காணாமல் போவோர் குறித்த சர்வதேச மாநாட்டில் உரையாற்ற பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ள தோழர். தம்பையா 15.12.2010 மாலை 6 மணிக்கு புலம் பெயர் தமிழர்களுக்காக உரையாற்றுகிறார். சில காலங்களின் முன்னர் வெளியான இந்த நேர்காணலை மறு பிரசுரம் செய்வது பொருத்தமானது எனக் கருதுகிறோம்.
தேசிய ரீதியாகவும் சர்வதேசரீதியாவும் இடதுசாரி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் உறவை வலுப்படுத்தி இருக்கும் தோழர் இ.தம்பையா கடந்த 33 வருடங்களாக இலங்கையின் மாக்சிச-லெனினிச கட்சியான புதிய-ஜனநாயகக் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றி வருவதுடன் ‘புதியபூமி’, ‘நியூ டெமோகிரசி’ ஆகிய வெளியீடுகளின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகிறார்.
தொழிற்சங்கப் போராட்டங்கள், யுத்த எதிர்ப்பு இயக்கம், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான இயக்கம், மேல்கொத்மலைத் திட்டம், நுரைச்சோலை அனல்மின்திட்டம், வாரியப்பொல மின் திட்டம் எப்பாவலை பொஸ்பேட் கனிய நிலத்தை வெளிநாட்டுக் கம்பனிக்கு விற்கும் திட்டம், சேது சமுத்திரத் திட்டம், வலிகாமம் காணி சுவீகரிப்பு போன்ற மக்கள் விரோத, சூழல் விரோதத் திட்டங்களிற்கு எதிரான மக்கள் இயக்கங்களை முன்னெடுப்பதிலும் பிரதான பங்கு வகித்தவராவார்.
ஏகாதிபத்தியம், பிராந்திய மேலாதிக்கம் போன்றவற்றுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் முன்னெடுத்து வருபவர்களில் முக்கியமான இவர் சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பியக்க இணைப்புக் குழுவின் செயலக உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார். இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற கம்யூனிஸ்ற் சோஷலிஸ கட்சி மாநாடுகளிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த 20 வருடங்களாக புதிய-ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டு வரும் இவர் பாட்டாளி வர்க்க புதிய ஜனநாயக சங்கத்தின் தலைவராகவும் சர்வதேச ஒத்துழைப்பு அமையத்தின் மத்திய இணைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பத்திலிருந்து சமூக செயற்பாட்டிற்கு அறிமுகமான இவர் சட்டத்துறையில் பன்முகப்பட்ட துறைகளிலும் தொழில் ரீதியாகச் செயற்பட்டு வருவதுடன் மனித உரிமைகளுக்கான வழக்குகளிலும் பங்களிப்பு செய்துள்ளதுடன் மனித உரிமைகளுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் தலைவருமாகச் செயற்பட்டு வருகிறார்.
இவருடைய சமூகச் செயற்பாடுகள் பற்றியும், சமகாலத் தேசிய, சர்வதேச நிலைமைகள் பற்றியும் ‘ இனியொரு’ இணையத்தளத்துடன் இவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கு தருகிறோம்.
இனியொரு :உங்களுடைய இடதுசாரி அரசியல் பிரவேசத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்த சமூகக் காரணிகள் எவை?
தோழர் இ.தம்பையா :நான் தொழிலாள வர்க்கக் குடும்பத்தில் பிறந்து பல அடக்கு முறைகளை எதிர்கொண்டவன் என்ற ரீதியில் இடதுசாரி அரசியலுக்குள் பிரவேசிக்காதிருந்தால் தான் ஆச்சரியமாக இருந்திருக்கும்.
தொழிலாள வர்க்க உறுப்பினன் என்ற ரீதியில் நான் எதிர் கொண்ட பிரச்சினைகளிற்குத் தீர்வாகத் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கான வழிவகைகளை நாடாது, அல்லது முதலாளி வர்க்கத்துடன் சமரசம் செய்யாது சமூக ரீதியான தீர்வினைக் காண்பதற்கு மாக்சிச கொள்கையின் அடிப்படையில் உழைக்க வேண்டும் என்ற முடிவின் அடிப்படையிலான தேடலில் ஈடுபட்டேன்.
இன்றொன்று மலையகத் தமிழ் மக்களில் ஒருவன் என்ற அடையாளத்தினால் என் மீதான பேரினவாதத்தின் அடக்கு முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் இணங்கிப் போய் பேரினவாதத்துடனும் சமரசம் செய்யாது அடக்கப்படும் முழு மலையகத் தமிழ் தேசிய இனத்திற்கான தேசிய அபிலாஷைகள் தொழிலாளர் வர்க்க அடிப்படையில் வென்றெடுக்க வேண்டுமென முடிவு செய்தேன்.
சமகாலத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் மீதும், முஸ்லிம் மக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட பேரினவாத அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீர்வுகள் பற்றியும் சிந்திக்கத் தலைப்பட்டமையையும் குறிப்பிடலாம்.
இதைவிடத் தேடல்கள் காரணமாகத் தனிப்பட்ட வாழ்வை மாக்சிச இலட்சியத்துடன் வாழ்வதற்கான சவால்களை ஏற்றுக் கொள்வதில் ஏற்பட்ட தனிப்பட்ட ஆர்வத்தையும் காரணங்களில் ஒன்றாகக் கொள்ளலாம்.
மேலும் எனது தந்தை திராவிடக் கழக பகுத்தறிவுக் கருத்துக்களை உள்வாங்கியவராக இருந்ததும், நாடகத் துறையில் இருந்ததும், இடதுசாரித் தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டிருந்ததும், அக்காலத்தில் சோசலிஷ நாடுகளாக இருந்த சோவியத் யூனியன், சீனா போன்றவற்றின் ஆதரவாளராகவும் இருந்ததும் எனது பயணத்தை இலகுவாக்கின எனலாம்.
இனியொரு :மலையக மக்களின் அரசியல் உரிமைகளைப் பறிப்பதற்கு இலங்கை அரசு பல்வேறு அடக்கு முறைத் திட்டங்களைச் செயற்படுத்தி வந்துள்ளது. வருகிறது. மலையக மக்களின் குடிசனச் செறிவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது இதுபற்றி?
தோழர் இ.தம்பையா:பெருந்தோட்டக் காணிகளில் திட்டமிட்ட பெரும்பான்மை சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு எதிரான மலையக மக்களின் போராட்டம் மிகவும் முக்கியமானதாகும். அதில் 1977ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நுவரெலியா-மஸ்கெலியா தொகுதியில் 7 ஆயிரம் ஏக்கர் பெருந் தோட்டக் காணியை சுவீகரித்து, பிராதான வீதியின் அருகில் திட்டமிட்ட பேரினவாத குடியேற்றத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து நான் உயர்தரம் படிக்கும் போது பாரிய போராட்டம் நடைபெற்றது. அதில் வட்டகொடை, யொக்ஸ்போர்ட் தோட்ட இளைஞன் சிவனு லட்சுமணன் தலவாக்கொல்ல டெவன் தோட்டத்தில் 1977ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து பாடசாலை மாணவர்களாகிய நாம் ஊர்வலம் சென்ற போது மிருகத் தனமாகத் தாக்கப்பட்டதுடன் சிலர் கைது செய்யப்பட்டோம். இந்தக் கொடுமைக்கு எதிரான எமது செயற்பாடுகளில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்று அப்போது செயற்பட்ட தற்போது புதிய ஜனநாயக கட்சியுடன் என்னையும் என்னுடன் இயங்கிய தோழர்களையும் நெருக்கமாக்குவதற்கு வழி செய்தது. அதன் பிறகு நான் உயர்தரம் கற்ற அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் நிர்வாகத்தில், அதிபர் நியமனத்தில் காலஞ்சென்ற சௌ.தொண்டமானின் முறையற்ற தலையீடுகளிற்கு எதிரான மாணவர் போராட்டங்களும் எம்மைக் கட்சியுடன் மேலும் நெருக்கமாக்கின. அன்றைய சூழ்நிலையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மீது வர்க்க அடக்கு முறைகளுக்கும், மலையத் தமிழ் மக்கள் மீதான தேசிய இன ஒடுக்கலுக்கும் எதிராகப் புதிய புரிதலுடன் கொள்கை வகுக்கப்பட வேண்டியதாக இருந்தது. அதனை நாம் கட்சியின் கீழ் கட்டிய இலங்கை தேசபக்த வாலிபர் இயக்கத்தின் முதலாவது மாநாட்டை 1978ஆம் ஆண்டு தலவாக்கொல்லையில் நடத்தி முன் வைத்த வேலைத்திட்டத்தினூடாக முன்னெடுத்தோம். இந்த வாலிப இயக்கத்தை 1977ஆம் ஆண்டு அங்குரார்ப்பணம் செய்த போது பல தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மலையகப் பிற்போக்கு அரசியல் தலைமைகளுக்கு மாற்றாகச் செயற்படுவதாகச் சொல்லப்பட்ட மலையக இளைஞர் முன்னணி (இரா.சிவலிங்கம்) மலையக மக்கள் இயக்கம் (எல்.சாந்திகுமார்) என்பவற்றின் போதாமைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய பரிணாமத்தை இலங்கை தேசபக்க வாலிபர் இயக்கம் முன்னெடுத்தது. நாங்கள் அப்போது தேர்தல், தொழிற்சங்கம் போன்றவற்றில் கவனம் செலுத்தாது, வெகுஜனப் போராட்டங்களலேயே கவனம் செலுத்தினோம். 1980களில் பூண்டுலோயா நோர்வூட் பகுதிகளிலும் அரசாங்கம் மேற்கொள்ள முற்பட்ட பேரினக் குடியேற்றங்களிற்கு எதிராகவும், மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டோம். 1986இல்இ பூண்டுலோயாவில் சீன் தோட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த பெரும்பான்மையினக் குடியேற்றத்தில் வசித்த சிங்களவர்களுக்கும் சீன் தோட்ட மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறையை நிறுத்துவதற்கு கட்சித் தோழர்கள் தலையிட்டனர். அதில் நான் உட்பட பல தோழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. புரட்சிகர கட்சியைக் கட்டுவதில் கவனஞ் செலுத்தினோம். எமது செயற்பாடுகள் கருத்து ரீதியாகப் பிற்போக்குத் தொழிற்சங்கத்தலைமைகளுக்கு எதிராக குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு எதிராகத் தாக்கத்தை ஏற்படுத்தின. இக் காலகட்டத்தில் பெ.சந்திரசேகரம் தொண்டமானுடன் இயங்கினார் என்பதும் இடதுசாரிகள் எனப்பட்ட சிலர் சந்திரசேகரத்துடன் இணைந்து செயற்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது சந்திரசேகரமும் அவரது இடதுசாரி நண்பர்களும் இ.தொ.கா வின் தலைமையை கைப்பற்றப் போவதாகக் கூறி வந்தனர்.
அது அவர்களால் முடியாது போய் சந்திரசேகரத்திற்;கு நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இ.தொ.கா தலைமை இடம் கொடுக்காததால் அவர் 1988இல் புளொட் இயக்க சின்னத்தில் போட்டியிட்டார். நாங்கள் எங்கள் கட்சி வேலைகளை முன்னெடுத்த அதே வேளையில் சந்திரசேகரன் தொண்டமான் தலைமைக்கு மாற்றாக பாராளுமன்ற, தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகக் கூறிய அவருக்கு சில நடவடிக்கைகளில் ஆதரவளித்தோம். ஆனால் அவர் ஆரம்பத்தில் தீவிர அரசியலை முன்னெடுத்தாலும் பின்னர் இன்னொரு வழமையான தலைவரானார். ஆகவே நாம் 1993 இற்கு பிறகு தேர்தல் நடவடிக்கைகளிலும் 2000 ஆண்டிற்குபின் தொழிற்சங்க ந்வடிக்கைகளும் ஈடுபடலானோம்.
ஆனால் வெகுஜனப் போராட்டங்களையே நாம் மையப்படுத்தி வேலை செய்தோம் குறிப்பாக சம்பளஉயர்விற்கான போராட்டங்கள் மேல்கொத்மலை திட்டத்திற்கு எதிரான போராட்டம் (2006 மே 15 இயக்கம் தொடக்கம் 2006 ஒக்டோபர் வரையான போராட்டம்) ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் மலையக மாணவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டங்களை குறிப்பிடலாம்.
இவற்றில் பெரும்பாலானவை பெருந்தோட்ட நில ஆக்கிரமிப்பதற்கு எதிரான போராட்டங்களே. சிவனுலட்சுமணனின் தியாகத்தால் பாதுகாக்கப்பட்ட தலவாக்கெல்லை தற்போது மேல் கொத்மலைத் திட்டத்தால் நீரில் மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிவனுலெட்சுமணன் தற்செயலாகச் சூடுபட்டுச் செத்ததாக மலையக மக்கள் முன்னணித் தலைவர்களில் பலரும் கூறி வருகின்றனர். நாம் அவரை தியாகியாகவே மதிக்கிறோம். அதனால் மே 15ஐ நாம் மலையக எழுச்சி நாளாக நினைவு கூருகிறோம்.
