அணுமின் நிலையம் முன்பு கிராம மக்கள் திடீர் முற்றுகை இதனால் கூடங்குளத்தில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு நேற்று காலை 11 மணி அளவில் அணு மின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி மற்றொரு இயக்குனர் செல்லப்பா மற்றும் சில அதிகாரிகள் 4 கார்களில் சென்றனர்.
இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் அணு மின் நிலையத்திற்குள், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் நுழைந்துவிட்டதாக கருதினார்கள். தமிழக அரசு குழு வருவதற்காக கதவுகளை திறந்து வைத்திருக்கும் நேரத்தில் அணு சக்தி அதிகாரிகள் உள்ளே நுழைந்து வேலையை தொடங்கி விட்டதாக அவர்கள் எண்ணினார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் காலை 11.30 மணிக்கு ஆலய மணியை அடித்து ஒலி எழுப்பி மக்களை திரட்டினார்கள். சுமார் 2 ஆயிரம் பேர் அங்கு திரண்டு வந்து கூடங்குளம் அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் மெயின் கேட் முன்பு ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.