06.03.2009.
“விடுதலைப்புலிகளைப் படையினர் 45 கிலோமீற்றர் பகுதிக்குள் முடக்கி வைத்துள்ளனர். புதுக்குடியிருப்புச் சந்தியையும் படையினர் கைப்பற்றி விட்டனர்” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இன்று காலை தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் படையினரின் நடவடிக்கை குறித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது :
“நந்திக்கடல் பகுதியை நோக்கிப் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சாலைப்பகுதியில் இடம்பெயர்ந்து வந்த மக்களை நோக்கி புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமன்றி, ஒட்டுச்சுட்டான் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 55 மற்றும் 57 ஆவது படை அணியினர் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இதில் 50 விடுதலைப்புலிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 33 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று காலை பாதுகாப்பு வலயத்தை நோக்கி 6 படகுகளில் வந்த மக்களை நோக்கியே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.உயர்பாதுகாப்பு வலயம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டே வருகிறது . இது வரையும் 37,508 பேர் பாதுகாப்பு வலயத்துக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
மேலும் விடுதலைப்புலிகளின் தற்கொலை வெடிப்பொருட்கள் தயாரிப்பு நிலையம் ஒன்று படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மோதல்களின்போது காயமடைந்த மக்களை திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2000 நோயாளர் வரை இது வரை அழைத்து வரப்பட்டுள்ளனர்.இன்று கப்பல்கள் மூலம் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர், பயன்படுத்தப்பட்ட 13 ஏவுகணைகளின் வெற்றுக் கூடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி முதலாவது ஏவுகணை இராணுவத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி பாவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான இரு ஏவுகணைகளை அண்மையில் கிழக்கில் தொப்பிகலைப் பிரதேசத்திலும் படையினர் கண்டுபிடித்தனர்.” இவ்வாறு பிரிகேடியர் தெரிவித்தார்.