அந்த போராட்டத்தில் ஈடுபட்ட எமது தோழர்களும் சிங்களத் தோழர்களும் சிங்களப் புலிகள் என்ற முத்திரை குத்தி கைது செய்யப்பட்டு 3 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிலர் இன்னும் சிறைகளில் இருக்கிறனர். அதனால் எனக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட அச்சுறுத்தல் இன்னும் நிழல்போல் தொடருகிறது. மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை எல்லா மலையக அமைப்புகளும் காட்டிக் கொடுத்தது மட்டுமன்றி, அத்திட்டத்தில் ஒப்பந்த வேலைகளையும் பெற்றுக் கொண்டன. அவர்கள் நிலப்பறிப்பிற்கு எதிராக எதையும் செய்ய போவதில்லை. நாம் மட்டுமே இன்னும் அதே நிலைப்பாட்டுடன் பெருந்தோட்டக் காணிகளை நீருக்குள் முழ்கடித்தும், அவற்றில் திட்டமிட்ட குடியேற்றங்களை செய்தும் பெருந்தோட்ட காணிகளைப் பறித்து மலையக மக்களின் செறிவை குறைக்கும் திட்டங்களுக்கு துணைப்போகாது எதிர்த்து நிற்கிறோம்.
இனியொரு: தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வு கிடைக்காமைக்கு காரணம் என்ன?
தோழர் இ.தம்பையா: உலகவங்கியின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு கீழ் தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு நீண்ட கால குத்தகைக்கு 1991 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டன. அதற்கு முன்னர் (1970 முதல் 1991 வரை) அரசுடைமையாக இருந்ததுடன் அரச நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டன. அக்காலத்தில் அரசிடம் கோரிக்கைவிட்டு போராடி ஓரளவு சம்பள உயர்வைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. தனியார் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் சில தொழிற்சங்கங்களுக்குமிடையே தொழிலாளர்களின் சம்பளம் உட்பட தொழில் நிபந்தனைகள் பற்றி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.கூடிய அங்கத்தவர்களைக் கொண்டதாகக் கொள்ளப்படும் ஐ.தே.கட்சியின் தொழிற்சங்கமான இ.தே.தோ.தொ. சங்கம், இ.தொ.கா, பெருந்தோட்டத் தொழிற்சங்கம் கூட்டுக்கமிட்டி ஆகியன மட்டுமே கையெழுத்திட அனுமதிக்கப்பட்டன. அத் தொழிற்சங்கங்கள் வேறு தொழிற்சங்கங்களின் அபிப்பிராயங்கள் கேட்கவில்லை என்பது மட்டுமன்றி மேற்குறித்த தொழிற்சங்களின் தொழிலாளர்களின் கருத்துக்களை கூட கேட்காமலேயே கூட்டு ஒப்பந்தத்தைச் செய்தன. அதன்படி இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சம்பளத்திட்டம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் (அதவாது சம்பளம் கூட்டப்படலாம்) நடைமுறையில் இருக்கும் கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளில் நியாயமான சம்பள உயர்வை உறுதி செய்யும் சம்பள ஏற்பாடுகள் இல்லை. அதில் சம்பந்தப்பட்ட தொழில் சங்கங்கள் அப்படியான ஒரு சம்பளத் திட்டத்திற்காகப் போராடவில்லை. தோட்டக் கம்பனிகளோ அவை சார்பில் தோன்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனமோ அதற்கு இணங்குவதுமில்லை. அரசாங்கம் அதில் தொழிலாளர்கள் சார்பில் தலை இடுவதுமில்லை.
கம்யூனிஸ்ட்டுகளை பொருத்தவரை கூட்டு ஒப்பந்தத்தில் பேரம் பேசுவது என்பது வர்க்கப் போராட்டமே அதில் அவ்வப்போது வெற்றியடைய வேண்டுமானால் விலை போகாத தொழிற்சங்கத் தலைமைகள் தேவை. பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மட்டுமன்றி அவற்றை எதிர்ப்பதாகப் பாசாங்கு செய்யும் ஏனைய தொழிற்சங்கங்களும் நேர்மையாக இல்லை.
இதனால் வர்க்க அடிப்படையில் தொழிலாளர்களின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் கூட்டு தொழிற்சங்கப் பொறிமுறையின்றி கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்திட்டத்தை வென்றெடுக்க முடியாது.
அத்துடன் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயமாதெனில் 22 பெருந்தோட்டக் கம்பெனிகளில் இந்திய முதலாளிகளின் முதலீடு அதிகமாக உள்ளதால் அவர்;கள் இந்திய தோட்டத் தொழிலாளர்களின் நிலமைக்கு மேலாக இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் இருப்பதை விரும்புவதில்லை. இந்தியாவில் சாதாரண மக்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் கூடியதாகும். ஆதை வைத்துக்கொண்;டே இலங்கையின் எல்லா விடயங்களையும் அளக்கிறார்கள். இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் அரை அடிமைகளாகவே இருக்கின்றனர். அதைவிட கொஞ்சமாவது எமது தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை மேலானதாகும். அதனால் நமது தோட்டத் தொழிலாளர்களை இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைக்கு கொண்டுச் செல்லவே விரும்புகின்றனர்.
இது போன்று இலங்கையின் எல்லா விடயங்களிலும் குறிப்பாக தமிழ்மொழியுரிமை, தமிழ்நாட்டு சாதாரண மக்களின் வாழ்நிலை, இடம் பெயர்ந்தவர்களின் முகாம்கள் எல்லாமே இலங்கையை விட இந்தியாவில் தாழ்நிலையிலேயே இருப்பதாகவே நான் அறிகிறேன். அதனாலேயே இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகின்ற எவரும் இலங்கை மக்கள் வசதியாக இருப்பதாக, இடம்பெயர்ந்த மக்கள் கூட வசதியாக இருப்பதாகவே கூறுகின்றனர்.
எனவே எமது தோட்டத் தொழிலாளர்களின், அடக்கப்படும் தேசிய இனங்களின் அந்தஸ்தை அளக்க இந்திய ஆளும் வர்க்க அணுகுமுறை சரியானதாகாது என்பது என்னுடைய அபிப்பிராயம்.
இதிலிருந்து இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினர் என்று இந்தியா அழைக்கின்றவர்களின் நிலைப்பாடு தொடர்பாகக் கூட மேலாதிக்க எண்ணம் கொண்ட சாதாரண இந்திய தொழிலாளர்கள் பழிகொடுத்து கட்டமைக்கப்படுகின்ற இந்திய வல்லரசைச் சார்ந்து நிற்பவர்கள் கவலைப்படுவதில்லை. எல்லாவற்றிலும் இந்திய ஆளும் வர்க்கத்தினரின் மேலாதிக்கமும், ஆக்கிரமிப்பு எண்ணமுமே மேலோங்கி நிற்கிறது.
ஆகவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு இந்திய ஆளும்வர்க்கம் இழைத்த துரோகத்தையே மலையகத் தமிழ் மக்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களும் இழைத்து வருகின்றது. இன்று பெருந்தோட்டத் தொழிற்துறையும் மிகவும் சீரழிக்கப்பட்டுவிட்டது. அங்கு வேலைவாய்ப்புகள் இல்லை. தொழிலாளர்களுக்கரிய சம்பளமில்லை.
இதிலிருந்து பெருந்தோட்டத்துறை உடனடியாக மீட்கப்பட வேண்டுமாயின் அரசாங்கம், தனியார், தோட்டத் தொழிலாளர் ஆகிய மூன்று தரப்பையும் கொண்ட கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி அதனூடாக தொழிலாளர்களுடைய கூடுதலான பங்களிப்புடன் தோட்டங்கள் நிர்வகிக்கப்பட வேண்டும்.
இனியொரு :மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கமர்த்துவதற்குப் பின்புலமாக இருக்கும் சமூகக் காரணிகள் எவை?
தோழர் இ.தம்பையா: இலங்கையில் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களில் அதிகமானோர் மலையகத்திலேயே இருக்கிறார்கள். மலையக மக்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலேயே வறுமை அதிகரித்துக் காணப்படுகிறது. தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிறையுணவு கிடைப்பதே இல்லை. அந்தளவு வருமானமும் குறைவு. வாழ்க்கைத்தரமும் குறைவு.
இதனால் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமலும், தமது வருமானத்தை உயர்த்திக் கொள்ள முடியாமலும் இருக்கும் மலையக பெற்றோருக்கு தெரிவதெல்லாம் “வீட்டு வேலை சந்தைதான்.” இதனை ஊக்குவிப்பதற்கு மலையக தொழிலாளர்களிடையே தரகர்கள் இருக்கின்றனர். அவர்கள் வறுமை கூடிய குடும்பங்களை அணுகி பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்களுக்கு கமிஷன் – தரகுப்பணம் கொடுக்கப்படுகிறது. வீட்டு வேலைக்கு பிள்ளைகளை விநியோகம் செய்வதற்கென பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளும் இயங்குகின்றன.
இலங்கையில் வேலைக்கு அமர்த்துவதற்கான குறைந்த வயதெல்லை 14 ஆக இருக்கிறது. இது பிரிட்டிஷ்காரர்கள் எமக்களித்த பழைய சட்ட ஏற்பாடு. இதனால் வீட்டு வேலைக்கமர்த்த சட்டரீதியான தடை இல்லை.
தற்போது தோட்டங்களில் வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தோட்டக் கம்பெனிகள் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வைத்துக் கொண்டு அதிக லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளன. தோட்ட வேலைகளைத் தவிர விவசாயம், கால்நடைவளர்ப்பு போன்றவற்றில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன.
எனவே மலையகத்தவர்களுக்கு இருக்கும் வேலைவாய்ப்பு, வீட்டுவேலைகளாகவும் கடைகளில் சிப்பந்தி வேலைகளுமாகவே தெரிகிறது. இதில் இலகுவாகப் பெறக்கூடிய வேலைவாய்ப்பு வீட்டு வேலையே.
தோட்டத் தொழிலாளர்களோ அவர்களின் பரம்பரையினரோ திறமை சார்ந்த தொழிலாளர்களாக ( (Skill) வளர்த்தெடுக்கப்படவில்லை. அதனால் வேறு வேலைவாய்ப்புகளுக்கு சந்தர்ப்பமும் இல்லை.
எமது கட்சியின் நிலைப்பாடு யாதெனில் சிறுவர்களை (18 வயதுக்குட்பட்டவர்களை) வீட்டு வேலைக்கு அனுப்பவே கூடாது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டு வேலைகளுக்கு விரும்பி சென்றால் அவர்களின் பாதுகாப்பு, வேலை நிபந்தனை, சம்பளத்திட்டம் போன்றன சட்ட திட்டங்களுக்குட்படுத்தப்பட வேண்டும்.
தோட்டத் தொழிலாளர் சமூகத்தை மதிப்புக்குறைவாக கொண்டே வீட்டு வேலைகளுக்கு அச்சமூகத்திலிருந்து பிள்ளைகளை எடுத்துக் கொள்ளும் நிலை தொடர்கிறது. இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் வீடுகளுக்குத் தம்பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை சுயகௌரவம், சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையிலும் தோட்டத் தொழிலாளர் சமூகம் எடுக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு போராட்டங்களினூடே அடைய வேண்டியவைகளேயன்றி சிறுவர்களை கருக்கி அதற்கு பதிலை தேட முடியாது. சிறுவர்களை வீட்டு வேலைகளுக்கு அமர்த்துவதற்கு எதிராகக் கல்வியூ ட்டல் வேலைகளைச் செய்து வருகிறோம். அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக இலவச சட்ட ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து வருகிறோம்.
இனியொரு : மலையகத் தமிழ் மக்களை தனியான தேசிய இனம் என்று கூறுவது பற்றியும் தமிழ் பேசும் மக்களின் ஒரு பகுதி என்று கூறுவது பற்றியும் என்ன கூறுகிறீர்கள்?
தோழர் இ.தம்பையா:இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் ஆகிய நான்கு தேசிய இனங்களும் பறங்கியர், வேடர்கள் போன்ற பல சமூகங்களும் இருக்கின்றன என்பது எமது நிலைப்பாடு.
