இலங்கை சர்வதேச மூலதனக் கொள்ளைக்காரர்களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது. வரிக் கணக்குக் காட்டப்படாத பெரும் தொகையான பல்தேசிய வர்த்தகர்களினதும் பெரு நிறுவனங்களதும் தங்குமிடமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டத்தை முன்வைத்தே வன்னிப் படுகொலைகள் நடத்தப்பட்டன. எஞ்சிய போராளிகளையும் சந்தேகத்திற்குரியவர்களையும் ராஜபக்ச பாசிச அரசு சிறையிலடைத்து வைத்திருக்கிறது. பலரைச் சாட்சியின்றிக் கொன்று போட்டிருக்கிறது.
இந்த நிலையில் உலக வரைபடத்தில் தெளிவாகத் தெரியாத நாடுகளிலெல்லாம் அகதிகளாக வாழும் முன்னை நாள் போராளிகளை அழிப்பதற்கு இலங்கை அரசும் அதன் எஜமானர்களான மேற்கு ஏகாதிபத்தியங்களும், இந்திய, சீன, ரஷ்ய அரசுகளும் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. முள்ளிவாய்க்கால் அழிப்பிற்கு துணை சென்றது போல ஐக்கிய நாடுகள் சபையும் அதன் அகதிகளுக்கான அமைப்பும் உலகம் முழுவதும் நடைபெறும் இச் சுத்திகரிப்பு நிகழ்விற்குத் துணை செல்கின்றன.
அகதிகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டே அழிக்கும் இந்த நிறுவனங்கள் தொடர்பாக மக்கள் விழிப்படைய ஆரம்பித்துள்ளனர். இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது என இந்த நிறுவனங்களிடம் கூறியாக வேண்டும். இதன் முதல்கட்டமாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தின் லண்டன் கிளை (UNHCR -London) முன்பாக நாளை வெள்ளியன்று (06.06.2014) ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் குழுவினர் நட்புடன் அழைக்கின்றனர்.