அகதிகளுடன் தீவிரவாதிகள் அவுஸ்திரேலியாவிற்குள் உள் நுளையலாம் என எச்சரிக்கைவிடுத்த அவுஸ்திரேலிய அரசு இப்போது அகதிகளை கம்போடியாவில் முகாம் அமைத்து தங்கவைக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது. உலகம் முழுவதும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் போராடிய காலப்பகுதியில் கம்யூனிச எதிர்ப்பாளர்களப் பாதுகாத்து எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை தூண்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஜெனீவா அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் அரசியல் அகதிகளை அங்கீகரித்து வந்தன. 70 களின் இறுதியில் கம்யூனிச நாடுகள் சிதைக்கப்பட்டு உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுக்கள் பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் அகதிகளைத் திருப்பி அனுப்புவது அதிகரிக்கத் தொடங்கியது. 80 களிலிருந்து ஐரோப்பிய நாடுகள் தமது தந்திரோபாயத்தை மாற்றிக்கொண்டன. உலகில் போராட்டங்களும் புரட்சிகளும் நடைபெறும் நாடுகளில் சமூக உணர்வுள்ள மத்தியதர வர்க்கத்தை அகதிகளாக உள்வாங்கி புலம்பெயர் நாடுகளின் பணச் சிறைக்குள் அடைத்து போராட்டங்களைச் சீரழித்தன.
லத்தீன் அமெரிக்க நாடுகள், இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து அரசியல் அகதிகள் உள்வாங்கப்பட்டு அவர்களை மீள முடியாத நிதி மூலதனச் சிறைக்குள் மேற்கு ஏகாதிபத்தியங்கள் அடைத்தன. இலங்கையில் போராடும் வலிமை கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உலகம் முழுவதும் வீசியெறியப்பட்டனர். புலம் பெயர் வாழ்வின் தாக்கங்களால் அவர்கள் இலங்கைக்கு மீளவோ அல்லது போராட்டம் தொடர்பாக சிந்திக்க நேரமில்லாதவர்களாகவோ மாற்றப்பட்டனர். இன்று பொதுவாக அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
இதனல் அகதிகள் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது. அகதிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதே அரசியல் கட்சிகள் மத்தியில் பிரதான விவாதப்பொருளாக மாறியுள்ளது.
உலகம் முழுவதும் கனிம வளங்களைக் கொள்ளையிடும் அவுஸ்திரேலியா கொள்ளைபணத்தின் ஒரு வீதத்தைக்கூட அகதிகளுக்காகச் செலவிடுவதில்லை. ஆப்கானிஸ்தான், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் கனிம வளங்களைக் கொள்ளையிடும் அவுஸ்திரேலியா அந்த நாடுகளிலிருந்து உயிர்ப்பிச்சை கேட்டுவரும் அகதிகளை விலங்குகள் போல நடத்தி வந்தது. இப்போது கம்போடிய அரசுடன் அகதிகளைத் தங்கவைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளது.
இனிமேல் அவுஸ்திரேலியாவிற்கு உயிர்ப்பாதுகாப்புத் தேடிவரும் அகதிகள் கம்போடியாவிற்கு அனுப்பிவைக்க்கபட்டு அடிப்படை வசதிகள் கூட இல்லாத திறந்தவெளிச் சிறைகளில் அடைக்கப்படுவார்கள். அஞ்சலீனா ஜோலியும் வில்லியம் ஹக்கும் அகதிகளைப் பாதுகாபோம் என்று கூட்டம் போட்டுக் கூச்சலிடுவார்கள்.