வரலாற்று ரீதியாக மலையகத் தமிழ் மக்கள் இலங்கைத் தமிழர்களுள் உள்வாங்கப்படுவதற்கு மாறான போக்குகளே இருந்து வந்துள்ளது. மலையகத் தமிழ் மக்களின் வரலாறு, வாழிடம், பண்பாடு என்பனவும் பிற்படுத்தப்பட்ட அவர்களின் நிலையும் தமிழர் சமூகத்திலிருந்து வேறுபட்டனவாகும். தேசிய இன அடையாளம் என்பது அடக்கு முறைகளை எதிர்கொண்டு, உரிமைகளை வென்றெடுக்க அரசியல் ரீதியாக பலமாக இருந்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடையாளமாகும். தமிழ் மக்களினதும் மலையக மக்களினதும் தேசிய அபிலாஷைகளும் ஒரே விதமான தீர்வுத் திட்டத்தால் உறுதி செய்யப்படக் கூடியதல்ல.
இதே போன்றுதான் முஸ்லிம் மக்களையும் நாம் பார்க்கிறோம். அவர்கள் தமிழ் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்கள் வேறானதாக இருக்கும்.
மலையகத்திலும் மலையகத்திற்கு வெளியிலும் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு மலையகத் தமிழ் தேசிய இனம் என்ற பரந்த அடையாளமே பாதுகாப்பான பலமான தேசிய இன அடையாளமாகும்.
ஒரு மக்கள் திரள் ஒரே மொழியை பேசுவதாலோ, ஒரே சமயத்தைத் தழுவுவதாலோ ஒரே நாட்டில் வாழ்வதாலோ அம்மக்கள் திரளை ஒரே தேசிய இனமென்ற வரையறைக்குள் கொண்டுவர வேண்டுமென்பதில்லை.
அதே போன்று தேசிய இன அடையாளங்களுக்கான அரசியலுக்கும் வரையறை இருக்கிறது. அடையாளங்கள் இருக்கின்றன என்பதற்காகவன்றி அவற்றுக்கு எதிரான ஒடுக்கல்களினாலேயே அவற்றுக்கான அரசியல் முனைப்பு பெறுகின்றது. அடையாளங்கள் ஒரு சமூகத்தின் ஆளுமையை வளர்ப்பதற்காகவேயன்றி அழிப்பதற்காக இருக்கக்கூடாது.
மலையக மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதிகளை ஒன்றிணைந்த பலமான சுயாட்சிப் பிரதேசத்தையும் நிலத் தொடர்பற்று சிதறி வாழ்கின்ற பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுயாட்சி உள்ளமைப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் தேசிய அபிலாஷைகளை உறுதி செய்து கொள்ள முடியும். இது வடக்கு கிழக்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாகலாம். எனவே மலையகத்தமிழ் மக்களை தமிழ் மக்களின் பகுதியாக சமகாலச் சூழலில் வைத்திருக்க வேண்டுமென்பது மிகவும் செயற்கையானது.
அவர்கள் அனைவரையும் வடக்கு, கிழக்கில் குடியேறச் சொல்வது வடக்கு கிழக்கு சுயாட்சியில் அடக்க வேண்டுமென்பது அல்லது வடக்கு கிழக்குடன் மலையகத் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை ஒன்றிணைக்க வேண்டுமென்பதெல்லாம் யதார்த்தமானவையல்ல.
எண்ணிக்கை கூடியதிலிருந்து மிகவும் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களுக்கும் தேசிய அபிலாஷைகளை உறுதி செய்ய வேண்டுமெனின் சுயாட்சிப் பிரதேசம், சுயாட்சி உள்ளமைப்புகள், உப சுயாட்சி அமைப்புகளென ஏற்படுத்தப்பட்டு தேசிய இனப்பிரச்சினையை எந்தவொரு இனத்தினதும் மேலாதிக்கமுமின்றி மிகவும் ஜனநாயக பூர்வமாகத் தீர்க்க முடியும்.
மலையகத் தமிழ் மக்கள் தனியான தேசிய இனம் என்ற அடிப்படையிலானது தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைக்கு எவ்விதத்திலும் இடையூறை ஏற்படுத்தாது. அவர்களின் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதாகாது. மாறாக அடக்கப்படுகின்ற தேசிய இனங்கள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுடன் மட்டுமன்றி முஸ்லிம்களுடனும் ஒரு பொது இணக்கப்பாட்டுடன் ஐக்கியப்பட்டு பேரினவாதத்திற்கு எதிராகப் போராட முடியும். தமிழ் மக்களின் தலைவர்கள் எனப்படும் சிலர் மலையகத் தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்பதையோ, முஸ்லிம் மக்கள் ஒரு தனியான தேசிய இனமென்பதையோ ஏற்காது விடுவது என்பது அவர்களின் இன்னொரு விதமான இனமேலாதிக்கப் போக்கே ஆகும்.
மலையகத் தமிழ் மக்களுடைய பிரஜாவுரிமை பிரச்சினை சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் போன்ற அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடவடிக்கைகளினால் அணுகப்பட்டதனால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டது. விருப்பமில்லாத நிலையிலேயே 5 லட்சத்து 25 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சி இருந்தோரின் பிரஜாவுரிமை பிரச்சினை சட்டப்படி முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் நடைமுறையில் பல விடயங்கள் தீர்க்கப்படாமலே இருக்கின்றன. அவர்கள் பதிவு பிரஜை அந்தஸ்துடனேயே இருக்கின்றனர். அவர்களுக்கும் வம்சாவளி பிரச்சினைகளுக்கும் உரிமைகளில் வேறுபாடுண்டு. பிரஜாவுரிமையை நிரூபிக்க பிரஜா உரிமை சான்றிதழைக் காட்ட வேண்டிய அல்லது சத்தியக் கடதாசியின் மூலம் பிரஜை என விளம்பல் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர். அவர்களின் பிள்ளைகளைத் தொடர்ந்தும் பிரஜைகளாகப் பதிவு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இனியொரு:மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளின் நிலைப்பாடு எவ்வாறிருந்தது?
தோழர் இ.தம்பையா:தமிழ் தேசியவாத தலைமைகளின் நிலைபாடானது தமிழ் தேசிய வாதத்தை மையப்படுத்திய மேலாதிக்கத்தின் அடிப்படையில் மலையகத்தமிழ் மக்களின் பிரச்சினைகளை அனுகுவதாக இருந்தது. 1949 ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரிப்பதென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் எடுத்த முடிவானது அதிலிருந்து எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையிலானவர்கள் விலகித் தமிழரசுக் கட்சியை அமைப்பதற்கு காரணமானது.
தமிழரசுக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் கழகம் தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் ஒரு சங்கமாக செயற்பட்டது. ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் அமைப்புகள் தந்திரோபாய ரீதியாக மலையக இளைஞர்களை அவற்றுடன் உள்வாங்குவதற்கு மலையக மக்கள் மீது அனுதாபமுடையனவாக இருந்தன. திம்பு பேச்சுவார்த்தையின் கோரிக்கைகளில் ஒன்று மலையக மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தது.
ஈரோஸ் இயக்கத்தின் அகண்ட தமிழீழத்தில் மலையகப் பிரதேசமும் உள்ளடக்கப்பட்டடிருந்தது. ஏனைய அமைப்புகள் மலையக மக்கள் வடக்கு கிழக்கில் குடியேற வேண்டும் என்ற கோரிக்கையை விட்டிருந்தன.
1983 இனவன்முறைக்கு பிறகு மலையக மக்கள் மத்தியில் மூன்று தீர்வுகள் கலந்துரையாடப்பட்டன. அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் எல்லோரும் இந்தியாவுக்கு சென்று விடுவது, அல்லது வடக்கு கிழக்கிற்கு இடம்பெயர்ந்து விடுவது, அல்லது மலையகத்திலேயே இருந்து பாதுகாப்பை தேடிக்கொள்வது. இதில் நாம் மூன்றாவது தீர்வையே வலியுறுத்தி வேலை செய்து வந்தோம். அதுவே நடைமுறை சாத்தியமாகவுமிருந்தது.
எனவே தமிழ்த் தேசியவாத தலைமைகளின் நிலைபாடு தமிழ்த்தேசியவாதத்தை மையப்படுத்திய மேலாதிக்கத்தைக் கொண்ட தந்திரோபாயத்துடனான அனுதாபத்துடனும் மலையக மக்களின் பிரச்சினைகளை அணுகுவதாக இருந்தது எனலாம்.
இனியொரு:பல்வேறு சக்திகளினால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் மலையக மக்களின் விடுதலைக்கு சாத்தியமான வழிமுறைகள் எவை?
தோழர் இ.தம்பையா:மக்களை பங்காளிகளாக்கும் வெகுஜன போராட்டபாதையே தீர்வாகும். முன்கூட்டியே வெகுஜன போராட்டங்களுக்கு சட்டகங்களைப் போட முடியாது. ஆனால் திட்டமிடலாம் தமிழ் மக்களினது, மலையக மக்களினது, முஸ்லிம் மக்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் ஏகாதிபத்திய ப+கோளமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்கள், தொழிற்சங்க போராட்டங்கள், பெண்கள் உரிமைக்கான, மாணவர்களின் உரிமைக்கான போராட்டங்கள், அடக்குமுறைத் திட்டங்களுக்கு எதிரான அழிவைத் தரும் ~அபிவிருத்தி திட்டங்கள்| போன்றவற்றுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களும் அவ்வவ் தளங்கள் இடம் பெறுவதை ஏற்று உறுதி செய்வதுடன் அவற்றுக்கு ஃ மத்தியப்படுத்தப்பட்ட தலைமை என்பது அப் போராட்டங்களைக் கூட்டிணைக்கின்ற மையமாகச் செயற்பட வேண்டும். அவற்றில் ஒரு போராட்டம் இன்னொன்றை கரைக்கும் விதமாக அல்லாமல் அவற்றின் முக்கியத்துவத்தை ஏற்று அவற்றினூடாக இவ்வமைப்பிற்குள் தீர்க்கக் கூடியதை தீர்த்துக் கொண்டு நீண்டகால நோக்கில் சமூகத்தை மாற்றுவதற்கான பயணத்தை தொடரும் வெகுஜனப் போராட்டப் பாதையே தீர்வை தரும்.
வெகுஜனப் போராட்ட அரசியலில் எல்லா வெகுஜனப் போராட்டங்களையும் கூட்டிணைத்துக் கொண்டு சரியான மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் வகுத்து செயற்பட வேண்டும். அதாவது வெகுஜனப் போராட்டங்களை எல்லாவற்றுக்கும் அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் அரசியலே செய்யப்பட வேண்டியதும் சாத்தியமானதுமான வழிமுறை ஆகும்.
இதில் தொழிற்சங்கவாதம், பாராளுமன்றவாதம், தொண்டு நிறுவனங்களின் செயற்பாடு போன்றன மலையக மக்களின் உரிமைப் போராட்ட உணர்வை மழுங்கடித்து அவர்களை அடிமை மனப்பாங்கிற்கு தள்ளியுள்ளன என்பதால் அதிலிருந்து மக்களை மீட்பதற்கான வேலைத் திட்டங்களும் அவசியம்.
இனியொரு:இலங்கையில் இனியும் ஆயுதப் போராட்டங்களுக்கான சாத்தியப்பாடுகள் உள்ளனவா?
தோழர் இ.தம்பையா:சாத்வீக போராட்டங்களை பேரினவாதிகள் உதாசீனம் செய்வதனாலே தமிழ் மக்களின் சார்பான ஆயுத நடவடிக்கைகளுக்கான அடிப்படைகள் தோன்றின. அவை முறியடிக்கப்பட்டமைக்கு புறவய, அகவய காரணங்கள் இருக்கின்றன.
அதேபோன்று 1971, 1988 ஜே.வி.பியின் ஆயுத நடவடிக்கைகளும் அடக்கப்பட்டன. ஜே.வி.பியினதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் ஆயுத நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டதுடன் இலங்கையின் அரசு யந்திரம் மிகவும் பலமானதாக அடக்குமுறை நிறைந்ததாக மாறியுள்ளது. இதனால் ஆயுத நடவடிக்கைகளை மட்டுமல்ல வெகுஜன நடவடிக்கைகளையும் தலையெடுக்க விடக் கூடாது தடுக்கும் நிகழ்ச்சி நிரலை கொண்டே அரசு செயற்படும் என்பதில் ஐயமிருக்கத் தேவை இல்லை.
ஆயுத நடவடிக்கைகளுக்கான அவசியத்தையும், வெகுஜனப் போராட்டங்களின் அவசியத்தையும் இந்த ஆளும் வர்க்கத்தின் அடக்கல், ஒடுக்கல் நிறைந்த ஆட்சி முறையே தோற்றுவிக்கிறது. அவற்றுக்கு காரணமான பிரச்சினைகளைத் தீர்க்காமல், அவற்றை அடக்குவதற்கான வழிமுறைகளையும் ஆட்சி முறையே தேடிக் கொள்கிறது. பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையிலேயே அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையிலேயே போராட்டங்கள் பிரசவமாகின்றன. அவை அடக்குமுறைகள் மீறி வளரும் தேவையுடன், வீரியத்தை பெறுகின்ற போது சாத்தியமானவையாகின்றன.கே :இன்றைய சர்வதேச சூழலில் இலங்கையின் இனப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும் என நம்புகிறீர்கள்?
