அதிமுகவுக்குள் மோதல் நடக்கிறது.ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மோதல் வெடித்தது. அதிமுக முன்னாள் எம்.பி அன்வர்ராஜாவை முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அடிக்கப்பாய்ந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இவை அனைத்தும் ஒரு அறைக்குள் நடந்தது. உண்மையில் அதிமுகவில் மோதல் உண்மையாக நடந்திருந்தால் அதன் தெறிப்புகள் வெளியில் தெரிந்திருக்கும். பொது வெளியிலும் பேசப்பட்டிருக்கும் ஆனால் அப்படி எதுவும் பேசப்படவில்லை.
அதிமுகவில் பிளவு இருப்பது உண்மைதான். ஓபிஎஸ் கையில் சட்டரீதியாக கட்சியும், எடப்பாடி பழனிசாமி கையில் ஆட்சியும் இருந்தது. இப்போது அதிமுக ஆட்சியில் இல்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி பலவீனமாகி இருக்கிறார். கட்சிக்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி ஒருங்கிணைப்புக் குழு என்ற குழுவிடம் இருந்து பொதுச் செயலாளர் என்ற பதவி மூலம் தன் கரத்தை வலுப்படுத்த விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமி கையிலும் கட்சியின் மாவட்ட கிளைக்கழக உறுப்பினர்களின் ஆதரவு பெரும்பாலும் எடப்பாடிக்கு இருக்கும் நிலையில் உட்கட்சி தேர்தலை நடத்தினால் முழுமையாக கட்சி எடப்பாடி பழனிசாமி கைக்குச் சென்று விடும். நாம் இன்னும் பலவீனமாகி விடுவோம் என நினைக்கிறார். அதனால் ஒருங்கிணைப்புக் குழுவே கட்சியை நடத்தட்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறியிருக்கிறார்கள்.
அதே போன்று அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் சமீபத்தில் இறந்தார். அந்த பதவியும் காலியாக இருக்கிறது.அதற்கும் சேர்த்து தேர்தல் நடத்துவது என்றும் பேசப்பட்டது. மேலும் வன்னியர் இட ஒதுக்கீடே தோல்விக்கு காரணம் என்று அன்வர் ராஜா சொன்னதாகவும் அதற்கு முன்னாள் அமைச்சரும் வன்னியர் சாதி பிரமுகருமான சி.வி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளரும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமான சோழவந்தான் மாணிக்கம் என்ற முக்கிய பிரமுகர் பாஜகவில் இணைந்தார்.
ஒருங்கிணைப்புக் குழு தொடர்பாக அதிமுக கட்சி அலுவலகத்திற்குள் ஆலோசனை நடந்து கொண்டிருந்த போதே அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜகவில் இணைந்துள்ளார். பொதுவாக கூட்டணிக் கட்சிகளில் உள்ளவர்களை சக கட்சிகள் பிரிந்து வந்து இணைகிறோம் என்றாலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் அது கூட்டணி தர்மம் ஆனால், பாஜக அதை முதன் முதலாக உடைத்துள்ளது.
பாஜக கட்டுப்பாட்டில் இருந்து சுயமாக அதிமுக செயல்பட விரும்பினால் அதை உடைப்போம் என்பதுதான் பாஜக அதிமுகவுக்குச் சொன்ன செய்தி!