ஐ.நா. வின் பொருளாதாரத் தடையையும், அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி அணு உலையில் எரிபொருளை நிரப்பத் தொடங்கிவிட்டது ஈரான். அணு உலையில் எரிபொருளை நிரப்பும் பணியில் ரஷிய மற்றும் ஈரான் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இப் பணி சனிக்கிழமை காலை தொடங்கியது. யுரேனியம் சேமிப்புக் கிடங்கில் இருந்து 80 டன் யுரேனியத்தை பாதுகாப்பாக கொண்டு வந்து அணு உலையில் நிரப்புகின்றனர். இந்த பணி இன்னும் 10 நாள்களுக்கு நடைபெறும். யுரேனியத்தை அணு உலையில் நிரப்பத் தொடங்கியுள்ள இந்த நாள் தங்களது நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று ஈரானின் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அணு திட்டங்களை வெற்றியுடன் கையாளும் திறமை ஈரானுக்கு உண்டு என்பது சர்வதேச அரங்கில் நிரூபித்துக்காட்டப்பட்டுள்ளது என்றும் அவர்கள் பெருமிதத்துடன் கூறியுள்ளனர். ஈரானின் தெற்குப் பகுதியான புஷேர் பகுதியில் ரஷியாவின் உதவியுடன் முதல் அணுமின் நிலையத்தை அந்நாடு அமைத்து வந்தது. இந்த அணு உலைக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை ஈரானே செறிவூட்டியது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அணு குண்டுகளை தயாரிக்கவே ஈரான் யுரேனியத்தை செறிவூட்டுவதாக குற்றம் சுமத்தியது. யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் கைவிட வேண்டும் என்று மிரட்டியது. ஐ.நா.வுக்கு நெருக்குதல் அளித்து ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடை விதிக்க வைத்தது. எனினும் ஐ.நா.வின் இந்த பொருளாதாரத் தடைக்கும், அமெரிக்காவின் மிரட்டலுக்கும் எல்லாம் ஈரான் பயப்படவில்லை. அணு உலையை செயல்படுத்தியே காட்டுவோம் என்று கூறி அதில் உறுதியாகவும் இருந்தது. ரஷியாவின் உதவியுடன் அணு உலையை வெற்றிகரமாக நிறுவி முடித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்துவிட்டால் அணு உலை செயல்படத் தொடங்கி விடும். அணு உலையில் எரிபொருள் நிரப்பத் தொடங்கியுள்ளது குறித்து ரஷியா கூறுகையில், ஈரானுக்கான மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய இந்த அணு உலை அவசியம் என்று கூறியுள்ளது. அணு உலைக்காக செறிவூட்டும் யுரேனியத்தை அணு குண்டு தயாரித்தல் உள்ளிட்ட தவறான செயலுக்கு ஈரான் பயன்படுத்தாது என்ற ஆழமான நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.