விளம்பரங்களுக்கும் தணிக்கைக்குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் 5-வது மாநில சிறப்பு மாநாடு வலியுறுத்தி யுள்ளது.
மதுரை வில்லாபுரம் தியாகி லீலாவதி அரங்கத்தில் சனிக்கிழமையன்று இம்மாநாடு துவங்கியது. முன்னதாக மாநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற பேரணியை காப்பீட்டு ஊழியர் தென்மண்டல கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.
மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாநில செயற் குழு உறுப்பினர்கள் பி. ஜெயந்தி, என்.கல்பனா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பி.குணசுந்தரி கொடியேற்றி வைத்தார். ஜெ. விஜயா வரவேற்புரையாற்றினார். மாநாட்டை வாலிபர் சங்க இளம்பெண்கள் துணைக்குழுவின் அகில இந்திய அமைப்பாளர் ஷாஜிதா துவக்கி வைத்து உரையாற்றினார்.
சிஐடியு மாநகர் மாவட்டச்செயலாளர் பா.விக்ரமன், அரசு ஊழியர் சங்க மாநிலத்துணைத்தலைவர் ஆர்.தமிழ்ச்செல்வி கருத்துரையாற்றினர். இளம் பெண்கள் உபகுழு மாநில அமைப்பாளர் டி.வி. மீனாட்சி அறிக்கை சமர்ப்பித்தார்.
பெண்கள் மீதான பாலியல் சுரண்டல், உழைப்புச் சுரண்டலை தடுத்து நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள, சுமங்கலி திட்டத்தை ஒழுங்கமைக்க அமைக்கப்பட்ட நீதிபதி கமிஷனின் அறிக்கையை விரைந்து வெளியிட வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாட்டை தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ள வேண்டும். பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் வகையில் விளம்பரங்களை தடுக்க தணிக் கைக்குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.