இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக மத்திய அரசு பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் எப்போது செல்லவிருக்கிறது என்ற தெளிவான தகவலை ஜூலை 7 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் கெடு விதித்துள்ளனர்.
அணு சக்தி ஒப்பந்தம் மீதான தங்களின் நிலைப்பாட்டை மக்களுக்கு விளக்கும் விதமாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் ஜூலை 14 ஆம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்றும் இடதுசாரிகள் தீர்மானித்து அறிவித்துள்ளனர்.
மத்திய அரசிற்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து முடிவு செய்வதற்காக டெல்லியில் நடந்த இடதுசாரிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியார்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், “தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக பன்னாட்டு அணு சக்தி முகமையிடம் அரசு எப்போது செல்லவிருக்கிறது என்று அரசிடம் கேட்கவிருக்கிறோம். அந்தத் தேதியை ஜூலை 7 க்குள் அரசு தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து இடதுசாரிக் கட்சிகளின் பொதுச் செயலர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பவிருக்கிறோம்” என்றார்.
விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரகாஷ் காரத், இதைக் கண்டித்தும் அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் தங்களின் போராட்டத்தை மக்களுக்கு விளக்கும் வகையிலும் ஜூலை 14 ஆம் தேதி முதல் நாடு தழுவிய இயக்கம் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் நடத்தப்படும் என்றார்.