வேலைநிறுத்தப் போராட்டம் : தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கான சூழல்

12 – July – 2008]
காலகண்டன்
 ஜூலை 10 ஆம் திகதிஒருநாள் அடையாள பொது வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்க, தனியார் துறையினருக்கு சம்பள உயர்வாக 5000 ரூபாவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளம் 500 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என்பதே மேற்படி வேலை நிறுத்தத்தின் கோரிக்கையாகும். இன்றைய மோசமான வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் சூழலில் மேற்படி கோரிக்கை நியாயமானதும் அவசியமானதும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.
ஆனால், இத்தகைய நியாயபூர்வமான கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட ஒருநாள் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதா? என்பதே இன்று அரசியல் தொழிற்சங்க அரங்குகளில் அலசப்படும் விடயமாகக் காணப்படுகின்றது. இவ் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஜே.வி.பி.யின் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் வெற்றிகரமான வேலை நிறுத்தம் என்று பிரகடனப்படுத்தி நிற்கிறது. ஆனால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தோல்வியடைந்த வேலை நிறுத்தம் என உச்சத்தொனியில் கூறி நிற்கின்றனர். ஆனால், உண்மை நிலை யாதெனில், மேற்படி வேலை நிறுத்தம் முழுமையான வெற்றி பெறவில்லை என்பதும் படுதோல்வியான ஒன்று அல்லவென்பதும் அவதானிக்க வேண்டியதாகும். சராசரியாக நாற்பது முதல் ஐம்பது வீத அரசாங்க, தனியார் துறையினர் பல்வேறு அச்சுறுத்தல்கள் அடக்குமுறை சமிக்ஞைகள் மத்தியில் மேற்படி வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பது கவனத்திற்குரியதாகும்.
இவ்வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதும் இருபத்திதெட்டு வருடங்களுக்கு முன்பு ஜே.ஆர்.ஆட்சியின் போது முன்னெடுக்கப்பட்ட 1980 ஜூலை வேலை நிறுத்தம் போன்று பாரிய தாக்கமுடையதாக அமையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அன்றைய வேலை நிறுத்தம் ஜே.ஆரின் இரும்புக் கரங்கள் கொண்டு நசுக்கப்பட்டதுடன், சுமார் எண்பதினாயிரம் அரசாங்க, தனியார் துறை ஊழியர்கள் பழிவாங்கப்பட்டு வீதிக்குத் துரத்தப்பட்டனர். அவர்களில் பலர் இன்று வரை மீள வேலை வழங்கப்படாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாறு வேலை இழந்தவர்களில் பதினைந்து பேர் வரை தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் பலர் மறந்து போன விடயங்கள். அன்றைய வேலை நிறுத்தத்தை இடதுசாரித் தொழிற்சங்கங்களே முன்னெடுத்திருந்தன. அப்பொழுது ஜே.வி.பி. தொழிற்சங்கத் துறையில் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அன்றைய வேலை நிறுத்தம் வெற்றிகரமாக அமைந்ததற்கும் இன்றைய வேலை நிறுத்தம் எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைய முடியவில்லை என்பதற்கான புறச் சூழல் ஆழமாக ஆராயப்பட வேண்டியதாகும்.
ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளம் ஐந்நூறு ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என்பது இன்றைய வாழ்க்கைச் செலவு உயர்வின் மத்தியில் முற்று முழுக்க நியாயமானதொன்றாகும். அப்படி இருந்தும் இந்நியாயமான கோரிக்கைக்கு அரசாங்க, தனியார் துறையினர் மத்தியில் முற்று முழுதான ஆதரவு கிடைக்கவில்லை. காரணம் ஜே.வி.பி. மீதான நம்பிக்கையீனமும் அவர்கள் முன்னெடுத்து வந்த பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுமாகும். ஜே.வி.பி. சந்திரிகா அம்மையாரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் பெற்று ஆளும் தரப்பினராக இருந்து வந்தவர்கள். அவ்வேளைகளில் அரசாங்க, தனியார் துறையினர் பட்டுவந்த துன்ப துயரங்கள் பற்றி ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதன் பின் அரசாங்கத்திலிருந்து அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த ஒரு நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் அதே ஐ.ம.சு.முன்னணிச் சின்னத்தில் போட்டியிட்டே முப்பத்தேட்டு ஆசனங்களைப் பெற்றனர். இலங்கை அரசியலில் மூன்றாவது தனிப்பெரும் சக்தி என மார்தட்டி நின்றனர். அவ்வேளையிலும் மனப்பூர்வமான மக்கள் சார்பு இயக்கம் எதனையும் முன்னெடுக்கவில்லை. வேலை நிறுத்தம் என்ற பேச்சுகள் எதனையும் கோரவில்லை.
