அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா.
அதிமுகவில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இருப்பவர் ராம்நாதபுரத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா. 2001- 2006 வரை தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இருந்தவர். சசிகலாவின் ஆதரவாளராக இருந்த அன்வர் ராஜா, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பிறகு, எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்துவந்தார். வி.கே. சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு அவ்வப்போது சசிகலாவுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்துவந்தார்.
இவர் சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவோடு வைத்துக் கொண்ட கூட்டணிதான் அதிமுக தோல்விக்குக் காரணம் என்றார். உடனே அவரை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் ஒருமையில் திட்டியதாக தெரிகிறது. பாஜகவை சகித்துக் கொண்டு அதிமுக அரசியல் செய்வதை விரும்பாத அன்வர் ராஜா அடிக்கடி ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரையுமே விமர்சித்தார். சமீபத்தில் அவர் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது.அந்த ஆடியோவிலும் எடப்பாடி பழனிசாமி பற்றி ஒருமையில் பேசியிருந்தார்.
இதனையடுத்து நேற்று இரவு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தெரிவு செய்யப்பட்டார். அன்வர் ராஜா நீக்கபப்ட்டதும்,,அதிமுகவில் உள்ள முஸ்லீம்களை அமைதிப்படுத்தவுமே தமிழ் மகன் உசேனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளார்கள். இவர்களை பொதுக்குழு உறுப்பினர்களே தெரிவு செய்வார்கள். இனி அந்த விதி மாற்றப்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை முடிவு செய்வார்கள் என்று விதிகள் மாற்றப்பட்டுள்ளன.