காலாவதியான மருந்துகளும் போலி மருந்துகளும் மூன்றாம் உலகநாடுகளின் முக்கிய நகரங்களின் வீதிகளில் குவியல்களாக கொட்டப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் இந்தப் படத்தின் விமர்சனத்தை முன்வைப்பது பொருத்தமானது என்றே நினைக்கிறேன்.
பெரும்பாலும் இவை போன்ற நிகழ்வுகள் அதிகாரவர்க்கத்திற்கும் மூலதனத் திரட்டலை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின்(கொள்ளை) முறிவில்தான் வெளிச்சத்திற்கு வருகிறதேயன்றி அதிகாரவர்க்கத்தின் கடமையினாலல்ல. இன்று மூன்றாம் உலகநாடுகளின் மனித உடல்கள் பன்னாட்டு பகாசுர மருந்து நிறுவனங்களின் மருந்துகள் திறனறி ஆய்விற்கு அந்நாட்டு அரசுகளின் துணையோடு உட்படுத்தப்படுவதை முன்வைக்கிற படம்தான் கான்ஸ்டன்ட் கார்ட்னர் (The Constant Gardner 2005). இந்த படம் பிரித்தானிய நாவலாசிரியர் ஜான் லீ கெரேயின் இதே பெயரிலான நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. சிட்டி ஆஃப் காட் படத்தை இயக்கிய பிரேசிலிய இயக்குனர் ஃபெர்னாண்டோ மெய்ரேல்லஸ் இயக்கத்தில் வெளியானது.
கென்யாவிற்கான பிரித்தானிய தூதரக அதிகாரி ஜஸ்டின் குவாயில், தோட்டக்கலையில் அதீத ஆர்வம் கொண்டவன். நாயகி தெஸா சமூக ஆர்வலர். ஈராக் ஆக்கிரமிப்பில் அமெரிக்காவோடு இணைந்து இங்கிலாந்து செயல்பட்டதை எதிர்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஓர் ஆய்வரங்கில் நாயகனிடம் கேள்வி எழுப்புகிறார். பிறகு தொடர்ச்சியாக வரும் உரையாடல்களுக்கு பின் அவனோடு காதல் கொண்டு அவனது மனைவியாக கென்யா வருகிறாள். கென்யா மருத்துவரான அர்னால்ட் ப்ளும் உடன் நட்பு கொள்கிறாள். பிறகு இருவரும் சேர்ந்து எய்ட்ஸ்க்கான சிகிச்சையில் அந்நாட்டு நோயாளிகள் காசநோய்க்கான மருந்துகளின் சோதனைக்கு உட்படுத்தப்படுவதையும் அதன் பின்னணியிலிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டு சதியையும் கண்டுபிடிக்கின்றனர்.
பின்னொரு நாள் நாயகி திடீரென கொல்லப்படுகிறாள் – படம் இதிலிருந்துதான் தொடங்குகிறது – தனது மனைவியின் கடிதம் மற்றும் சில ஆவணங்களிலிருந்து அவளது நடவடிக்கைகளையும் அவளது மரணத்தின் பின்னாலிருக்கும் தன் சக அதிகாரிகளின் சதியையும் நாயகன் கண்டுபிடிக்கிறான். ஆதாரங்களை தனது மனைவியின் ஓன்றுவிட்ட சகோதரனுக்கு அனுப்பிவைத்து விட்டு இறுதியில் தன் மனைவி கொல்லப்பட்ட கென்யாவிலுள்ள துர்க்கானா ஏரி எனும் இடத்திற்கு வந்து சேர்கிறான்.
மனைவியின் மரணத்திற்கு பின் அவள் மீதான ஆழமான புரிதலுடன் அவளின் நினைவுகளில் மூழ்கிய நிலையில் அந்த ஏரிக்கரையில் அமர்ந்திருக்கும்போது, மருந்து நிறுவனங்களின் கூலிப்படையினரால் கொல்லப்படுகிறான்.
ஏரிக்கரையில் இந்த இறுதிக்காட்சி மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. முதல் பாதி படத்தில் நைரோபியின் இரண்டரை சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 6 லட்சம் மக்கள் வாழும் குடிசைப்பகுதியில் கேமரா நடந்து திரிகிறது. இது விவரணப்படங்களின் சாயலில் படமாக்கப்பட்டுள்ளது.
