இந்திய வேளாண்துறையை முழுமையாக தனியார் கட்டுப்படுத்தும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டங்களை அனைத்து மாநில விவசாயிகளும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் மத்திய பிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு இச்சட்டங்களுக்கு உள்ளதால் பல மாதங்களாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரை இச்சட்டத்தை அதிமுக-பாஜக இரு கட்சிகளும் ஆதரிக்கின்றன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்ப்பதா ஆதரிப்பதா என்ற தெளிவில்லாமல் இருக்கின்றன. திமுக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது முதலே இச்சட்டங்களை எதிர்த்து வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் வேளாண் சட்டங்களை எதிர்ப்போம் என்று வாக்குறுதி கொடுத்தது. இப்போது திமுக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே போன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது ஏராளமான வழக்குகளையும் அதிமுக அரசு போட்டிருந்தது. அப்படி தொடரப்பட்ட அத்தனை வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி மேற்குவங்காளத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தச் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக-பாஜக இரு கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.