16.03.2009
ராஜித சேனாரட்ன, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் அடங்கலாக அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை குமார் ரூபசிங்கவே செய்கிறார். எனவே, இவர்கள் மூலம் அமெரிக்க உபாயங்களே செயற்படுத்தப்படப் போகின்றன என்பது தெளிவாகிறது.
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் அந்நிலையத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் கருத்து வெளியிடும் போதே விஜித ஹேரத் இவ்வாறு கூறியிருக்கிறார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
ஏற்கெனவே, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா போன்ற வெளிநாடுகளின் தலையீடுகள் இலங்கைக்கு வந்து விட்டன. அதை உறுதிப்படுத்துவது போல பிரிட்டன் எம்.பி.யான லியாம் பொக்ஸ் இலங்கை வந்து அவரது 2 ஆவது அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே, லியாம் பொக்ஸ் முதல் அத்தியாயமாக சந்திரிகா குமாரதுங்கவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தேசிய பிரச்சினையில் தலையிட்டிருந்தார். அந்த வகையில் லியாம் பொக்ஸுக்கு இது இலங்கையில் 2 ஆவது அத்தியாயமாகும்.
இதேநேரம், தனது தேவைக்காக இலங்கை வரவில்லையெனவும் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு வந்ததாகவும் லியாம் பொக்ஸ் கூறியிருக்கிறார். எனவே, அரசாங்கமே வெளிநாட்டுப் பிரதிநிதிகளை நாட்டுக்கு அழைத்து தலையீடுகளுக்கும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருவது தெளிவாகிறது.
இதற்கு முன்னர் பிரிட்டன் அரசாங்கத்தினால் இலங்கைக்கென பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்ட போது இலங்கை அரசாங்கம் அதை எதிர்த்திருந்தது. இது தொடர்பாக பிரிட்டன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் பேசியது மட்டுமன்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் 2 முறைகள் ஜனாதிபதியை சந்தித்துப் பேசி ஏற்படுத்தப்பட்ட இணக்கத்துக்கு அமையே அந்தப் பிரதிநிதி நியமிக்கப்பட்டதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
இதேபோல் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பில் எப்படி செயற்படுகிறது என்பது குறித்து சில உபாயங்களை தம்வசம் கொண்டிருக்கின்றன. 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் அந்நாட்டின் யுத்த, அரசியல் தேவைகளுக்கு அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பது குறித்த உபாய மார்க்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
அத்துடன், இந்து சமுத்திரத்தில் சீனாவின் பாதுகாப்பு வலைப் பின்னலுக்கு முகம் கொடுக்க அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றியும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
இதேநேரம், கடந்த 6 ஆம் திகதி கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் குமார் ரூபசிங்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் இலங்கைப் பிரச்சினைக்கு முதலில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென்றும் அதன் பின்னர் திஸ்ஸ விதாரண குழுவின் தீர்வு யோசனையை செயற்படுத்த வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
ஜனாதிபபதி மற்றும் அரசாங்கம் தெரிந்திருக்கவே இந்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. படையினரின் வெற்றிகளை பிரிவினைவாதத்துக்கு காட்டிக் கொடுக்க இடமளிக்க முடியாது. பிரினைவாதத்துக்கு கப்பம் வழங்கும் இந்த முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். இதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.