நேற்று காலை ஹைதராபாத்தில் இருந்து இரண்டு அதிகாரிகள் இரண்டு பைலட்டுகளோடு கிளம்பிய ஆந்திர முதல்வர் சாலமோன் ராஜசேகர ரெட்டியின் விமானம் காலை 9.15- லிருந்து 9.30 மணிக்குள் காணாமல் போனது. இருபத்தி மூன்று மணிநேரங்களாகியும் அவர் என்ன ஆனார் என்பதை இந்திய இராணுவத்தால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆளில்லா உளவு விமானங்கள் சாட்டிலைட் உதவி, தேசிய கமாண்டோ படைகள், நகசலைட் அதிரடிப்படை என இதுவரை இல்லாத அளவுக்கான மிகப் பெரிய தேடுதல் வேட்டையாக இது நடைபெற்றும் இன்று காலை எட்டு மணி வரை எந்தத் தகவலும் இல்லை. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நல்லமலை வனப்பகுதியில் அந்த விமானம் காலை 9 மணியளவில் பறந்ததைப் பார்த்ததாக ஆதிவாசிகள் தெரிவித்ததை அடுத்து குறிப்பிட்ட அந்தப் பகுதியை அங்குலம் அங்குலமாக தேடிய பிறகு இப்போது நல்லமலை வனப்பகுதிக்குள் அந்த விமானம் நொறுங்கிக் கிட்டப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் ராஜசேகர ரெட்டி குறீத்து உறுதியாக எந்த தகவல்களும் இல்லாத நிலையில் திமுக தலைவர் கருணாநிதி ‘’என் ஆருயிர் நண்பருக்காக நம்பிக்கையோடு காத்திருப்போம் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.