13.01.2009.
ஏ-9 வீதியை இராணுவத்தினர் முழுமையாக மீட்டுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை வருகிறார்.
எனினும், மேனனின் இந்த இலங்கை விஜயம் வழமையாக நடைபெறுவதைப் போன்ற சாதாரண விஜயம் என அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. தனது விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித்த போகல்லாகம உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், சிவ் சங்கர் மேனனின் இலங்கை விஜயம் மிக முக்கியமானதாக அமையும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருடைய இலங்கை விஜயத்தின் மூலம் மோதல்கள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் கொள்கையில் எந்தவிதமான பாரியளவு மாற்றமும் ஏற்பட்டுவிடாது என அரசியல் இராஜதந்திர அவதானிகள் தெரிவிக்கின்றனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்க வேண்டுமென இந்தியத் தரப்பிலிருந்து அழுத்தம் வழங்கப்படலாமென அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வொன்றைக் கண்டுவிட முடியாது எனவும், பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.