தமிழ்நாட்டின் கூடங்குளம் அருகில் 2 அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த இரண்டு அணு உலைகளும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
இந்த அணு உலைக்கு எதிராக இடிந்தகரை உள்ளிட்ட கிராம மக்கள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தினார்கள். அந்த போராட்டங்கள் அதிமுக அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்டு அந்த போராட்டங்களும் முடிந்த நிலையில் இப்போது மேலும் நான்கு அணு உலைகளை அமைக்க இந்திய அணு சக்தி கழகம் தீர்மானித்துள்ளது.
3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.இந்த அணு உலைகளில் மின் உற்பத்தி 2023-24-ல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 3-வது, 4-வது அணு உலைகளின் கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆணையத்தின் இம்முடிவுக்கு அணுசக்திக்கு எதிரான அப்பகுதி மக்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.