காலை எழுந்த உடன் தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பது வாடிக்கையான ஒன்று. இன்று தொலைக்காட்சியை திறப்பதற்குள் ஒரு யோசனை. தயக்கமாக இருந்தது. நீண்ட தயக்கத்தின் பின்னர் தொலைக்காட்சியைத் திறந்த போது விவேக் மரணித்த செய்தி துயரமாக இறங்கியிருந்தது.
சென்ற ஆண்டு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இறந்தார் அவர் ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னர் பல்வேறு மருத்துவ முயற்சிகளுக்குப் பின்னர் இறந்தார். ஆனால் நடிகர் விவேக் 15-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி கோவாக்சின் போட்டுக் கொள்கிறார். 16-ஆம் தேதி காலை மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்கிறார். இன்று அதிகாலை இறந்து விட்டதாக அறிவிக்கிறார்கள்.இது அனைத்துமே 24 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்து விடுகிறது. 48 மணி நேரத்திற்குள் விவேக் என்ற மனிதரின் உடலும் தகனம் செய்யப்பட்டு விட்டது. போஸ்ட் மார்டம் செய்யப்படாத அவரது மரணம் பல கேள்விகளை உருவாக்கியிருக்கிறது. நூறு சதவிகித இதய அடைப்போடு சுய நினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறது தமிழக சுகாதாரத்துறை.
சுகர், பிரஷர், என எவ்வித உபத்திரவங்களும் இல்லாத விவேக்கின் திடீர் மரணம் கொரோனா தடுப்பூசி தொடர்பான விவாதங்களை முன்னரங்கிற்கு நகர்த்தியிருக்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் உடல் வலி, காய்ச்சல், உடற்சோர்வு இருக்கலாம் என்று லேன்செட் போன்ற இதழ்கள் தடுப்பூசியின் பின் விளைவுகள் பற்றி எழுதியது. இந்தியாவைப் பொருத்தவரை தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் தொடர்பாக எந்த புள்ளிவிபரங்களும் பெரிதாக இல்லை. தமிழகத்தில் 45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக தெரிகிறது.நிச்சயம் இது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான். என் நண்பர்கள் பலர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு சகஜமாக நார்மலாக இருக்கிறார்கள். ஆனால்,
விவேக்கின் மரணம் பல கேள்விகளை உருவாக்கியுள்ள நிலையில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னர் மரணித்தவர்கள் இருக்கிறார்களா என்றால் ஆமாம் இருக்கிறார்கள்.
இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்காக தன்னார்வலர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்படி போபாலில் 42 வயதே நிரம்பிய ஒரு தன்னார்வலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் அவர் தடுப்பூசி செலுத்தப்பட்ட 9-வது நாளில் இறந்து போகிறார். அவருக்கு சர்க்கரை நோயோ, பிரஷரோ, இதயக் கோளாறு என்றோ எதுவும் இல்லை.
தமிழகத்தில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மையங்களில் கோவாக்சின், கோவிஷீல்ட் என இரண்டு தடுப்பூசிகளைப் போடுகிறார்கள். தடுப்பூசி போடுவதை ஊக்கு விக்கும் விதமாக ’தடுப்பூசி திருவிழா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அப்படி தடுப்பூசி விழாவுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்தான் நடிகர் விவேக்.
தி இந்து ஆங்கிலப்பத்திரிகையில் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியிட்ட கட்டுரையில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின்னர் 180 பேர் வரை இறந்திருப்பதாகக் கூறுகிறது என்கிறது அந்த கட்டுரை. அதில் உறுதி செய்யப்பட்ட மரணங்களாக 124 மரணங்களை சுட்டிக் காட்டுகிறது அந்த கட்டுரை.
இதில் 124- பேரில் 63 பேர் முழு இதய அடைப்பால் இறந்திருக்கிறார்கள். இது 124 பேரில் 51 சதவிகிதம். இது சாதாரணமான மரணங்கள் அல்ல. பொதுவாக இதய அடைப்பு, ரத்தம் உறைதல் போன்றவைகள் இருந்துள்ளன.
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) வேலூரில் இருக்கும் புகழ் பெற்ற இக் கல்லூரியில் டாக்டர் ஜேக்கப் ஜாண் என்ற வைராலஜிஸ்ட் இருக்கிறார். மிகவும் புகழ் பெற்ற மருத்துவர். அவர் கொடுக்கும் தகவல் இது,
தடுப்பூசி போடத்துவங்கிய காலத்தின் பின்னர்,
முதல் மூன்று நாட்களுக்குள் 99 பேர் இறந்திருக்கிறார்கள்
நான்கு முதல் ஏழு நாட்களுக்குள் 18 பேர் இறந்திருக்கிறார்கள்
எட்டு முதல் இருபத்தியெட்டு நாட்களுக்குள் 11 பேர் இறந்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மரணித்தாரகளா என்றால் ஆமாம் இறந்திருக்கிறார்கள்.
கொரோனா பெருந்தொற்று சூழலை மோசமாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஒன்றுதான் நமக்கிருக்கும் வாய்ப்பாக மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது. அதை நாம் புறக்கணித்து விட முடியாது. ஆனால், இந்த தடுப்பூசி தொடர்பாக மக்களுக்குள் உருவாகும் சந்தேகங்களை தீர்க்க வேண்டியதும் சுகாதாரத்துறையின் கடமைதான்…!