தோழர் இ.தம்பையா:இலங்கையின் அரசிற்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்குமிடையே – ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளிடையேயான முரண்பாடுகளை தந்திரோபாய ரீதியாகக் கையாள்வதன் மூலம் இனப்பிரச்சினைக்கு குறைந்தபட்ச அரசியல் தீர்வையாவது காண்பதற்கு முயற்சிக்கலாம். ஆனால் அந்த முரண்பாட்டையே பிரதானமாக – மூலோபாயமாகக் கொண்டு ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் தமிழ் மக்களுக்குத் தீர்வை பெற்றுத்தரும் என்று நம்பக் கூடாது.
ஜனாதிபதி ராஜபக்சவின் தந்திரோபாயங்கள் வரையறைக்குட்பட்டன என்றாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் – இந்திய மேலாதிக்கத்திற்கும், சீனாவுக்குமிடையிலான முரண்பாடுகளைக் கையாண்டு தன்னுடைய பேரினவாத முதலாளித்துவ ஆட்சியை நிலை நிறுத்த முயற்சிப்பதை அவதானிக்கத் தவறக் கூடாது.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் பேரினவாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளும், மேலாதிக்கவாதிகளும் ஒரு போதும் நண்பர்களாக முடியாது. இலங்கையின் சாதாரண மக்களும், உலக நாட்டு மக்களும், உலக நாட்டு போராட்ட இயக்கங்களுமே நட்பு சக்திகளாக இருக்க முடியும்.
ஏகாதிபத்திய பூகோள மயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக பயன்படுத்த முடியுமெனின் உலக நாடுகளது இன முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி, ஆயுத நடவடிக்கைகளை ஊக்குவித்து யுத்தங்களை நடத்த ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் துணை புரிகின்றன. அல்லது அவற்றுக்குப் பின்னாலிருக்கின்றன. ஆயுத நடவடிக்கைகள், போராட்டங்கள் பூகோளமயமாதலுக்குப் பாதகமாக வருகின்ற போது அல்லது ஆளும் வர்க்கம் ஏகாதிபத்திய, மேலாதிக்க சக்திகளுடன் இணங்கிப் போகாத போது ஆயுத நடவடிக்கைகளும், போராட்டங்களும் முறியடிக்கப்படுவதை அச் சக்திகள் எதிர்க்கப் போவதில்லை. மேலும் அந்த முறியடிப்பு நடவடிக்கைகளையும் கொண்டு அரசுகளை ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் மிரட்டுவதுண்டு.
எனவே யதார்த்த நிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
நாடு கடந்த அரசுகள் என்பது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மேற் கொள்ளப்படும் தந்திரோபாய ரீதியாக ஒரு அழுத்த நடவடிக்கையாக இருக்கலாம். அதனை ஏகாதிபத்திய, மேலாதிக்க சக்திகள் அவற்றின் அக்கறைகளை நிலைநிறுத்துவதற்காக பாவிப்பதிலேயே கவனமாக இருக்கும். அதனால் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கதையாடல் இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்களை மேலும் தமிழ் மக்களுக்கு விரோதமான நிலைக்குத் தள்ளுவதற்குப் பேரினவாதிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழ் மக்களின் அடுத்த கட்ட போராட்டமல்ல. அது தமிழ் மக்களின் மேட்டுக் குடியினருடைய ஆதிக்க நடவடிக்கை. அதனை இலங்கைத் தமிழ் மக்கள் மீது தனிநாட்டுக் கோரிக்கையை திணித்தது போன்று நாடு கடந்த தமிழீழ அரசு என்பதையும் திணிக்கக் கூடாது.
தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான சுயாட்சி சமத்துவம் என்பவற்றை வென்றெடுக்க தமிழ் மக்களின் தொழிலாளர் வர்க்க, விவசாயிகளினதும் இடதுசாரிகள், ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் கூட்டுத் தலைமையிலான, ஏனைய அடக்கப்படும் தேசிய இனங்களான முஸ்லிம்கள், மலையக மக்களினதும் தேசிய அபிலாஷைகளை வென்றெடுக்கக் கூடிய, சிங்கள மக்களினது ஆதரவையும் பெறக் கூடிய வேலைத் திட்டமும் செயன்முறையும் அவசியம்.
இனியொரு:சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவான சூழ்நிலை நீடித்துச் செல்கிறது. அதேவேளை வட கிழக்கில் தமிழ் இனவாதம் வளர்ந்து செல்வதற்கான சூழலே காணப்படுகிறது. இந்நிலை எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையலாம் என்றே கருதப்படுகிறது? உங்கள் கருத்து என்ன?
தோழர் இ.தம்பையா:1990களில் குறிப்பாக எமது கட்சியினுடைய பங்களிப்புடன் ஜனநாயக மக்கள் இயக்கம் பின்னர் தேசிய ஜனநாயக இயக்கம் யுத்த எதிர்ப்பு இயக்கங்கள் போன்றவற்றினுடாக இனவாதத்திற்கு எதிராகவும், யுத்தத்திற்கு எதிராகவும் அரசியல் தீர்வுக்குச் சார்பாகவும் இன ஐக்கியத்திற்காகவும் அரசியல், சமூக, பண்பாட்டு ரீதியாக பல வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. எமது கட்சியின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட புதிய இடதுசாரி முன்னணி தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பல நடவடிக்கைகளை எடுத்தது. பின்னர் கலாநிதி விக்கிரமபாகு அதனை சீரழித்தார்.
இவ்வேலைகளின் காரணமாகவே ஜனாதிபதி சந்திரிகாவினாலும், பிரதமர் ரணிலினாலும் முன்னெடுக்கப்பட்ட (உரிய அர்த்தத்தில் இல்லாமல் இருக்கலாம்) சமாதான நடவடிக்கைகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பிருக்கவில்லை. ஆனால் 2002இற்குப் பிறகு யுத்த எதிர்ப்பு இயக்கத்தை தொண்டர் நிறுவனங்கள் நடத்தி, அவற்றை இறுதியில் சிங்கள மக்களின் பங்கேற்பில்லாத தனித்தமிழ் இயக்கங்களாக்கின. இதனால் யுத்த எதிர்ப்பு இயக்கங்களும் பிரிவினைக்கு ஆதரவான இயக்கங்களாக முத்திரை குத்தப்படுவதற்கு வழி விட்டுக் கொடுத்தது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்த சிங்களவர்கள் “சிங்களப் புலிகள் “என முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் பலிகள் முறியடிக்கப்பட்டதும் சிங்கள மேலாதிக்கம் உச்சத்தை அடைந்தது.இந்த பின்புலத்தில் சிங்கள மக்கள் பேரினவாதத்தின் பிடிக்குள் முழுமையாக மாட்டிக் கொண்டுள்ளனர். பேரினவாத அரசு தேசிய இனங்களை மிகவும் மோசமாக ஒடுக்குகின்ற அரசாக நிறுவப்பட்டுள்ளது. எனவே பேரினவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது பேரினவாதப் பிடிக்குள் மாட்டுப்பட்டுள்ள சிங்கள மக்களை விடுவிப்பதையும் அடக்கியதாக இருக்கும் போது அடக்கப்படும் தேசிய இனங்களின் தேசிய அபிலாஷைகளுக்குச் சிங்கள மக்களைச் சார்பானவர்களாக மாற்றுகின்ற இன்னொரு பக்கத்தையும் கொண்டதாகும். அதற்காக திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.
இனியொரு : முற்போக்கான தமிழ் தேசியவாதம் வளராமைக்கான காரணங்கள் என்ன? புலிகளின் இராணுவ ரீதியான தோல்விக்கும் பின்பு முற்போக்கு தேசியவாதத்தின் வளர்ச்சிக்கான நிலைமைகள் காணப்படுகிறது எனக் கருதுகிறீர்களா?
தோழர் இ.தம்பையா: தமிழ்த் தேசியவாதம் ஆதிக்கவாதம் பழமைவாதம், குறுந்தேசியவாதம் இடதுசாரி விரோதம், ஏகாதிபத்திய, மேலாதிக்க ஆதரவு போன்றவற்றின் அடிப்படையிலேயே கட்டியமைக்கப்பட்டது. அதனுடைய ஆயுதப் போராட்ட வளர்ச்சி ஜனநாயக விரோதம், மனித உரிமைகள் மறுப்பு போன்றவற்றினூடாகவே வளர்;ச்சியடைந்தது. இவைபற்றிய விமர்சனம் எதுவுமே இல்லாமல் சில தமிழ்த் தேசியவாதிகள் தனி நாடு என்பதை மாற்றி சமஷ்டி கோரிக்கையை விடுப்பதாலோ புலிகள் மீது மட்டும் குற்றச்சாட்டுகளை வைப்பதனாலோ மட்டும் தமிழ்த் தேசியத்தின் முற்போக்கான கூறுகளை காணமுடியாது.
எனவே புலிகளின் நிலைப்பாடு அதற்கு முன்பிருந்த பழைமைவாத, ஆதிக்கவாத, குறுந்தேசியவாத, இடதுசாரி விரோத, ஏகாதிபத்திய, மேலாதிக்க சார்பு, ஜனநாயக மறுப்பு போன்றவற்றிலிருந்து தகவமைக்கப்பட்டது. அதனால் இராணுவ ரீதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் மட்டுமே முற்போக்கு தேசிய சிந்தனை வளர்;ந்துவிடாது.
அடிப்படையில் தமிழ்தேசியத்துடன் இருந்துவந்த பிற்போக்குத்தனங்களுக்குஎதிரான நிகழ்ச்சி நிரலை கொண்டாதகவும், சாதியம், பெண்ணடக்குமுறை போன்றவற்றுக்கு எதிராக ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் ஏற்று அங்கீகரிப்பதாகவும் குறிப்பாக கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இனியொரு:யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்குலக நாடுகள் ஜனநாயகம், மனித உரிமைகள் என்றவகையில் இலங்கை அரசுடன் ஒரு கடும் போக்குடன் நடந்துக் கொள்வதாக தெரிகிறது. ஆனால் சீனா இலங்கை அரசை ஆதரித்து வருகிறது இதற்கு காரணமென்ன?
தோழர் இ.தம்பையா:கொசோவா தொடக்கம் உள்நாட்டு அரசாங்கங்களின் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல், ஜனநாயக மறுப்பு என்ற ரீதியில் வலிமையான, மேலாதிக்க நாடுகள் வலிமைக்குறைந்த நாடுகளில் தலையிட்டு வருகின்றன. இதில் அரசியல், பொருளாதார தலையீடு மட்டுமன்றி இராணுவத் தலையீடும் உள்ளடங்கும். அதேவேளை பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற பிரச்சினைகளில் தலையீடுகள் வெளிப்படையாக இல்லை என்பதிலிருந்து வலிமையான நாடுகள் தலையீடுகளைச் செய்ய வேறு வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன என்பது புரியும்.
ஒரு சவர்வாதிகார நாட்டுக்கு வெளியிலிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுவதும் அதே சர்வாதிகார நாட்டுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கப்படுவதும் இலங்கை அரசுடன் மட்டும் சம்பந்தப்பட்ட விடயமல்ல. அதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். இன்றைய சூழ்நிலையில் சோஷலிஸ கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள வடகொரியா, கியூபா போன்றன ஈடுபட்டிருந்தாலும் சோஷலிஸ நாடுகளோ, சோஷலிஸ நாடுகளின் முகாம்களோ இல்லை. அதனால் அவை தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருக்க சர்வதேச ரீதியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏகாதிபத்திய நாடுகள் சிறிய நாடுகளை நசுக்கும் போது அதே நிலை தமக்கு ஏற்படலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் பாதிக்கப்படும் சிறிய நாடுகளின் பக்கம் நிற்கின்றன. இலங்கை அரசிற்கு சீனா பல வழிகளில் உதவி வந்துள்ளது. அது சீனா ஒரு சோஷலிஸ நாடு என்ற நிலைப்பாட்டில் அணுகப்படக் கூடாது. 1980களுக்குப் பிறகு சீனா சோஷலிஸ நாடில்லை என்பதும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்க கட்சியில்லை என்பதும் என்னுடைய நிலைப்பாடு. நேபாள மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக சீன அரசும் கம்யூனிஸ்ட் கட்சியும் இருப்பது தெரிந்ததே.
