போபால் மக்கள் இருபதாயிரம் பேரைக் கொன்ற அமெரிக்க முதலாளி வாரன் ஆன்டர்சனை தனி விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி. இரு தசாப்தங்களுக்குப் பின்னரும் இன்று வரை போபால் மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் ஏகாதிபத்திய நாடுகள் நிறுவ இருக்கும் அணு உலைகளில் விபத்து நடந்தால் அதிலிருந்து பன்னாட்டு முதலாளிகளைப் பாதுகாக்கும் வகையில் அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதாவை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. காங்கிரஸ் அரசு இந்தியாவின் மத வெறிக்கட்சியான பாரதீய ஜனாதா இந்த மசோதாவை ஆதரித்து நிற்க இந்த இரண்டு மக்கள் விரோதிகளின் உண்மை முகங்களையும் புரிந்து கொள்ளும் நல்வாய்ப்பாக இதை நாம் காணலாம்.
நஷ்டஈட்டு தொகையை | 500 கோடியிலிருந்து | 1500 கோடியாக அதிகரிக்க திருத்தப்பட்ட மசோதாவில் வழிகாணப்பட்டுள்ளது. அணு உலைகளில் விபத்து அல்லது கசிவு ஏற்படும்போது நஷ்டஈடு வழங்குவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமான பின்னரே அன்னிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அணு மின் உற்பத்தி திட்டங்களைத் தொடங்க அனுமதி கிடைக்கும். அமெரிக்க– இந்திய அணுசக்தி உடன்பாட்டைத் தொடர்ந்து இந்தியாவில் அணு உலைகளை அமைக்க பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் அணு உலைகளை அமைக்கும்போது விபத்து நேரிட்டால் நஷ்டஈடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் கடந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. விபத்து நேரிடும் போது ரூ. 500 கோடி நஷ்டஈடு அளிக்க இந்த சட்ட மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த நஷ்டஈட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும் என்று பாஜக, இடதுசாரி கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து எதிர்க்கட்சிகளுடன் ஆலோசித்து சட்ட மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய எல்லா சந்தேகங்களும் விவாதிக்கப்பட்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று நிலைக்குழு தலைவர் சுப்பிராமி ரெட்டி தில்லியில் நிருபர்களிடம் கூறினார். 24 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்பட அனைத்து தரப்பினரின் யோசனைகளும் விவாதிக்கப்பட்டன என்றார் அவர். நஷ்டஈட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அதுபற்றி நான் இப்போது விரிவாக கூற முடியாது என்றார். னாலும், திருத்தப்பட்ட அணு விபத்து நஷ்டஈட்டு மசோதாவில், நஷ்டஈட்டுத் தொகை | 500 கோடியிலிருந்து | 1500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. திருத்தப்பட்ட அணு விபத்து சட்ட மசோதாவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது. இந்த சட்ட மசோதா குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் இணக்கமான சூழல் உருவானதாகக் கூறப்படுகிறது. மசோதாவில் பல்வேறு அம்சங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாங்கள் தெரிவித்த நான்கைந்து யோசனைகளை ஏற்றுக்கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. அதுபோல் நஷ்டஈட்டு ஆணையருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் பாஜக முன்வைத்துள்ளது. பாஜக ஆதரவு அளித்துள்ளதால் சட்ட மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. ஆனால் இடதுசாரி கட்சிகள் இந்த மசோதாவுக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனால் பாஜக ஆதரவு அளிக்கும்பட்சத்தில் மசோதாவை நிறைவேற்ற பகுஜன் சமாஜ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் போன்ற கட்சிகளின் ஆதரவு காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தேவைப்படாது. அணுஉலை தொழில்நுட்ப மறுபயன்பாட்டுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் அணுவிபத்து மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு அவசரம் காட்டி வருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார். அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரும்போது, இந்த மசோதாவை அவருக்குப் பரிசாக அளிக்க மன்மோகன் சிங் அரசு திட்டமிட்டுள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பினார். கனநீர் தொழில்நுட்பம் உள்பட அனைத்து தொழில்நுட்பத்தையும் மறுசுழற்சிக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதிக்க மறுக்கிறது என்று அவர் கூறினார். அணு விபத்து நஷ்டஈட்டு சட்ட மசோதா விஷயத்தில் பாஜகவுடன் இணைந்து செல்லமாட்டோம் என்றார் அவர். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலை உபகரணங்களுக்கு இந்த மசோதாவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தரமற்ற உபகரணங்களாலும் விபத்து நேரிடும் சந்தர்ப்பம் உண்டு. எனவே உபகரணங்களை வழங்குபவர்களையும் இந்த சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார் அவர். ராணுவ உபயோகத்துக்கான அணு உலைகளையும் இந்த சட்டத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்றார் அவர். இந்நிலையில் அணு விபத்து நஷ்டஈட்டு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. அணுசக்தி துறையில் அன்னிய முதலீட்டை நாம் பெற வேண்டுமானால் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது மிக அவசியம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி தில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.