28.09.2008.
மாஸ்கோ: ஜார்ஜியா மீதான போரின்போது தனது ஆயுத பலத்தின் தரம் குறைந்திருப்பதாக உணர்ந்துள்ள ரஷ்யா, 2020ம் ஆண்டுக்குள் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களின் தரத்தையும் உயர்த்த அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா இதுவரை இல்லாத பெரும் சவாலை சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் நேட்டோ அமைப்பு, முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளை தன் பக்கம் இழுத்து வருகிறது. மறுபக்கம், அமெரிக்கா, முன்னாள் சோவியத் நாடுகளில் தனது ராணுவத்தை நிறுத்த முயன்று கொண்டிருக்கிறது. சில நாடுகளுக்குள்ளும் அது புகுந்து தளங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிைலயில் ஜார்ஜியாவைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்கு பெரும் நெருக்குதலைக் கொடுக்க அமெரிக்கா முயல்வதாக ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் தனது ஆயுத பலத்தையும், தரத்தையும் உயர்த்த ரஷ்யா தீர்மானித்துள்ளது. குறிப்பாக அணு ஆயுதங்களை அது தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது.
தனது படைகளுக்கு அதி நவீன ஆயுதங்களை வழங்கவும், அணு ஆயுதங்களின் தரத்தை மேம்படுத்தவும் அதிபர் மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார். 2020ம் ஆண்டுக்குள் இதை செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரிகளுடன் மெத்வதேவ் பேசுகையில், 2020ம் ஆண்டுக்குள் ரஷ்யாவின் அணு ஆயுத தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம். ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு அதிக நவீன ஆயுதங்களை நாம் வழங்க வேண்டும். இது எதிர்கால அரசியல் சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானதாகும்.
ஜார்ஜியா மோதலின் அடிப்படையில் நமது படையினரின் தரத்தை உயர்த்தியாக வேண்டியுள்ளது. அணு ஆயுதங்கள் மிகவும் தரமுடையதாக இருக்க வேண்டியது அவசியம்.
வான் ரீதியிலும், தரை மார்க்கத்திலும், கடல் மார்க்கத்திலும் நமது படைகள் யாருக்கும் சளைக்காதவையாக மாற வேண்டும். உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதற்கு நமது படைகள் தயாராக இருக்க வேண்டும். துருப்புகளை தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பும் வகையில் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
நமது போர்க் கப்பல்கள் அதி நவீனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை முழு ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து வித ஏவுகணைகள், ஆயுதங்களுடன் போர்க் கப்பல்களை தயார் நிலையில் வைத்திருங்கள்.
நமக்குத் தேவைப்படும் அளவுக்கு ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் தயாரிக்க நடவடிக்கை எடுங்கள். பற்றாக்குறை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
நமது நாட்டைப் பாதுகாக்கவும், நமது பிராந்தியத்திற்குள் எதிரிகள் ஊடுறுவாமல், வலுப்பெறாமல் தடுக்கவும், வான் பாதுகாப்பு மண்டலத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.
இதுதொடர்பான விரிவான திட்டத்தை முப்படைகளின் தலைவர்களும் டிசம்பர் மாதத்திற்குள் எனக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் மெத்வதேவ்.
மெத்வதேவின் இந்த உத்தரவு ஐரோப்பிய நாடுகளில் புதிய பதட்டத்ைத ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
கடந்த மாதம் ஜார்ஜியாவில் நடந்த தாக்குதலின்போது ரஷ்யாவால் அதி நவீன போர் ஆயுதங்களையும், வசதிகளையும் பயன்படுத்த முடியவில்லை. இதனால் ரஷ்ய ராணுவம் குறித்து அங்கு சர்ச்சை எழுந்தது. இதையடுத்தே ஒட்டுமொத்தமாக படையின் தரத்தையும், பலத்தையும் மேம்படுத்த மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.