சீனா மட்டுமல்ல, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளும் அணிசேரா நாடுகளின் இயக்கமும் கூட இலங்கை மீது யுத்தக்குற்ற விசாரணை மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவை அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை அவற்றின் சொந்த தேசிய அக்கறைகளைப் பாதுகாக்கும் அடிப்படையில் கொண்டுள்ளன. ஐ.நா சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கை பற்றிய தீர்மானம் எடுக்க முற்பட்ட போதும் பல நாடுகள் இலங்கை அரசிற்குச் சார்பாக இருந்தன. அதில் கியூபாவும் அடங்கியிருந்தது. அதடினப்படையிலே இலங்கை அரசு மீதான மேற்குலகின் கடுமையான போக்கை அல்லது யுத்தக்குற்ற விசாரணையை எதிர்த்து இலங்கையின் பக்கம் நிற்கின்றன. ஏனெனில் அந்நாடுகளின் விடயத்திலும் எதிர்காலத்தில் தலையீடுகள் வரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவதாகவே தெரிகிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முன்பு ஐ.நா சபையின் நடுநிலையில் அல்லது அதிகாரச் சமப்பாட்டில் நம்பகத்தன்மை இருந்தது. 1990களுக்குப் பிறகு ஐ.நா, அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்தியங்களின் கருவியாகிவிட்டது. ஐ.நா. சபை சாதகமாகச் செயற்படாத போது மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் தன்னிச்சையாகத் தலையீடுகளைச் செய்துள்ளன. அதனால் ஐ.நா சபை நம்பகத்தன்மை கொண்டதல்ல. எனினும் பாதிக்கப்படுபவர்கள் அதனூடாக நடவடிக்கைகளை எடுக்கக் கூடாதென்று சொல்லவில்லை. அவை உரிய விளைவை தராது என்றே கூறுகிறேன்.
இலங்கை அரசு மீதான யுத்தக் குற்றச்சாட்டு விசாரணையை ஐ.நா மேற்கொள்ளக் கூடாது என்று சொல்லவில்லை. அதற்கூடாக இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் வருமானால் தமிழ் மக்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம். இலங்கை அரசின் கடுமையான போக்கு கட்டுப்படுத்தப்படலாம். ஆனால் இந் நடவடிக்;கைகளின் பின்னால் ஏகாதிபத்திய சக்திகளின் அக்கறைகளே இருக்குமாயின் இறுதியில் இலங்கை அரசு நன்மையடைவதுடன், மேலும் மக்கள் விரோதமாக செயற்பட இடமுண்டு. அச் சக்திகளின் நோக்கங்கள் நிறைவேறிய பிறகு இலங்கை அரசிற்கு அவற்றின் ஆசீர்வாதமும் கிடைக்கலாம். அவ்வேளை மீண்டும் ஏமாற்றப்படுவது தமிழ் மக்களும் ஏனைய இலங்கை மக்களுமாவர்.
சர்வதேச சட்ட ஒழுங்குகளின்படி ஐ.நா. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை. ஆனால் தமிழ் மக்களை ஏமாற்றும் விதத்தில் நடப்பதை ஏற்க முடியாது.
இன்றைய ஏகாதிபத்திய பூகோளமயமாதல் சூழ்நிலையில் நாடுகள் தெளிவற்ற பலவிதமான அணிசேர்க்கைக்குள் இருக்கின்றன. சில வேளையில் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் ஒரு அணியில் இருக்கும் நாடுகள் இன்னொரு விடயத்தில் இன்னொடு அணிசேர்க்கைக்குட்படுவதை அவதானிக்கலாம்.
இந்திய அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நல்ல நண்பனாக இருந்தாலும் இலங்கை விடயத்தில் இந்தியா சில வேளைகளில் சுதந்திரமான முடிவுகளை எடுக்கின்றது. சீனா சம்பந்தப்படும் போது அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது. சீனாவும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளையே எடுக்கிறது. இது அவற்றிடையேயான ஆதிக்கப் போட்டியின் விளைவாகும்.
இந்தியா தன்னளவில் ஏகாதிபத்திய அடிப்படைகளையும் கொண்டுள்ளதாக நான் கருதுகிறேன். சீனாவும் ஏகாதிபத்தியமாக மாறலாம். எனவே அமெரிக்கா, ஐரோப்பா, சீனா என்பவற்றுக்கிடையேயான ஆதிக்கப் போட்டி இலங்கையைப் பலவழிகளிலும் பாதிக்கும்.
எனவே இன்று போராடும் மக்களினதும் அமைப்புகளினதும் சர்வதேசியம் என்பது சர்வதேச மக்களும் போராட்ட அமைப்புக்களுமேயன்றி அரசுகளை நம்புவதற்கில்லை, பரந்த சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பு செயற்பாடுகளில் தனிப்பட்ட நாடுகளின் ஜனநாயக விரோத, மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களும் அவசியமாகின்றன. சர்வாதிகார, பாசிச அரசுகள் தம்மை ஏகாதிபத்திய எதிர்ப்பாகக் காட்டிக் கொண்டாலும் அவை உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிருக்கவில்லை.
அரசுகளுக்கிடையேயான முரண்பாடுகளை போராட்டங்களுக்கு சாதகமாகக் கையாள்வதும் எமது சர்வதேச விவகாரங்களாகின்றன.
போராட்டங்களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு முக்கியப்படுவது போன்று ஏகாதிபத்திய எதிர்ப்பில் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
இனியொரு:சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை புதியதொரு பரிமாணத்தை அடைந்துள்ள நிலையில் மாக்சிச-லெனினிச கட்சி என்ற வகையில் அது குறித்த செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என கருதுகிறீர்கள்?
தோழர் இ.தம்பையா:இலங்கை அரசானது தேசிய இனங்களை அடக்குகின்ற சிங்கள பௌத்த அரசு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பிறகும் இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடாகவே இருந்து வருகிறது. (அடிப்படை முரண்பாடு வர்க்க முரண்பாடு) பிரதான முரண்பாடு தீர்க்கப்பட அல்லது தணிக்கப்பட தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட, அடக்கப்படும் அனைத்து தேசிய இனங்களுக்கும் தீர்வு வேண்டும் என்ற அடிப்படையில் அடுத்த கட்டப் போராட்டம் தொழிலாளர்கள், விவசாயிகளின் தலைமையில் வெகுஜன அரசியல் மார்க்கத்தில் சிங்கள மக்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். அடக்கப்படும் தேசிய இனங்கள் மீது அக்கறை கொண்டுள்ள அனைத்து சக்திகளும் பன்முகப்படட தளங்களில் ஒரு முன்னணியாக உடனடியாக முடியாவிட்டாலும் ஒரு பொது உடன்பாட்டுடன் செயற்பட வேண்டும்.
இவ்விடயத்தில் இலங்கை அரசிற்கும் அந்நிய அரசுகளுக்குமிடையிலான முரண்பாடுகளை தந்திரோபாயமாக இலங்கை அரசிற்கு எதிராக கையாளலாமேயன்றி அந்நிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலை நாம் முன்னெடுக்கவோ அல்லது அவற்றை நம்பி எமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவோ முடியாது.
ஏகாதிபத்திய பூகோளமயமாதல் போராட்டங்களுக்கு ஆதரவாக இல்லை என்பதில் இலங்கைத் தமிழர்களுக்குப் பட்டறிவுண்டு. அதேபோன்று சிங்கள மக்களை குறிப்பாக விவசாயிகளை மிகவும் மோசமாக பாதிக்கும் வகையிலேயே ஏகாதிபத்திய பூகோளமயமாதல் செயற்படுவதை அவர்கள் அறிவார்கள். பொருளாதாரப் பிரச்சினையும் எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது. இவ்விடத்தில் பேரினவாதத்தை மேவி சிங்கள மக்களுக்கு ஏனைய தேசிய இனங்களுடன் உறவை வளர்த்துக் கொள்வதற்கான அடிப்படையாக ஏகாதிபத்திய எதிர்ப்பு இருப்பதைக் காண்கிறோம்.
சிக்கலான அணிசேர்க்கைக்குள் நாடுகளை அழைத்துச் செல்லும் உலக ஒழுங்கு ஒரு புறமும் இலங்கை அரசின் யுத்தவெற்றி மறுபுறமும் சிங்கள மக்களை சிங்கள தேசிய அகங்காரத்திற்குள் தள்ளிவிடுவதற்கு சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு உதவி புரிகின்றது. இந்த சூழ்நிலையைச் சரியாக மதிப்பிட்டே தந்திரோபாயங்களை வகுத்து புரட்சிகர ஸ்தாபனங்களைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
அடிப்படை வர்க்க முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தும் விதத்தில் சிங்கள மக்களிடையேயும், அதை ஏனைய இனங்களிடையேயும் முன்னெடுக்கும் அதேவேளையில் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கும் அடக்கப்படும் தேசிய இனங்களுக்கிடையேயான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தும் விதத்தில் அடக்கப்படும் தேசிய இனங்களிடையேயும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இது தற்போதைய நிலை. இது மாற்றமடையலாம்.
சிங்கள சிறு முதலாளித்துவ குறிப்பாக ஜே.வி.பி ஹெலஉறுமய போன்றவற்றின் நிகழ்ச்சி நிரலை முதன்மைப்படுத்தி முதலாளித்துவ ஆளும் வர்க்கம் அதனைக் கையிலெடுத்துக் கொண்டு செயற்பட்டது. அது அதனை நீண்ட தூரம் எடுத்துச் செல்ல முடியாது. சிங்கள ஆளும் வர்க்கம் தந்திரோபாய ரீதியாக சிறுமுதலாளித்துவ நிகழ்ச்சி நிரலை கையேற்றிருந்தது. அதற்கு வரையறையுண்டு.
தமிழ், முஸ்லிம் ஆளும் ஆதிக்க வர்க்கம் கடந்த 30 வருடங்களுக்கு மேல் தமிழ்இ முஸ்லிம் சிறு
முதலாளித்துவ நிகழ்ச்சி நிரலை முதன்மைப்படுத்திக் கொண்டே இருந்தது. தற்போது (தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றன) தனது பழைய ஆளும் வர்க்க நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளது. புலிகள் இயக்கத்தின் கையில் இருந்தது பெருமளவிற்கு சிறுமுதலாளித்துவ நிகழ்ச்சி நிரலே. அதனாலேயே அது தொழிலாளர் விவசாயிகளுடன் இணைய முயலவுமில்லை. அத்துடன் அதனால் சிங்கள ஆளும் வர்க்கத்திடமோ, ஏகாதிபத்திய, மேலாதிக்க சக்திகளுடனோ அடிபணிந்து வாடிக்கையாக சமாதானமாக பூரணமாக கொடுக்கல் வாங்கல்களை செய்ய முடியவில்லை.
சிறுமுதலாளித்துவ வர்க்கம் ஆளும் வர்க்கமாக அல்லது ஆளப்படும் வர்க்கமாக மாறாது விட்டால் அதனுடைய இருப்பு பிரச்சினையே அதன் நிகழ்ச்சி நிரலை சுதந்திரமாக முன்னெடுக்கவும் முடியாது. சிறு முதலாளித்துவ வர்க்கம் தன்னளவில் ஆளும் வர்க்கமல்ல, அதன் நிகழ்ச்சி நிரலும் அப்படியே ஆளும் வர்க்க நிகழ்ச்சி நிரலாக நின்றுபிடிக்க முடியாது.
எனவே சிங்கள சிறுமுதலாளிதுவ வர்க்கமும், தமிழ் சிறுமுதலாளித்துவ வர்க்கமும் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைய வேண்டும் அல்லது முதலாளித்துவ ஆளும் வர்க்கமாக மாற வேண்டும். இல்லாவிட்டால் அதன் இருப்பு சிக்கலாகிவிடும். பெருமளவான சிறுமுதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்துடனேயே ஐக்கியப்பட வேண்டியது தவிர்க்க முடியாது.
ஆகவே அடக்கப்படும் தேசிய இனங்களின் போராட்டமானது மீண்டும் சிறு முதலாளித்துவ நிகழ்ச்சி நிரலாகவோ அவ்வர்க்கத்தின் கைகளிலோ எடுக்கப்படுவது முன்னோக்கியே நகர்வாக இராது. அது தமிழ் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் கைகளுக்குட் செல்லுவதற்கும் வாய்ப்பில்லை. சென்றாலும் அதனுடன் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நீண்ட நாள் பயணிக்க முடியாது,
இனியொரு :மாக்சிச-லெனினிச – மாவோயிச புரட்சிகள் நடைபெற்ற நாடுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை அதற்கப்பாற்பட்டு நின்று கியூபா தொடர்ந்தும் சோஷலிஸ நாடாக விளங்குகிறது எனக் கூறப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?
