ஈரானின் அணு ஆயுத செயல்பாடு குறித்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் ஈரானுக்கு பெரும் நெருக்கடியைக் கொத்துக் கொண்டிருக்கின்றன, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் சிந்தனைகளை எதிர்த்து இஸ்லாமிய குடியரசாக இருக்கும் ஈரான். வளர்ந்த நாடுகளின் அச்சுறுத்தலுக்குப் பணியாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணுசக்தி
திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு காலக்கெடு விதித்து, உலக ஆதிக்க நாடுகள் விடுக்கும் அச்சுறுத்தல், நிர்பந்தத்துக்கு அடிபணியப் போவதில்லை என ஈரான் உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான “இர்னா’ வியாழக்கிழமை இதைத் தெரிவித்தது. “எந்த பிரச்னையானாலும் பேச்சுவார்த்தை நடத்தவும், ஒருங்கிணைந்து செயல்படவும் ஈரான் தயாராக உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் காலக்கெடு விதித்து, ஆதிக்க மனப்பான்மை கொண்ட 6 உலக நாடுகள் விடுக்கும் அச்சுறுத்தல், நிர்பந்தத்துக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணியமாட்டோம்’ என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாஸன் ஹஸ்காவி தெரிவித்தார். ஐ.நா. பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த மாதப் பிற்பகுதியில் நேருக்கு நேரான பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 நாடுகள் புதன்கிழமை வலியுறுத்தின. இற்குப் பதில் அளிக்கும் வகையில், ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இக் கருத்தைத் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து சர்வதேச அணுசக்தி முகமை மட்டுமே ஆராய வேண்டும்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இதில் தலையிடக் கூடாது என்றார் ஹாஸன் ஹஸ்காவி. சர்வதேச விதிமுறைகளுக்கு உள்பட்டு தனது அணுசக்தித் திட்டங்களை ஈரான் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.