ற வகையில் பார்த்தாலும் , ஓரிரு கவிதைகளில் அவரது விமர்சனங்கள் கவிதையின் விமர்சனக் குரலை மீறிவிடுவதையும் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக , இத்தொகுப்பில் ‘போர் அரசன் அல்லது பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதை’ என்னும் கவிதை.
ஈழப் போர்க் ‘கருத்தியல்’ கவிதைகளும் புலி எதிர்ப்புக் ‘கருத்தியல்’ கவிதைகளும் , ஈழத்தில் “சமாதானம் ஏற்பட்டு மாற்றங்கள் நிகழ்ந்து புலி எதிர்ப்பும் தேவையில்லாத சூழ்நிலையில்” “வெறும் ஆவணங்களாய்ப் போகும்” என்ற வகையிலான விமர்சனமும் உண்டு (மு. பொன்னம்பலம்இ ‘விசாரம்’இ பக். 105). ஒருவகையில் இது சரியான கணிப்பாகவும் தோன்றக்கூடியதுதான். அத்தகைய கவிதைகளின் இருப்பு காலம் சார்ந்ததுதான் என்றாலும் , கவிதை என்ற வகைமையில் அல்லாமல் ‘ஆவணங்கள்’ என்ற வகையில் அவற்றுக்கொரு முக்கியத்துவமும் உண்டு. பாரதி தமிழுக்குத் தந்துவிட்டுப்போன சொத்துகளில் முக்கியமானவையாகப் புதுமைப்பித்தன் குறிப்பிடுவது ‘ஞானரதம்’ , ‘குயில்பாட்டு’ , ‘பாஞ்சாலி சபதம்’ ஆகியவற்றைத்தான்; பாரதியின் சமகாலத்திலும் , தொடர்ந்த விடுதலைப் போராட்டக் காலத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தேசியப் பாடல்களை அல்ல. அதேசமயம் , பாரதி என்னும் பெருங் கவிஞனின் ஆளுமையை , அவரது தேசியம் – தெய்வீகம் – சமூகம் பற்றிய பாடல்களைப் புறமொதுக்கிவிட்டு முழுமையாகப் புரிந்துகொள்ளவும் இயலாது.
மேலும் , போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் , குடும்பச் சிதைவுகள் , வன்கொடுமைகள் காரணமான துக்கம் எல்லாக் காலத்துக்கும் பொதுவானதுதான். இழப்புகளின் துக்கம் காலகாலமாகத் தொடர்ந்து வருவதுதான். அத்தகைய இழப்பையும் வலியையும் வெளிப்படுத்தும் கவிதைகள் எக்காலத்திலும் வாசக மனத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தவே செய்யும். உதாரணத்துக்கு , பாரி மகளிரின் ‘அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்’ எனத் தொடங்கும் சங்கக் கவிதை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றைய வாசக மனத்திலும் இழப்பின் துக்கம் பிசிறில்லாமல் படியத்தானே செய்கிறது. போர்ச்சூழலின் அவலத்தைச் சித்திரிக்கும் திருமாவளவனின் கவிதைகளும் இத்தகையனவே.
m m m
சிறிது காலம் முன்புவரை தமிழகத்தைச் சேர்ந்த விமர்சகர்களில் பெரும்பாலானோரும் தமிழ்க் கவிதையின் பரப்பைத் தமிழக எல்லைகளுக்குள் வரையறுத்து வைத்திருந்தனர். இன்று நிலைமை மாறிவருகிறது. தமிழகம் ,இந்தியா மட்டுமல்லாமல் , இலங்கை ,மலேசியாஇ சிங்கப்பூர் மற்றும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலக நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ்க் கவிதைகளையும் உள்ளடக்கியே தமிழ்க் கவிதையின் போக்கு குறித்துப் பேசும் நிலை உருவாகிவருகிறது. திருமாவளவனின் கவிதைகளையும் உலகத் தமிழ்க் கவிதைப் பரப்பில் வைத்தே அணுக வேண்டும்.
திருமாவளவனின் மூன்று தொகுப்பிலுள்ள கவிதைகளையும் ஒருசேரப் படித்துப் பார்க்கும்போது , அவர் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து கொள்ளவில்லை – தேங்கிப்போய்விடவில்லை என்பதைத் தெளிவாகவே அறிய முடிகிறது. கவிதையமைப்பிலும் மொழி நடையிலும் வாழ்க்கை குறித்தான பார்வையிலும் அவர் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருவதையும் உணர முடிகிறது. எல்லாவற்றையும் அவர் ஒரு கவியின் மன நிலையிலேயே அணுகுவதை அவரது கவிதைகளினூடான பயணத்தில் புரிந்துகொள்ள முடிகிறது. கவிதை எழுதுகிறவனுக்கும் கவிஞனுக்குமிடையேயான முதன்மையான வேறுபாடு இதுவெனக் கருதுகிறேன். அவ்வகையில் எனது வாசிப்பனுபவத்தில் இன்றைய முக்கியமான நவீனத் தமிழ்க் கவிஞர்களுள் ஒருவராகத் திருமாவளவனையும் தயக்கமின்றிக் குறிப்பிட முடிகிறது.