இன்று அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஜப்பான் இந்த மூன்று நாடுகள்தான் உலகின் மொத்த மருந்து உற்பத்தியின் 80 சதவீத மருந்துகளை சந்தைக்கு கொண்டுவருகின்றன. மருந்துகள் உற்பத்தியின்போதே ஆய்வகங்களில் அவற்றுக்கான திறனறி சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில் பெருமளவு விலங்குகள் ஈடுபடுத்தப்படுகின்றன சில வரையறைகளுக்கு உட்பட்டு மனிதர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேற்குலக வளர்ந்த நாடுகளில் இந்த நிறுவனங்கள் இதைப் போன்ற சோதனைகளில் நிறைய சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் மூன்றாம் உலகநாடுகள் மற்றும் வளரும் நாடுகளை நோக்கி வருகின்றன. அமெரிக்காவில் இது போன்ற சோதனைகளுக்கு 350 பேரில் ஒருவர்தான் முன்வருகிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாம் உலகநாடுகளின் எண்ணற்ற நோய்களும் நோயாளிகளும் எதற்கும் வளைந்து கொடுக்கும் அரசாங்கமும் இந்த நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கின்றன. 1975ம் ஆண்டு ‘உணவு மற்றும் மருந்து வளர்ச்சிக்கான நிறுவனம’ என்கிற அமெரிக்க நிறுவனம், ‘உலக சுகாதார அமைப்பினால்’ உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘ஹெல்சிங்கி அறிக்கை’யின்படி 35 நாடுகளுடனான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. ஆனால் அந்த அறிக்கையின்படியிலான வரையரைகளையும் அதை செயல்படுத்தும் மேற்பார்வை குழுவினரையும் புறக்கணித்தே வந்திருக்கிறது.
பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களின் வரிச்சலுகைகளுக்காக காலாவதியான மருந்துகளை தொண்டுநிறுவனங்கள் மூலமாக வளரும் நாடுகளில் இறக்குகின்றன. இந்தியாவில் ஆயுர்வேத மருந்து நிறுவனங்களும், குறிப்பாக தமிழ்நாட்டில் சித்தமருத்துவ நிறுவனங்களும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தனவல்ல. மக்கட்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நாட்டில் இவர்கள் ஆண்மைக் குறைபாடு என்ற கூப்பாட்டை முன்வைத்து வியாபாரம் செய்துகொண்டிருக்கின்றனர்.
குமுதம் வார இதழில் இது குறீத்து படித்து இருக்கிறேன்.இப்போது படம் பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளீர்கள் நன்றீ.
//பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களின் வரிச்சலுகைகளுக்காக காலாவதியான மருந்துகளை தொண்டுநிறுவனங்கள் மூலமாக வளரும் நாடுகளில் இறக்குகின்றன.// மிகச்சரியான அவதானிப்பு.
தமிழக அரசு மருத்துவமனைகளில் அறுவைச்சிகிச்சைகளின் போதான சதைத்துணுக்குகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை எரிக்க இன்சினரேட்டர்களை நிறுவியேயாக வேண்டும் என்று சுற்றுச்சூழலுக்கான ஒரு தொண்டு ( ? ) நிறுவனம் வலியுறுத்தி வந்தது. கடைசியில் அமெரிக்காவிலிருந்து அந்த கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு சில பெரிய மருத்துவமனைகளில் நிறுவப்பட்டன. இந்தக் கழிவுகளை வெட்டவெளியில் கொட்டி எரிப்பதால் ஏற்படும் மாசுக்கேடுகளை விடவும் கூடுதலாக இந்தக் கருவிகள் வழியே எரிக்கும்போது வெளியாகின்றன என்று குற்றம்சாட்டி அமெரிக்க குடிமக்களின் எதிர்ப்புக்காளாகி அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டவைதான் அந்த இன்சினரேட்டர்கள்
என்பது பிற்பாடு அம்பலமானது. அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் அமெரிக்கா சென்றிருந்தபோது இன்சினரேட்டர் தயாரிக்கும் கம்பனியினருடன் ஏற்படுத்திக்கொண்ட ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர் அரசாங்கத்தை வற்புறுத்தி நிறுவச் செய்தார் என்பதுகூட சிலகாலம் கழித்தே தெரிய வந்தது.
– சொட்டு மருந்துகள் தடுப்பூசிகள் குறித்து என்.ஜி.ஒ. / சர்வீஸ் கிளப்புகளின் அக்கறைகளும் சந்தேகத்திற்குரியவைதான். – ஆதவன் தீட்சண்யா.
மிக்க நன்றி தோழர்
உஙகல் கருத்து படம் பார்க்க துன்டுகிருது.
மிக்க நன்றி தோழர்.
உங்களின் இந்த விமர்சனம் எனக்கு அந்த படத்தைப் பார்க்க ஆவலை ஏற்படுத்தியதுடன்,மருத்துவத்துறையில் இதுபோன்று உலக அளவில் நடக்கும் தவறுகளை அறிந்து கொள்வதற்கும் பேருதவியாய் இருக்கும். விரைவில் படத்தை பார்த்துவிட்டு எனது கருத்தை உங்கலளோடு பகிர்ந்துகொள்கிறேன். மேலும் இதுபோன்ற பல விமர்சனங்கள் வழியிலான தகவல்களை எதிர்நோக்குகிறேன்.
நன்றி
ஜெ.கிரி