பேச்சுச் சுதந்திரம் குறித்தும், கருத்துரிமை குறித்தும் பேசுகின்ற அமரிக்கா உட்பட தமக்கு மனித முகத்தைப் பொருத்திக்கொண்ட அனைத்து ஐரோப்பிய அதிகாரங்களும் இணைந்து விக்கிலீக்ஸ் இணையத்தின் நிறுவனரான ஜீலியன் அசாஞ்சின் அனைத்துச் சுதந்திரங்களையும் பறித்து மௌனமாக்கியுள்ளன. விக்கிலீக்சின் வழிமுறையைத் தீர்மானிப்பதில் பிரதான பாத்திரம் வகித்தவரான ஜூலியன் அசாஞ் இன்று கைதுசெய்யப்பட்டு லண்டன் புற நகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் வண்ட்ஸ்வேர்த் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிபதி இவரது வக்கீல்கள் கோரிய பிணைக் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். அடக்குமுறையாளர்கள் தமது நோக்கங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் கருவிகளே அவர்களுக்கு எதிரானதாக மாறும் என்பது வரலாற்றுண்மை. அந்த வகையில் தகவல் தொழில்னுட்ப ஊடகத் துறையில் புரட்சிசெய்தவர் ஜூலியன் அசாஞ்ச். அவர் ஆரம்பித்த பணி தகவல் ஊடகத் துறைக்கு முன்னுதாரணமாகத் திகழும் என்பதை அதிகாரம் சார்ந்த ஊடகவியலாளர்களே ஏற்றுக்கொள்கின்றனர். 39 வயதாகும் அவுஸ்திரேலியரான இவர் தனக்கென்று எந்தச் சொத்துக்களையும் வைத்திருக்கவில்லை. உலகின் அரசியல் மர்மங்கள் வெளியே வருமானால் முன்னேறிய சமூகத்தை உருவாக்க முடியும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர் அசாஞ். சுவீடனில் இரண்டு பெண்கள் மீதான பாலியல் வன்முறை மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் போலியான அவதூறுகள் என மறுக்கிறார். அதே வேளை அமரிக்க ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு இவரது இணையத்தை முடக்க முயன்றன. மக்கள் தமது வங்கி அட்டைகளூடாக வழங்கும் பணத்தைத் தடைசெய்வதற்காக விசா மற்றும் மாஸ்டர் கார்ட் ஆகியன பணக் கொடுப்பனவுகளை ஏற்க மறுத்துள்ளன. ஐரோப்பாவில் பனிபோல உறைந்து போயிருந்த ஒருபக்க ஏகாதிபத்திய ஜனநாயகத்தைத் தோலுரித்துக்க்காட்டிய அசாஞ்ச் இவர்கள் அனைவராலும் எதிரியாகக் கணிக்கப்பட்டார். அவதூறுகளை எதிர்கொள்ளலாம் என சரணடைந்த அசாஞ்ச், இப்போது புதிய பிர்சனைகளை எதிர் கொள்கிறார். இவர்மீதான் பாலியல் குற்றச்சாட்டுக்கள் திட்டமிட்ட அவதூறுகள் என முதலாளித்துவ ஊடகங்களே நிராகரிக்கவில்லை. இந்த நிலையில் இவர் சரணடைந்தார். தவிர பிரித்தானியாவில் அசாஞ்ச் ஒருபோதும் திட்டமிட்டுத் தலைமறைவாக இருந்ததில்லை. இப்போது சுவிடனிற்கு முன்னதாக அமரிக்கா இவரை நாடுகடத்தலாம் எனக் கருதப்படுகிறது. அமரிக்கா நாடுகடத்தும் என முன்னமே அறிந்திருந்தால் பொலீசில் அவர் தன்னை ஒப்படைப்பதைத் தவிர்த்திருக்கலாம் என்று அவருடைய வழக்கறிஞர் குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவை அம்பலப்படுத்தி ஆட வைத்திருக்கிறார் தன்னுடைய அஸ்திவாரத்தையே அசைத்தவரை அமெரிக்கா விட்டு வைக்காது என தெரிந்தும் அவர் எதையோ தவற விட்டு விட்டார் இல்லை என்றால் அவர் சிறயில் இருந்திருக்க மாட்டார்.யானைக்கும் அடி சறூக்கும்.