இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த நிறைவேற காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கூற முடியாது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் அனைத்தின் ஆதரவும் கிடைக்கும் என்று இந்தியா நம்புவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர் குழு ஆகஸ்ட் முதல் தேதி கூடி விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதற்கு முன்பு அதுபற்றிக் கருத்துக் கூற முடியாது என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.
பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் கண்காணிப்பு ஒப்பந்த இறுதி செய்யப்பட்ட பிறகு, அணு தொழில்நுட்பம் வழங்கு நாடுகள் குழுவுடன் பேச்சு நடத்தப்படும், இந்த நடவடிக்கைகள் எப்போது முடியும் என்பதற்குச் சரியான காலக்கெடு எதையும் நிர்ணயிக்க முடியாது என்றார் அவர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றிபெற்றுள்ளதால் அணு சக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படுமா என்று கேட்டதற்கு, “துரிதகதி அல்லது மந்தகதி என்று இதில் ஒன்றுமில்லை. நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார் அவர்.