பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் மூன்றாவது கொரோனா அலையின் தாக்கம் செப்டம்பர், அக்டோபர், மாதங்களில் திவீரம் அடையலாம் தீபாவளி உட்பட பண்டிகைக்காலம் வர விருக்கும் நிலையில் மாநில அரசுகள் உரிய கட்டுப்பாடுகளைப் பிறப்பித்து பொது மக்கள் கூடுவதை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதன் படி தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு தடை விதித்தது.
கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடக்கும் லட்சக்கணக்கான மக்கள் திரளும் கள்ளழகர் விழா, வேளாங்கண்ணி மாதா ஆலய விழா, தூத்துக்குடி பனிமய மாதா விழா, சாந்தோம் விழா, திருவாரூர் கோவில் விழா, உட்பட ஏராளமான இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ விழாக்கள் மக்கள் கூடுகை இன்றி எளிய முறையில் நடக்கிறது. அதையொட்டியே விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.
ஆனால், பாஜகவினரும் இந்துமுன்னணியினரும் ஏதோ அரசு திட்டமிட்டு விழாவை தடுப்பது போல இந்து உணர்வை ஊதி விட்டு வருகிறார்கள். இந்து முன்னணி என்ற மதக் கலவர அமைப்பின் துணைத்தலைவர் கார்த்திகேயன் என்பவர் “ அரசின் உத்தரவுகளை கண்டு கொள்ள வேண்டாம் என்றும் 1 லட்சத்து 25 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்றும் இதற்காக காவல்துறை அனுமதி தேவையில்லை. அரசைக் கண்டு கொள்ள வேண்டியதில்லை” என்றும் பேசியிருக்கிறார்.
அதே போன்று பாஜக தலைவர் அண்ணாமலையும் “விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தடை விதித்த செயல் கடும் கண்டனங்களுக்கு உரியது. உடனடியாக இந்த தடையை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்” என்று மிரட்டும் வகையில் பேசியிருக்கிறார்.
அரசுக்கு அவமதிப்பையும் கெட்ட பெயரையும் உருவாக்கும் நோக்கில் விநாயகர் சிலைகளை மசூதி, தேவாலயங்கள் அருகில் அமைத்து கிறிஸ்தவ, முஸ்லீம் மக்களை இழிவாகப் பேசி ஊர்வலம் என்ற பெயரில் தேவாலயங்கள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.