தோழர் இ.தம்பையா:தோழர் மாவோ சோஷலிஸ ஆட்சிமுறைக்குள்ளும் வர்க்கப் போராட்டம் தொடரும் என்றும், பண்பாட்டுப் புரட்சியின் தொடர்ச்சியான முக்கியத்துவம் பற்றியும் கூறியிருந்ததை நினைவு படுத்தினால் சோஷலிஸ நாடுகள் மீள முதலாளித்துவ நாடுகளாகியமை பற்றி விளங்கிக் கொள்ள முடியும். போராட்டம் தொடருமானால் வெற்றியும் வரும் பின்னடைவும் வரும் என்பதுதானே பொருள். இது அரசியல் ரீதியான அடிப்படை. பொருளாதார ரீதியாக சோஷலிஸ கட்டமைப்பை கட்டியெழுப்பும் போது பல பரீட்சார்த்தங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அதில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை முதலாளித்துவ ஒட்டுதல்கள் செய்து சரிகாட்ட முடியாது. முதலாளித்துவ உலக ஒழுங்கின் இருப்பும் சோஷலிஸ நாடுகளுக்குத் தொடர்ச்சியான சவாலாகவே இருக்கும்.
தலைமை தாங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தத்துவம் ஜனநாயகமும் மத்தியத்துவமும் ஆகும். அதாவது ஒரு முடிவை எடுக்கும் வரை பூரண ஜனநாயகம் முடிவெடுத்த பிறகு மத்தியத்துவமே ஆதிக்கம் செலுத்தும். இதில் ஜனநாயகம் இல்லாது மத்தியத்துவம் மட்டும் இருக்கையில் அதிகாரத்துவம் ஆதிக்கம் செலுத்தி ஜனநாயகத்தையே இல்லாமலாக்கி விடும். அதேபோன்று முடிவெடுக்கப்பட்ட பிறகு மத்தியத்துவமில்லாமல் ஜனநாயகம் என்ற போர்வையில் பன்மைத்துவம் நிலவ முடியாது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் இருப்பிற்கு அதிகாரத்துவமும், பன்மைத்துவமும் ஆபத்தானவை. கம்யூனிஸ்ட் கட்சிகளில் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டே சீரழிவுகள் ஏற்பட்டுள்ளன.
எனவே சோஷலிஸ கட்டுமானத்திலும் வர்க்கப் போராட்டம் தொடராமை, பதிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவ பொருளாதார ஒட்டுவேலைகள் செய்யப்பட்டமை, முதலாளித்துவ உலக ஒழுங்கு, கம்யூனிஸ்ட் கட்சியில் ஜனநாயகமும் மத்தியத்துவமும் இல்லாமை பண்பாட்டு ரீதியான தொடர்ச்சியாக புரட்சிகள் முன்னெடுக்கப்படாமை போன்றவற்றை சோஷலிஸ நாடுகள் மீள முதலாளித்துவ மயமானமைக்குப் பொதுவான சில காரணங்களாகும். இதை விட குறிப்பாக சமூகக் காரணிகளும் இருக்கின்றன.
கியூபா சோவியத் யூனியனின் திரிவுவாதத்திற்குள் மூழ்காமல் நின்று பிடித்து ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குறிப்பாக ஏகாதிபத்திய பூகோளமயமாதலுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. அது சோஷலிஸ கட்டுமானத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்னும் சோஷலிஸ கட்டுமானத்தில் பல விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டியிருக்கிறது. அதனுடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு அதனை வலுவாக வைத்திருக்கிறது.
இதைவிட வடகொரியாவும் சோஷலிஸ கட்டுமானங்களில் குறிப்பிடத்தக்களவு வெற்றி கண்டுள்ளது.
இனியொரு :புதிய-ஜனநாயக கட்சி முனைப்பான பிரச்சினைகளில் ஒதுங்கி நிற்கும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது என்ற குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா? புலிகள் மேற்கொண்ட ஒடுக்கு முறைகளை விமர்சிப்பதிலும் – எதிர்ப்பதிலும் இன்று அரசின் இன ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதிலும் இவ்வாறு நடந்து கொள்கிறது எனக் கூறப்பட்டு வருகிறது – இது குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?
தோழர் இ.தம்பையா:எங்களது நிலைப்பாட்டை பொது ஊடகங்களில் அதிகம் பார்க்க முடியாது. ஏனெனில் அவற்றில் நாம் இருட்டடிப்பு செய்யப்படுகிறோம். எமது மாநாட்டு அறிக்கைகள், பத்திரிகை அறிக்கைகள், வெளியீடுகள் போன்றவற்றிலேயே எமது நிலைப்பாட்டை அறிய முடியும்.
இன ஒடுக்கலைப் பிரதான முரண்பாடு என்று சொல்லுகிற நாம் அரசிற்கு எதிரான – இன ஒடுக்கலுக்கு – எதிரான போராட்டங்களில் ஒதுங்கி நிற்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியவாத அமைப்புக்களுடன் ஐக்கியப்பட்டு அல்லது பொது உடன்பாட்டுடன் வேலை செய்வதற்கேற்ற தமிழ்த் தேசியவாதிகளின் பொது வேலைத்திட்டம் எதுவும் இருக்கவில்லை. நாம் அவ்வப்போது பொது வேலைத்திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் செய்து வந்திருக்கிறோம். அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை. நாம் தனி நாடு என்ற கோஷத்திற்கு ஆதரவாக இல்லை. சுயநிர்ணயம்-சமத்துவம்-சுயாட்சி என்ற அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடு, ஜனநாயக மறுப்பு மனித உரிமைகள் மீறல் போன்றவை பற்றி எமது விசமர்சனங்களைச் சொல்லத் தவறவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசின் தேசிய இன ஒடுக்கலுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அமைப்பு என்ற ரீதியில் நாம் அதனையும் இலங்கை அரசையும் சமப்படுத்திப் பார்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்புடன் எங்களுக்கு தொடர்போ உடன்பாடோ இருந்ததில்லை. நாங்கள் தேசிய இனப்பிரச்சினையில் விடுதலைப் புலிகளுக்கு எதிர்ப்பு அல்லது சார்பு என்றிருந்த பிரதான ஓட்டத்தில் இருக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் தரப்பில் இருந்து வருகிறோம். எமது அரசியல் இன ஒடுக்கலுக்கு எதிரானதாகும். அதேவேளை விடுதலைப் போராட்டம் என்ற பேரில் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக விரோத, மக்கள் விரோத, அழிவுபூர்வமான எந்தவொரு நடவடிக்கையையும் செய்தவர் யார் என்ற பேதமின்றி கண்டிக்கத் தவறவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பினால் எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக நாம் இலங்கை அரசின் கைகளைப் பலப்படுத்துபவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தை எவ்வித தனிப்பட்ட காய்தல் உவத்தலுக்கப்பாலேயே அணுகி வந்துள்ளோம். ரசிகர் கூட்டத்தை உருவாக்கும் நோக்கிலே தொழிலாளர் வர்க்க அரசியலைச் செய்ய முடியாது.
நாங்கள் ஜே.வி.பியுடன் எந்தவொரு உடன்பாட்டையும் கொண்டவர்களல்லர். 1971இலும் 1988இலும் ஜே.வி.பியை விமர்சித்த அதேவேளை ஜே.வி.பி மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச ஒடுக்கு முறைக்கு எதிராக எமது அரசியலைச் செய்தோம். ஜே.வி.பியினருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிரான இயக்கத்தில் எங்கள் பொதுச் செயலாளர் உட்பட பல தோழர்கள் ஈடுபட்டிருந்தனர். 1988இல் அவர்களுக்கு எதிரான அரச நடவடிக்கைகளைக் கண்டித்தது மட்டுமன்றி அவர்களினால் செய்யப்பட்ட அராஜகங்களை எதிர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். ஜே.வி.பி இடதுசாரி தலைவர்களைக் கொன்று குவித்த போதும் நாம் அரசின் அடக்கு முறைகளுக்குத் துணை போகவில்லை.
எமது போராட்ட வரலாற்றைப் பார்த்தால் நாம் எவ்வித போராட்டத்திலும் கலந்து கொள்ளாமலோ, எங்கோ ஒரு மூலையிலோ இருக்கவில்லை. மாறாக முன்னணியில் நின்றிருக்கிறோம். எனவே முனைப்பான பிரச்சினைகளில் ஒதுங்கி நிற்கவில்லை என்பது புரியும். நாங்கள் எல்லாத் தேசிய இனங்களையும் ஐக்கியப்படுத்தும் வேலைத் திட்டத்தையும் செயற்திட்டத்தையும் கொண்டுள்ளோம்.
இனியொரு:வர்க்கப் புரட்சியை நோக்காகக் கொண்ட உங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றி?
தோழர் இ.தம்பையா:இதுபற்றி நாம் நிறையவே விளக்கமளித்துள்ளோம். ஆளும் வர்க்கத்தினரால் பறிக்கப்பட்ட மக்களின் கைகளிலிருந்த அதிகாரத்தை மீண்டும் மக்களின் கைகளுக்கு மீட்டெடுப்பதற்கான அரசியலை செய்யும் நாம் முதலாளித்துவ அரசியலை பாதுகாப்பதற்காக தேர்தல்களில் பங்கெடுக்கவில்லை. தேர்தலில் பங்கெடுப்பது எல்லா வேளைகளிலும் சரியென்றும் அல்லது பகிஷ்கரிப்பது எல்லா வேளைகளிலும் சரியென்றும் நாம் கூறவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே நாம் தேர்தலில் பங்கெடுப்பதா அல்லது பகிஷ்கரிப்பதா என்று தீர்மானித்து வருகிறோம்.
தேர்தல்களில் பங்கெடுக்கும் கட்சிகள் எல்லாம் எதிர் புரட்சிகர கட்சிகளென்றோ பகிஷ்கரிப்பனவெல்லாம் புரட்சிகர கட்சிகளென்றோ முத்திரை குத்திவிட முடியாது.
தேர்தலில் நாம் பங்கெடுப்பதனால் தேர்தலின் மூலம் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியுமென்ற நம்பிக்கை இல்லை. மக்களுக்கும் அவ்வாறு நம்பிக்கையூட்டவில்லை. தேர்தலில் பங்கெடுப்பது ஒரு விதமான போராட்டம் வெற்றி பெற்றால் குறிப்பிட்ட சபையிலுள்ளும் எமது போராட்டம் தொடரும். வலப்பனை பிரதேச சபை உறுப்பினரான இருக்கும் எமது கட்சியின் மலையகப் பிரதேச செயலாளர் தோழர் ச. பன்னீர்செல்வம் அவ்வகையான போராட்டத்தையே செய்து வருகிறார்.
முதலாளித்துவ வர்க்கத்தின் இரு பிரிவுகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அதிகாரத்தை மாற்றிக் கொள்வதற்காக அல்லது ஒரே பிரிவினர் அதிகாரத்தைத் தம்மிடம் வைத்துக் கொள்வதற்காகச் சம்பிரதாயபூர்வமாக நடத்தப்படும் பம்மாத்தே முதலாளித்துவ தேர்தல் என்பதில் எமக்கு இரு கருத்தில்லை. அதில் பங்கெடுக்கும் போது அப் பம்மாத்தை அம்பலப்படுத்துகிறோம். வெற்றி பெற்றால் தொடர்ந்து அம்பலப்படுத்தி மக்களின் கைகளுக்கு அதிகாரத்தைக் கொண்டு செல்வதற்காகத் தொடர்ந்து ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடுவோம் ஆனால் அப் போராட்டம் பாராளுமன்றத்துக்குள்ளே வெற்றி பெற்று முறு;றுப் பெறுவதில்லை. அது ஒரு தளம் மட்டுமே. மேலும் பன்முகப்பட்டதே போராட்டம்.
I have known Thambiah since childhood, we both went to same school and same university, he is one of those rare quality manwho never compromise, his views are based on his conviction, I have learned to compromise due rat race, but Thambiah never, I have diffed with him on political views, but I have my great respect for him. He is fully deserved to represent indian tamils in Sri lanka
தோட்டக்காட்டார் எனக் கீழாகப் பார்க்கப்பட்ட எம் உறவும் சொந்தக்காரருமான மலையக மண்ணீல் இருந்து வந்த முரளீதரன் தமிழ் மகன் ஆனார்.இந்திய வம்சாவழித் தமிழ்ர் கூலிகளாகவே அறீயப்படுகின்றனர் எம் மக்களது நிலை மாறூம் எனும் நம்பிக்கை நமது சகோதரர்களீட்ம் விதைக்கப்பட வேண்டும்.
தோழர் தம்பையாவின் நேர்காணல் இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் தேசிய இனப் பிரச்சனை குறித்த ஓரளவு தெளிவான கருத்தை முன்வைக்கிறது. குறுந்தேசிய வாதிகளின் பிடியிலிருந்து தேசிய விடுதலைக்கான போராட்டத்தை விடுதலை செய்து அதனை சரியான திசைவழி நோக்கி நகர்த்தும் பொறுப்பு இடதுசாரிகளின் கடமை என்பது உணரப்பட்டிருப்பது போல் தெரிகிறது. பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைப் பேரினவாதிகளைச் சார்ந்துநின்று இடது சாரிகள் நிராகரித்த காலமெல்லாம் மலையேறி விட்டது போலும்! நம்பிக்கை தரும் நேர்காணல்!!