இத்தகைய பாராளுமன்றப் பலத்தை வைத்துக் கொண்டே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற முழு ஒத்துழைப்பு வழங்கினர். மகிந்த சிந்தனையை வடிவமைப்பதில் தாமே பிரதான பாத்திரம் வகித்ததாகத் தம்பட்டம் அடித்தும் வந்தனர். ஒற்றையாட்சியை வற்புறுத்தி அதிகாரப் பகிர்வு என்பதை மறுத்து யுத்தம் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதை வலியுறுத்தி இயக்கம் நடத்தி வந்தவர்களும் இதே ஜே.வி.பி.யினர்தான். அரசியல் தொழிற்சங்கத் தளங்களில் தம்மை எதிர்த்தவர்களையும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வலியுறுத்தி அரசியல் தீர்வை வற்புறுத்தியவர்களையெல்லாம் புலிகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தினர். “தொழிற்சங்கப் புலிகள்’, “ஊடகப் புலிகள்’, “இடதுசாரிப் புலிகள்’, “என்.ஜீ.ஓ. புலிகள்’ என்றவாறு பிரசாரம் நடத்தி யுத்தத்தை நிறுத்தி சமாதானத் தீர்வை வலியுறுத்தியவர்கள் மீது லேபல் ஒட்டியவர்கள் இதே ஜே.வி.பி.யினர் என்பது மறப்பதற்கில்லை. அன்று ஏனையோருக்கு ஜே.வி.பி.யினர் கட்டிய அதே பட்டத்தை இன்று அவர்களுக்கே அரசாங்கம் வழங்கி வரும் வரலாற்று வினோதத்தைக் காண முடிகின்றது. இது ஜே.வி.பி.யின் சந்தர்ப்பவாத அரசியலினால் ஏற்பட்ட எதிர்விளைவாகும்.
மேலும் ஜே.வி.பி.யின் முப்பத்தெட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் பதினொரு பேர் தனியே பிரிந்து சென்று தனிக் கட்சியாக ஜே.என்.பி.யைத் தோற்றுவித்துள்ளனர். அவர்களது அரசியல் நிலைப்பாடு தொடர்ந்தும் பேரினவாதமாகவும் மகிந்த சிந்தனை அரசாங்க ஆதரவாகவும் இருந்து வருகின்றது. இத்தகைய ஜே.வி.பி.யின் பிளவு தற்போதைய வெற்றி பெறாத வேலை நிறுத்தத்தில் பிரதிபலித்துள்ளது.
அதுமட்டுமன்றி, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஜே.வி.பி.யானது யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒற்றையாட்சியை வலியுறுத்தி அதிகாரப் பகிர்வு வழங்கப்படக் கூடாது என்பதிலும் பேரினவாத நிலைப்பாட்டையே வற்புறுத்தி வருகின்றது. இத்தகைய நிலைப்பாடும் சம்பள உயர்வுக்கோரிக்கையும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதாகும். நாட்டின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கும் பணவீக்கத்தின் உயர்வுக்கும் யுத்தம் ஒரு பிரதான காரணமாகும். இவ்வாறான ஒரு யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தும்படி ஜே.வி.பி. வற்புறுத்திக் கொண்டு தான் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு வேலை நிறுத்தம் செய்துள்ளது. இத்தகைய முரண் நிலை எவரையும் சிந்திக்க வைப்பது மட்டுமன்றி, ஜே.வி.பி. தனது இழந்துள்ள பலத்தையும் சிதைந்து கொண்டு செல்லும் வாக்கு வங்கியையும் மீளப் பெறுவதற்கான அரசியல் உள் நோக்கோடுதான் இவ்வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது என்ற எண்ணம் பரவலாக இருந்துள்ளது.
