விடியல் சிவா இந்திய நேரப்படி இன்று(30.07.2012) காலை 10.30 க்கு காலமானார். விடியல் பதிப்பகத்தை நிறுவனரும் செயற்பாட்டாளருமான தோழர் சிவஞானம், ஆரம்பத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் முழு நேர ஊழியனாகச் செயற்பட்டவர். பல மார்க்சிய நூல்களை மொழிபெயர்த்து பதிப்பித்து வெளியிட்டவர் தோழர் சிவஞானம். தோழர் விடியல் சிவாவின் இழப்பின் துயரத்தை அறிவுலகின் ஏனையோரோடு இனியொருவும் பகிர்ந்துகொள்கிறது.
விடியல் சிவா என்றொரு மாமனிதன்!
தமிழ்ச் சமூகத்தின் அறிவுலகத்தை குறிப்பாக இளந்தலைமுறையை மார்க்சியக் கண்ணோட்டத்தோடும், தமிழிய ஆர்வத்தோடும் வளர்த்தெடுக்க முனைந்தவர். தனது விடியல் பதிப்பகத்தின் வாயிலாக அரும் பெரும் நூல்களையெல்லாம் தமிழில் மொழி பெயர்த்தவர். உடற் குறைபாட்டிற்கு இடையிலும் தளராமல் இயங்கியவர். நோய் முற்றிய நிலையில் முடங்கிப் போனாலும், அண்மையில் விடியல் பதிப்பகம் குறித்து எழுத்து வியாபாரி ஜெயமோகன் அள்ளி வீசிய அவதூறுகளை மிகக் கண்ணியமான வகையில் பதிலுரைத்து, செருப்பால் அறைந்தவர். உள்ளபடியே தமிழுலகம் ஒப்பற்ற ஒரு கண்ணியவானை இழந்துவிட்டது. அதேபோழ்து, இலக்கியங்களையும், உலக வரலாற்றையும் அள்ளித் தந்த ஒரு பதிப்பகச் செம்மலையும் சாவுக்குக் கொடுத்துவிட்டு தடுமாறுகிறது.
ஒருமுறை மதுரை புத்தகக் கண்காட்சியில் திரு.சிவாவுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, கேள்வியொன்றை அவரிடம் கேட்டேன். ‘புத்தகத் திருடர்களும் கண்காட்சிக்கு வருகிறார்கள்தானே. அவர்களில் எவரேனும் ஒருவர் தங்களது அரங்கிற்கு வந்து நூல்களைத் திருடிச் சென்றால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஒன்னும் செய்ய மாட்டேன். வாங்குவதற்கு பணமில்லையென்றால் பரவாயில்லை. எடுத்துச் செல்லுங்கள். ஆனால் தங்களால் இயலும்போது, அதற்கான தொகையை வழங்கிவிடுங்கள் என்றுதான் அறிவுறுத்துவேன். இதே போன்று ஈரோடு, நெய்வேலி புத்தகக்கண்காட்சியிலும் நடந்திருக்கிறது’ என்றார். அப்படியொரு பெருந்தன்மையும், தமிழ்ச் சமூகத்தின் அறிவுப் பரப்பை விரிவு படுத்த வேண்டும் என்ற தணியாத தாகமும் கொண்டவர் தோழர் சிவா.
விடியல் சிவா என்ற ஒப்பற்ற, அப்பழுக்கற்ற மனிதனை இனி எங்கே காணப்போகிறோம்?
இருந்தும் வாழ்கின்றார் விடியலாக… அதன் ஒவ்வொரு நூல்களாக…
– இரா.சிவக்குமார், மதுரை
விடியலின் பதிப்பாக வெளிவந்த பலபதிவுகளை நாம் அறிவோம். இந்த தோழரை ஒருமுறையும் கண்டதும் இல்லை.கேட்டதும் இல்லை. கோயம்புத்தூராகத் தான் இருக்கவேண்டுமென நினைக்கிறேன் காரியாலத்திற்கு தொலைபேசி எடுக்கும் போது
அது சிவாவைத்தான் கேட்கவேண்டும் இன்னும் சிறுநேரத்தில் வந்துவிடுவார் திரும்ப இன்னுமொரு முறை தொலைபேசி எடுங்கள் என்றார்கள்.
வந்ததும்.. வந்தபடியே காரியம் முடிவாயிற்று. ஒரு பதிப்பகத்தை நிர்வகிப்பதோ ஒரு புத்தகத்தை வெளிக்கொண்டு வருவதும் ஒரு சதாரணகாரியமல்ல. அதுவும் என்றும் பண அலைக்கழிவுகள் உள்ள கம்யூனிசத் தோழர்களுக்கு எத்தனை துன்பங்கள் நிறைந்திருக்கும் என்பதும் சொல்லத் தேவையில்லை.
விடியல் ஏராளமான பதிவுகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு பதிவுகளிலும் “சிவா” வும் அவர் தோழர்களும் எம் நினைவில் நின்றிப்பார்கள். அவருக்கு எனது அஞ்சலியையும் அவர் தோழர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் மனஆறுதல்களையும் இயற்கை வழங்க வேண்டுமென மனதார நினைக்கிறேன்.
மனிதவாழ்வில் ஒரு பெறுமதியான வாழ்வை வாழ்ந்து விட்டு தோழர் சிவா சென்றுவிட்டார் என்று நினைக்கும் போது…….துக்கம் தொண்டையை அடைக்கிறது என்பதும் அல்லாமல் பெருமிதமாகவும் இருக்கிறது.
ஈழத் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத பெயர் விடியல் சிவா. அன்புத் தோழனின் ஈமைச் சடங்கு விபரம் தெரியவில்லை. தோழனுக்கு என்னுடைய வணக்க அஞ்சலிகள்