நாம் பிறந்த தேசத்தில் இருந்து வரும் அதாவது மாறுபட்ட தளத்தில் இருந்து வரும் குரல். இவைகள் அந்த தளத்திற்கு உரியது.
2. பேட்டி கண்ட தளம் என்பது மாறுபட்டது. பேட்டி கண்ட தளம் தன்னுடைய தளத்தில் என்ன செய்யலாம் என்பது பற்றி பரர்க்கப்பட வேண்டும் அதாவது வாழும் தேசத்தில் எவ்வாறு புலம்பெயர்ந்தவர்களை புரட்சிகர சக்திகளாக கட்டமைப்பது தொடர்பானது. வாழுகின்ற நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தவர்களுடன் இணைத்து வர்க்கப் புரட்சிக்கு தயார்செய்வது. வரலாற்றுக் கடமையல்லவா? இதற்கு என்ன செய்தீர்கள்.
இலங்கையின் நிலவரம் பற்றி அப்புறம் பார்ப்போம். வாழும் தேசத்தில் உழைக்கும் வர்க்கத்திற்கு ஆற்றிய பங்கு என்ன? உங்களுக்கு புலம்பெயர் வர்க்க உறவுகளுடன் ஒன்றித்து செல்லமுடியவில்லையா? அதற்கான காரணம் என்ன? புலம் பெயர்ந்தும் நாம் எமது செளகரியங்களுக்காக பிறந்த தேசத்தைப் பற்றி அக்கறைப்படுவது எவ்வளவு யதார்த்தமானது?
புலம்பெயர் தளத்தில் நாம்வர்க்கப் புரட்சிக்கு ஆற்றிய பங்கு என்ன? வர்க்கப் புரட்சிக்கு எவ்வாறு நம்பிக்கையாக செயற்பட்டிருக்கின்றோம்? எமது செய்பாட்டுத் திறன் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதா? ஏம்மால் இயங்கமுடிகின்றதா? நாம் இயங்க முயற்சித்துள்ளோமா? புலம்பெயர் தளத்தை விட பிறந்த பூமி உயர்வானதானதாக ஒரு பாட்டாளி வர்க்கப்புரட்சியை ஏற்றுக் கொள்பவர்களுக்கு இருக்க முடியுமா?
இவை இரண்டு தளத்தைப் பற்றிய மாறுபாடான நிலைப்பாடு பாட்டாளிவர்க்கச் சிந்தனைக்கு அதாவது சர்வதேசியவாதத்திற்கு இசைவானதா?
முதலில் நாம் இங்கிருந்து தொடங்குவோம்; பிறகு பிறந்த வளர்ந்த தளத்தைப் பற்றிய கரிசனைக்கு வந்து பிறந்த தேசத்தின் வியாபாரத்தில் எவ்வாறு ஈடுபடலாம் என்பது பற்றி விவாதிப்போம்.
புளீயங்கொட்டையாய் இருப்பதென்றே முடிவு செய்து விட்டால் யாரால் மாற்ற முடியும்.பெரியவர் மலையக மக்களது சோகங்கலை சொல்லுகிறார் கேட்டு எதையாவது செய்வீர்கள் என்றால் வெள்லைக்கு செம்பு தூக்குங்கள் எஙிறீர்கள்.வறூமையில் வாழும் மலையகத் தமிழ்னுக்கு சோருதான் தேவை அதை தொண்டமான் செய்யவில்லை மலையகத்தில் மாற்றூக் கட்சி தோன்றூவதற்கு தடையாய் இருந்ததை தவிர.இன்னும் மலையகம் போவதற்கு நீண்ட நெடுந்தொலைவு இருக்கிறது.பணீகள் அதிகம் இருக்கின்றன மலையகத் தமிழனதும் வாழ்க்கை மாற வேண்டும்.சின்ன வயதில் நான் மலையக்த்தில் வாழ்ந்ததால் பேசுகிறேன் மலையகத்தில் நல்ல பள்ளீக் கூடங்களூம் மட்டுமல்ல போதுமான ஆசிரியர்கலும் இல்லை.ஒரு முரலிதரனும், சில தொண்டைமன் களூம் மலையக முன்னேற்றம் அல்ல.
“பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைப் பேரினவாதிகளைச் சார்ந்து நின்று இடது சாரிகள் நிராகரித்த காலம்” இன்னமும் மலையேறவில்லை.
பேரினவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்த ல.ச.ச.ச.வும் கம்யூனிஸ்ற் கட்சியும் திருந்துமென நான் நம்பவில்லை. இடதுசாரி முகமூடியணிந்த ஜே.வி.பி.யும் ம.ஐ.மு.வும் திருந்துமென நான் நம்பவில்லை.
புதிய ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு 1978இல் அக் கட்சி உருவான காலம் தொட்டுத் தெளிவாகவே உள்ளது.
நவ சமசமாஜக் கட்சி போன்று அது சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டதில்லை. (நவ சமசமாஜக் கட்சி சம்பந்தன், குமார் பொன்னம்பலம், மனோ கணேசன், இப்போது சிவாஜிலிங்கம், சிறீ காந்தா ஆகியோருடன் கைகோத்து நின்ற காட்சிகள் மறக்கக் கூடாதவை.
சரியான நிலைப்பாடு மாதிரித் தெரிந்தால் மட்டும் போதாது. அது தெளிவும் உறுதியும் கொண்ட கொள்கை அடிப்படையில் அமைய வேண்டும்.
i agree wih u,
இன்றைக்குப் புலம் பெயர்ந்த்த தமிழரிடையே இலங்கை நிலவரங்கள் பற்றிய கவலைகள் முக்கியமாக உள்ளன.
என்ன செய்வது? அங்கே தேர்தல் நடக்கும் சூழலில் அந்த அக்கறைகள் வலுவாக வெளிப்படுகின்றன.
வர்க்கப் போராட்டம் பற்றிப் அறிந்து அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பவர்கள் எதையாவது நடைமுறையில் செய்யத் தொடங்கினால் மற்றவர்களும் பின்பற்ற முடியும்.
வாழும் தேசத்தில் உள்ளவர்களின் சமூக விழிப்பு நிலை என்ன? அவர்களைச் சென்றடைய வழி என்ன? வர்க்கப் புரட்சிச் சக்திகளுடன் தொடர்புள்ள sun போன்ற புரட்சிவாதிகள் தம் வர்க்கப் புரட்சிச் சக்திகள் மூலம் சில முயற்சிகளை முன்னெடுத்தால் ஒருவேளை இன்று பிந்தங்கியுள்ளவர்களைச் செயலில் இறக்கி விட இயலும்.
சிவா சார் நாமளும் இருக்கறோமுன்னு கொஞ்சம் நவருங்கையா. தம்பையா இத்தன நாளு மலையகதமிழருக்கு ஒண்ணுமே செய்யாமெ இருக்க புலியா காரணமைய்யா? வூட்டுல வறுக்கறவேலையே செய்ய மாட்டாதவுங்கல்லாம் வர்க்கபோராட்டம் பண்ணபோறாவுங்களாம். முரளிதரன் தோட்டக்காட்டாருன்னு பார்க்கபட்டாரா? ஏனுக்க மலையகதமிழருங்க உள்ளே மேலேயிருந்து புளியற ஆளுங்க பரம்பரை இல்லீயா முரளிதரன்? அவரு என்னிக்கு தோட்டக்காட்டாருன்னு பார்க்கப்பட்டார்?
புதிய ஜனநாயகக்கட்சி வசந்தம் மேல்மாடியை வெச்சிருக்கமட்டுந்தேன் லாயக்கு. கட்சி தொடங்கன காலத்துலருந்து ஒழுங்கா பண்ணனது கட்சிக்கு பேர அப்பப்போ மாத்தினது மட்டுந்தேன்.
ஓய் மாப்பாசான் மகிந்தவின் கால் நக்கி கால் கழுவி வாழ்ர பொழப்பெல்லாம் பொலப்புன்னு கொமன்ட் அடிக்கிர லூசு வேலைய உட்டுப்புட்டு தேயில தோட்டத்த சிறு முதலாளி மாறுக்கு பிரிச்சி கொடுக்கப் போரானுகய்யா வாரியலா போராடுவோம் கோத்துமல திட்டமிருக்குள்ள மேழ்கொத்துமல அப்ப போராடினதுக்காக இன்னும் தம்பையா கட்சி பயலுக ரிமான்டுல கெடக்குரானுக
தம்பைய்யாவ நாடுகடத்த முடியாத காரணத்தால வெளிநாட்டு தூதுவர் வேல குடுத்து மயக்கப்பாதானுகய்யா 100கிராம் கருவாட்டுக்காக கட்சி தாவுர காலத்துல என்னா ஒசத்தி பதாத்தியலா உண்ம என்னக்கும் மரையாதுல
மாப்பசான் அண்ணே
மேல் கொத்மலைன்னு ஒன்னுப் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நெனச்சேன். யாரு போராடினாங்க யாரு காட்டிக் குடுத்தங்கன்னு நல்லா வெசாரிச்சிப்பிட்டு பேசுங்க.
ஆசிரியர் நெயமனம்னு வந்தப்போ யாரு போராடினாங்க யாரு காட்டிக் குடுத்தங்கன்னு நல்லா வெசாரிச்சிப்பிட்டு பேசுங்க.
புதிய ஜனநாயகக் கட்சி பேர எப்பப்போ மாத்தினதுங்கறிங்க?
கம்யூனிஸ்ட்டுனு சொல்லிக்கிட்டு ராமையா தொடங்கி, டியூ குணசேகர ,100 பூக் கூடேக்காரன் வரேக்கும் ரொம்ப பேரு அசிங்கம் பண்ணநேரத்துலெதாம் பேரெ 1989லே மாத்துனாங்க.
தப்புங்கறீங்களா?
தோட்டக்காட்டாங்கற பேச்செல்லாமே அவன் கூலிக்காரன்னா மட்டுந்தான்.
அவங் கய்யிமேல துட்டு வந்துடுச்சுன்னா “ஓட்டப்பர் உடையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பராய் விடுவார் உணரப்பா நீ” யின்னு பாரதிதாசன் சொன்னாரே, அந்த மாதிரியாப்பூடும் அண்ணே.
புதிய ஜனநாயகக் கட்சிக்கு புலம் பெயர் நாடுகளிலுள்ள சிலர் உதிரிகளாகவும், அமைப்பாகவும் ஆதரவளிக்கிறார்கள் என்றால் அவர்கள் அந்த்தக் கட்சியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று அர்த்தப்படுத்தலாகாது. அதன் சில முற்போக்கான பகுதகளோடு உடன் பட்டுக்கொள்கிறார்கள் என்பது தான் உண்மை. கட்சியின் பிற்போக்கான கூறுகள் மேல்நிலைக்கு வரும் போது அது தீவிர விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். கட்சியும் தன்னைச் சுய விமர்சன அடிப்படையில் மீளாய்வு செய்வதும் தன்னைச் செழுமைப்படுத்திக் கொள்வதும் அவசியமாகிறது. தவறும் பட்சத்தில் பேரின வாதத்திற்கு எதிரான போராட்டத்தை கை நளுவ விட்டு விடுவது மட்டுமல்ல அதற்குத் துணைபோகும் நிலைக்கும் கூடத் தள்ளப்படலாம்.
நீங்கள் புனைகதை எழுதலாம்.
நல்லாகவே கற்பனை செய்கிறீர்கள்.
புதிய ஜனநாயக கட்சி தனது முப்பதாண்டு வரலாற்றில் போராட்ட வழிமுறைகளூடாகவும் புதிய பூமி வெளியீடுகள் மூலமாகவும் மண்ணில் இருந்து மக்களை விழிப்புணர்வுடையவர்களாக ஆக்கியிருக்கிறார்கள். காலகட்டத்தில் வெளியிடப்பட்ட புதிய பூமி இதழ்கள் பிரசுரங்கள் மூலம் என்னையும் என்போன்ற இளைஞர்களையும் சரியான வகையில் வழிநடாத்தியிருக்கிறார்கள். யாழ் மண்ணில் இருந்து தாயகம் இதழை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் வெளியிட்டிருக்கிறார்கள். நான் நினைக்கிறேன் எக்காலத்திலும் பிரபாகரன் புகழ் பாடாமல் மண்ணில் வெளிவந்த இதழ் தாயகம் ஒன்றே எனக் கருதுகிறேன்
You’ve written about the reality but many tamil people and also the malyaga people haven’t realised this yet . Many people won’t agree and accept this reality. But one day they will wake up and will realise this truth.
I’ve read your article and I agree to some of your points there are also some points I can’t agree with
Can you be specific on what you agree or disagree with.
That will help fruitful discussion.