அதுமட்டுமன்றி, பச்சை மண்ணும் சுட்ட மண்ணுமாக இருந்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் இவ்வேலை நிறுத்தத்தில் ஒன்றிணைந்து நின்றமை மற்றொரு வகையான சந்தர்ப்பவாதக் கூட்டு என்றே கருதப்படுகின்றது. ஜே.வி.பி.யின் வேலை நிறுத்த அழைப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்து பங்கு கொள்வதாகக் கூறியது. ஐக்கிய தேசியக் கட்சியும் தனது ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்துக் கொண்டது. அதனை ஜே.வி.பி. பூரணமாக நம்பியும் கொண்டது. ஆனால், அமெரிக்க மேற்குலக விசுவாசியான ரணில் மிகவும் நாசுக்காகவே தனது தந்திர நிலைப்பாட்டை இவ் வேலை நிறுத்தத்தில் கையாண்டு கொண்டார் என்றே கூறுதல் வேண்டும். 1980 ஜூலை வேலை நிறுத்தத்தை முறியடித்து தொழிலாளர் விரோத அடக்குமுறையைப் பிரயோகித்த பாரம்பரியத்தில் வந்த வரல்லவா ரணில். எனவே வெறும் போக்குக் காட்டப்பட்டதே அன்றி, முழுப்பங்களிப்பு வழங்கப்படவில்லை. ஏனெனில், ஏற்கனவே பலவீனமடைந்துள்ள ஜே.வி.பி. மேலும் இவ்வேலை நிறுத்தத்தில் மூக்குடைபடுவதை ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் விரும்பிக் கொண்டனர்.
அதேநேரம், அரசாங்க, தனியார் துறையினரிடம் தனிமைப்படாது இருக்க வேண்டிய அளவுக்கு ஆதரவு எனக் காட்டிக் கொண்டனர். அதனால் பட்டும் படாது போன்று ஏனோ தானோ என்ற நிலையிலும்தான் இவ் வேலை நிறுத்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நடந்து கொண்டது. இவ்வாறு அக்கட்சி செயற்படுவதற்கு மற்றொரு காரணம், அது ஒரு தொழிலாளர் சார்புக் கட்சியோ அல்லது மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் கட்சியோ அல்ல. இதே கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழலில் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ மாட்டாது. அதேபோன்று நியாயமான சம்பள உயர்வை வழங்கவும் முன்வரப் போவதில்லை. ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் இதே ஐக்கிய தேசியக் கட்சியினர்தான். இன்றைய யுத்தத்தின் நீடிப்பிற்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் இவர்களும் பங்காளிகளாவர். இவற்றை மறைத்துக் கொண்டே அடுத்து அதிகாரத்திற்கு வர தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு நிற்கின்றனர். அதன் ஒரு பகுதியாகவே சம்பள உயர்வுக்கான வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு என்ற வெளிவேடமுமாகும்.
அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் யுத்தக் கொள்கையையும் பேரினவாதத்தையும் முன்னெடுத்து வரும் ஜே.வி.பி.யின் வேலை நிறுத்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டமை பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. தொழிலாளர்களின் பிரச்சினைகளில் தமிழ்த் தலைமைகள் என்றுமே சாதகமான நிலைப்பாட்டினை ஒருபோதும் எடுத்ததில்லை. 1953 ஆம் ஆண்டின் மாபெரும் ஹர்த்தால் போராட்டத்திற்கு அன்றைய தமிழரசுக் கட்சி ஆதரவு தெரிவித்து அதில் பங்கும் கொண்டது. அதுவே முதலும் கடைசியுமான அவர்களது நிலைப்பாடாகிக் கொண்டது. அதன்பின்பு தென்னிலங்கையில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களை “அது சிங்களவர்கள் தமக்குள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டங்கள்’ என்றும் “அவற்றில் தமிழர்கள் பங்கு கொள்ளத் தேவையில்லை’ என்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்தனர். இத்தகைய பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் தற்போதைய வேலை நிறுத்தப்போராட்டத்தை ஆதரித்தமை எவற்றின் அடிப்படையில் என ஆராய வைக்கின்றது.
