புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது அவுஸ்திரேலிய அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக புகலிடக் கோரிக்கையாளர் வள நிலையத்தைச் சேர்ந்த பமிலா குர் (Pamela Curr) குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களை பலவந்தப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு வழிகளில் இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.அச்சுறுத்துவதன் மூலம் புகலிடக் கோரிக்கையாளர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அகதிகள் மீதான அரசுகளின் பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. தமிழ் அகதிகள் மீதான இத் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா மனித உரிமை அலுவலகத்தின் லண்டன் கிளை முன்பாக ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. தமிழர்களின் இசைக்கருவியான பறை ஒலிக்க எழுச்சியுடன் லண்டனின் இருதயப் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பொதுக்கூட்டம் ஒன்று 28.06.2014 அன்று கிங்ஸ்டன் பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழ் அகதிகளுடன் ஏனைய நாட்டு அகதிகளை இணைத்து போராட்டத்தை விரைவுபடுத்தவும், தமிழ் அகதிகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பு உதவி என்பன குறித்து ஆராயவும் இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.