Comrade Thanbaiah’s replies emerge from his Marxian approach.To that extent they are OK. Yet, todays realities pose very tough questions. Accidents tend to overrule necessities. Specific tactics are required to deal with specific conditions. Classical approach,however sound it may look theoritically is found insufficient to tackle todays complicated scene.If we continue to repeat it adnauseum, we tend to move away from the masses.How to save the Sinhalease people from the clutches of chavnists. A broad based front of all downtroden and neglected sections should be built up to secure peace in the island nation.
” ….அதில் 1977ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நுவரெலியா-மஸ்கெலியா தொகுதியில் 7 ஆயிரம் ஏக்கர் பெருந் தோட்டக் காணியை சுவீகரித்து, பிராதான வீதியின் அருகில் திட்டமிட்ட பேரினவாத குடியேற்றத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து நான…..”ஆனால் புதிய ஜனநாயக கட்சியின் பிதாமகர் தோழர் மணியம் அந்த காலங்களில் சிறிமாவோ அம்மையாருடன் எந்த அடிப்படையில் கூட்டு வைத்தார் ,ஏன் சிறிமாவோ அம்மையாருக்கு தேர்தல் பிரசாரத்தில் எல்லாம் ஈடு பட்டார் என தோழர் தம்பையா விளக்குவாரா.?
1976 இல் தோழர் மாவோவின் மரணத்தை அடுத்து சீனாவில் நடந்த அசம்பாவிதங்களும் ,தோழர் சண்முகதசனுடன் சீன உடனடியாக உறவுகளை முறித்ததும் ,தோழர் மணியம் ,தோழர் செந்திவேல் போன்றோர் கட்சியை உடைத்ததும் ,1980 வரை சீனாவுக்கும் டென்சியாவோ பென்குக்கும் முண்டு கொடுத்ததற்கும் இன்று வரை அவர்கள் பதில் சொன்ன தில்லை .ஏன் ??
சொல்லமாட்டாங்களய்யா!
சும்மா வெயிற்பண்ணாதீங்க!!
காலம்காலமாக நம்பி வந்த தலைமைகளால் ஏமாற்றப்பட்டுச் சிதைந்து போன மலயக மக்களுக்கு ஏற்றவொரு தலைமை இதுவரையில் ஏற்படவில்லை. சிங்கமலையைக் குடைந்து குடைந்து “உடரட்டமெனிக்கே”க்குச் சுரங்கம் அமைத்துக் கொடுத்து எலும்பும் தோலுமாய்க்கிடக்கின்ற அந்த மனிதரின் முதுகுகளில் உட்கார்ந்து சவாரிவிடவே ஒவ்வொரு அரசியல்வாதியும் இதுவரை முற்பட்டிருக்கின்றான். தோழர். தம்பையா அவர்களின் நேர்காணலில் நம்பிக்கை தெரிகிறது. பல மூடிமறைக்கப்பட்ட விடயங்களை முன்னுதாரணமாக்குகின்றார். சிவனுலட்சுமணன் கொலை உட்பட.//பிரதான வீதியின் அருகில் திட்டமிட்ட பேரினவாத குடியேற்றத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து நான் உயர்தரம் படிக்கும் போது பாரிய போராட்டம் நடைபெற்றது. அதில் வட்டகொடை, யொக்ஸ்போர்ட் தோட்ட இளைஞன் சிவனு லட்சுமணன் தலவாக்கொல்ல டெவன் தோட்டத்தில் 1977ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து பாடசாலை மாணவர்களாகிய நாம் ஊர்வலம் சென்ற போது மிருகத் தனமாகத் தாக்கப்பட்டதுடன் சிலர் கைது செய்யப்பட்டோம்// என்கின்ற உருக்கமான வாசகங்கள் உள்ளத்தை தொடுகின்றன. அதனையொத்த பேரினவாதிகளின் திட்டமிட்டகுடியேற்றங்கள் இன்று வடக்குக் கிழக்கில்முன்னரைவிடவும் மோசமாக இடம்பெறுகிறது,எப்படி எதனால்,எவர்மூலம் தடுப்பது என்பதெல்லாம் தொக்கி நிற்கின்ற கேள்விகள். சோல்பரி அரசியல் யாப்பிற்குப் பின்னதாக இருந்த இத்தனை காலகட்டத்திலும்,பேசவும், போரிடவும் வல்லமையுமுள்ள அத்தனை சந்தர்ப்பங்களையும் கைநழுவவிட்ட அல்லது வேண்டுமென்றே கோட்டைவிட்ட இடதுசாரிக்கனவான்கள் இனிஒரு போராட்டத்தை வழிநடாத்தவல்லமையுடைய பாரிய போராட்டக் கட்டமைப்பையும், போர்க்குணமுள்ள மக்களையும் கட்டமுடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி மாசேதுங்கை அதிக தடவை சந்தித்தார் என்று பெருமை பேசப்படுகிற சண்முகதாசன் உள்ளடங்கி இற்றைவரை மலையகம் பற்றிய கரிசனையை உணந்தவர்கள் போல பேசிய, பேசுகிற அனைத்து இடதுசாரிகளுமே ஒரே கொள்கையில் நின்றவர்களுமில்லை,நிதானத்துடன் நடந்தவர்களுமில்லை. இன்றைக்கும் விட்ட இடத்திலேயே இருக்கிற இடதுசாரிகொள்கைகளை மேன்மையுறச்செய்துஅதனால் மலையக மக்களுக்கு நன்மை விளைவிக்க முடியுமென்று நீங்கள் கருதுகிற மனிதநேய நோக்கு உண்மையில் மதிக்கத்தக்கது.
வாழ்வின் சகலவித இயலாமையோடும் வீட்டு வேலக்குப்போகும் மலயக மனிதரிடம் இப்படி நீங்கள் சட்டம் போட்டு என்ன ஆகப்போகிறது.
//எமது கட்சியின் நிலைப்பாடு யாதெனில் சிறுவர்களை (18 வயதுக்குட்பட்டவர்களை) வீட்டு வேலைக்கு அனுப்பவே கூடாது. தோட்டத் தொழிலாளர் சமூகத்தை மதிப்புக்குறைவாக கொண்டே வீட்டு வேலைகளுக்கு அச்சமூகத்திலிருந்து பிள்ளைகளை எடுத்துக் கொள்ளும் நிலை தொடர்கிறது. இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் வீடுகளுக்குத் தம்பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவை சுயகௌரவம், சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையிலும் தோட்டத் தொழிலாளர் சமூகம் எடுக்க வேண்டும்.// .நாட்டில் பஞ்சம் பாணுக்கேவழியில்லை என்று அரண்மனையை நோக்கி மக்கள் கூச்சலிட்டபோது பாணில்லாவிட்டால் என்ன?கேக்கைச் சாப்பிடுங்கள் என்று அரண்மைனைக் கதவுஇடுக்குகளினால் பதிலளித்த மன்னனின் கதையைப் போலிருக்கிறது இது,உண்மையில் அவர்களின் வாழ்க்கைத்தராதரம் உயர்த்தப்பட,கல்வி மேம்படுத்தப்பட வேண்டும், கற்றுவரும் மலையகக் கல்விமான்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடாமல் மலையகத்தை தியாக சிந்தையுடன் காப்பாற்ற முன்வர வேண்டும்.அப்படி ஏதாவதுசெய்யுங்கள்.
ஐய்யா பிடுங்கி மலையகத்தில் சாப்பாட்டு பிரச்சினை மாத்திhரம் இல்லையய்யா மனிதனுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கக் கூடாதோ அவையெல்லாம உண்டடு பாண் கேக் மலசலகூடம் வீடு தண்ணீர் வைத்தியசாலை இவையனைத்துமே காலம் காலமாக எட்டாத இன்பங்கள் இலவசமாக கல்வி கிடைக்கின்றது இதையும் விட்டு சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது சரி என்று வாதாடும் உங்கள் இடுகைக்கு ஒரு ஓ போட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மஸ்கெலியா நல்லத்தண்ணீர் தோட்ட சுமதி ஜீவரானிஎன்னும் சிறுமிகளின் வழக்கை இலவசமாக பேசிய சட்டத்தரனி தம்பைய்யா போன்றவர்கள’ இல்லாமல் இருந்தால் மலையகத்தில் சுய கெளரவம் கொண்ட கொஞசப்பேராவது இருக்கின்றார்கள் என்ற பெயரும் இல்லாமல் போய்விடும்
அரசாங்கத்திற்கு அடிமாட்டுத்தனம் செய்யும் மற்றய அனைத்து மலையக தலைமைகள் வரிசையில் இவரும் போக வேண்டும் என்று நீங்கள் கூறினபல் உங்கள் இடுகைக்கு ஒரு ஊ போட்டு தொடருவோம்
அன்பின் பிடுங்கி பாண் கேக் பிஸ்கட் திரிபோசா கட்டாய கருகளைப்பு மலசலகூடம் நீர்த்தேக்கம் வீடு காணி ……..இவற்றுக்கெல்லாம் முடிவு குறைந்தப்படசம் இலவச கல்வி பெற்று நிமிர்வது தான் இவற்றுடன் மக்களுடன் சேர்ந்து போராட்டம் வீட்டு வேலைக்கு போகாதே என்று கூறுவதை சிலுவையில் ஏற்றக்கூடிய பாவம் என்று கூறும் உங்கள் இடுகைக்கு படடுக்கோட்டை கல்யாண சுந்தரம் வரிகள் பொருந்தும இந்த தின்னை பேச்சிவீரரிடம்………………………….;
தேயிலையைத்தரம் பிரிக்கிற மாதிரி வீட்டு வேலை, தோட்டவேலை, ஆபிசு வேலை என்று அதில எல்லாம் ஒரு தரம் பிரிக்கேலுமா ?? எல்லா வேலையிலும் ஆபத்திருக்கும். எத்தனை துரை மாரு, கங்காணிமாரு நம்ப புள்ளங்கள கெடுத்துக்குட்டிச் சுவராக்கினாங்க??/அதுக்கெல்லாம் எந்த வக்கீலு இலவசமா வாதாடினான். வயித்துப் பிழைப்புக்கு வழிக்காட்டாம வெறும் நாட்டாமை பேசி எது நடக்கப் போகுது???விரும்பி புள்ளங்கள யாராச்சும் சும்மா வீட்டுவேலைகனுப்புவாங்களா?/ அதுகளின்ர ஒரு வயிற்றுச்சோறாவது சாவிலிருந்து அன்றைய நாளைக் காப்பாத்தும் என்கிறகடைசி நம்பிக்கையோட தான் மனவெறுப்போடு வீட்டுவேலைக்கு அனுப்புகின்றான்.அதுக்கொரு மாற்றுத்திட்டம் வைக்காம சட்டம் மட்டும் போட்டால் அது சோறு போடுமா??? மலையகத்தில மழை பெஞ்சா லண்டனில குடை பிடிக்கிறாரா தம்பையா???
அவருக்கு அடுத்த வேளை சாப்பாட்டை பற்றிக்கவலையில்லை. நமக்கெல்லாம் அப்பிடியா??? வெறு வயிற்றோட புரியாத இசங்களைப் எப்பிடிப் பேசுறது. பிடுங்கியும் அதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கின்றேன்.
ஜெயபால் பிடுங்கி கொழும்புல 02 வேல இருக்கு பணக்காரன் வீட்டுல துணி தொவைக்கவும் நாய் கூடு கழுவவும் சமைக்கவும் பார்ட் டைம் மத்த வேலங்களும் கொடுப்பானுங்க உங்க வீட்டுல யாராவது இருந்தா அனுப்பி வைங்க
ஜெயபாலு
தேயிலையைத்தரம் பிரிக்கிற மாதிரி வீட்டு வேலைஇ தோட்டவேலைஇ ஆபிசு வேலை என்று அதில எல்லாம் ஒரு தரம் பிரிக்கேலுமா ?? எல்லா வேலையிலும் ஆபத்திருக்கும். எத்தனை துரை மாருஇ கங்காணிமாரு நம்ப புள்ளங்கள கெடுத்துக்குட்டிச் சுவராக்கினாங்க??/அதுக்கெல்லாம் எந்த வக்கீலு இலவசமா வாதாடினான். வயித்துப் பிழைப்புக்கு வழிக்காட்டாம வெறும் நாட்டாமை பேசி எது நடக்கப் போகுது??? நீங்க ஒரு வக்கீல கூட்டியாந்து ஒங்க செலவுல வழக்கு பேசாம ஏனய்யா விட்டுட்டீங்க தலவாக்கொலையில ஒரு பொடியன கொன்னு போட்டுட்டானுக அந்த வழக் பேச சொவல்லியும் தம்பைய்யா கிட்டத்தான் வந்திருக்காங்க அவுங்கல ஒங்க வீட்டுக்க அனுப்பி வைக்கிறேன் அட்ரஸ் குடுங்க ஒங்க வாய்ப்பேச்சி வீரத்துக்கு சவாலா இருக்குமுங்க
நம்ம நித்தியானந்தனை மறந்து விட்டீர்களே.அவர் ஒருவர் போதாத மலையக மக்களின் மானம் காக்க ?