தென்னிலங்கையின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களை நேச சக்திகளாகக் கொள்ளும் ஒரு பரந்த அரசியல் பார்வைக்கு தமிழ்த் தலைமையினர் வந்துவிட்டனரா? அவ்வாறு வந்திருப்பின் அது வரவேற்கப்பட வேண்டியதாகும். ஆனால், இது ஒரு தற்காலிக அரசியல் காய் நகர்த்தும் நோக்கில் இருந்து ஆதரிக்கப்பட்டதா என்பதும் நோக்கப்பட வேண்டியதாகும்.
அதேவேளை, இவ்வேலை நிறுத்தத்தில் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த கணிசமான தொழிலாளர்கள் பங்கு கொண்டமை கவனத்திற்கு உரியதாகும். அரசாங்கத்தில் இணைந்து பதவிகளையும் பாராளுமன்ற சுகங்களையும் அனுபவித்து வரும் மலையகத் தலைமைகளைப் பற்றி அக்கறைப்படாது தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளின் முகத்தில் பூசப்பட்ட கரியாகிக் கொண்டது. அவர்களது வேலைநிறுத்தப் பங்களிப்பு ஜே.வி.பி.க்கான ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்து இடம்பெறவில்லை. கூட்டு ஒப்பந்தம் மூலம் 290 ரூபா நாட் சம்பளம் என்று கூறப்பட்ட போதிலும் சுமார் 200 அல்லது 230 ரூபா வரையான நாட் சம்பளத்தையே தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமக்கு 500 ரூபா நாட் சம்பளம் அவசியம் என்பதை வலியுறுத்தியே வேலை நிறுத்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது மலையகத்தின் ஏமாற்றுத் தலைமைகளின் முகங்களில் வீழ்ந்த அறை என்றே மலையகத்தில் தொழிலாளர்கள் பேசிக் கொள்கின்றனர்.
மேலும், அரசாங்கமும் அதன் பங்காளிகளும் இவ் வேலை நிறுத்தத்தை முறியடிக்க பல்வேறு பிரசார முயற்சிகளில் ஈடுபட்டமை பகிரங்கமானதாகும். புலிகளைப் பலப்படுத்தும் சதிநோக்கத்துடன் கூடிய வேலை நிறுத்தம் என்றனர். யுத்தத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தம் என்றும் கூறப்பட்டது. கோட்டைப் புகையிரத நிலையம் முன்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்தனர். மேல்மாகாண ஆளுநரும் தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலானா தலைமையில் மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. எதிர்க்கட்சியில் இருக்கும் போது வேலை நிறுத்தங்கள் அவசியமாக இருப்பதும் அரசாங்கத் தரப்பிற்கு வந்து கொண்டதும் அவற்றுக்கு அவசியம் இல்லை என்பதும் அறுபது வருட முதலாளித்துவப் பாராளுமன்ற அரசியல் கண்டு வந்த ஏமாற்றுகளாகும்.
அது மட்டுமன்றி, இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ குணசேகரா “இந்த வேலை நிறுத்தம் அநீதியானது’ என அறிக்கை வெளியிட்டிருந்தமை அதிக ஆச்சரியம் தரக் கூடிய ஒன்றல்ல. ஏனெனில், அத்தகையோருக்கும் அவர்களது நெருங்கியோருக்கும் கொழுத்த சம்பளம் கிடைத்து வருகின்ற போது வாழ்க்கைச் செலவின் நாளாந்த அதிகரிப்பால் அல்லலுறும் அரசாங்க, தனியார் துறையினர் ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்பது