23.09.2008.
வெலிஓயா ஆண்டான்குளம் பகுதியில் அமைந்திருந்த ‘’பாசறை’’ என்ற கடற்புலிகளின் தளம் ஒன்றைப் படையினர் தம்வசமாக்கியிருப்பதாக இராணுவ தலைமையகம் தனது இணையதள செய்தியில் தெரிவித்திருக்கின்றது.
மல்லாவி மற்றும் அக்கராயன்குளம் பகுதிகளில் கடந்த சிலதினங்களில் இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 13 சடலங்கள் விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்படுவதற்காக இன்று வவுனியாவில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்திருக்கின்றது
இதற்கிடையில், இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னிப்போர்முனைகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 28 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன்குளம், வன்னிவிளாங்குளம், வன்னேரிக்குளம், பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களையடுத்து, படையினர் நடத்திய தேடுதலின்போது விடுதலைப் புலிகளின் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது
இதேவேளை முச்சக்கர வண்டியில் வந்த பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களினால் இரண்டு பெண்கள் நேற்றிரவு கொல்லப்பட்டிருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது. இவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.