விமலேஸ்வரனுக்கும் விஜிதரன் கடத்தப்பட்டது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கும் ஒரு அரசியல் பாத்திரம் உண்டு. ஜனநாயகமற்ற சூழலில் மக்கள் போராட்டங்களை ஒழுங்கமைப்பது எவ்வாறு என்பது குறித்த கற்றலாகக் கூட இந்தப் போராட்டம் நோக்கப்படலாம். பாசிசச் சூழலில் மக்கள் அரசியலில் முளைத்து மூன்று நாட்களே முடிந்திராத நிலையில் மாணவர்களும் சமூகப் பிரக்ஞையுள்ள நூற்றுக்கணக்கான இளையோரும் நடத்திய போராட்டங்களும் அவற்றிற்காக வகுத்துக்கொண்ட தந்திரோபாயங்களும் உலகின் எந்த மூலையில் போராட்டம் நடந்தாலும் திரும்பிப் பார்த்துக் கற்றுக்கொள்ள நிறையவே உள்ளன.விமலேஸ்வரன் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டத்தின் வன்மத்திற்குப் பலியாக்கப்பட்டுள்ளனர்.
மேன்மை பளிச்சிடாத எளிமை, திமிர் தோன்றாத மக்கள் பற்று என்பனவெல்லாம் விமலேஸ்வரனிடமிருந்து ஒவ்வோரு போராளியும் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள். விமலேஸ்வரனின் குறித்த காலத்திற்குரிய சமூகப் பங்களிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூக அடையாளத்தைத் தலைகீழாக மாற்றியிருந்தது.
ஆரம்பத்தில் புளட் அமைப்பின் மாணவர் அமைப்பாக உருவான ரெசோ அமைப்பில் இணைந்த விமலேஸ்வரன், பல்கலைக் கழகத்தில் கல்விகற்க ஆரம்பித்த காலப்பகுதியில் அவ்வமைப்புடன் முரண்பட்டிருந்தார்.
பின்னதாகப் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான வேலைகள் குறித்த ரெசோ அமைப்புடனான கருத்துவேறுபாடுகளால் அவ்வமைப்பிலிருந்து முற்றாக வெளியேறியிருந்தார். அவ்வேளையில் பாசறை விஜி என்பவருடன் ஏற்பட்ட தொடர்புகாரணமாக, பாசறை அமைப்பின் துணையோடு உருவான தேசிய மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பின் அமைப்பாளர் குழுவிலும் பின்னர் கிராமிய உழைப்பாளர் சங்கத்திலும் தனது அரசியல் பங்களிப்பை வழங்கினார்.
விமலேஸ்வரனின் பங்களிப்பும் விஜிதரன் குறித்த போராட்டமும் திரிக்கப்பட்டு அதன் பெறுமானங்கள் சிதைக்கப்படும் சூழலில் அப்போராட்டத்தை வழி நடத்திய மாணவர் அமைப்புக் குழுவின் தலைவராக இருந்த சோதிலிங்கத்தின் நேர்முகம் பயனுடையதாக அமையும் என நம்புகிறோம். எதிர்காலத்தில் இன்னும் இரு மாணவர் தலைவர்களின் அனுபவக் கட்டுரைகள் இனியொருவில் பதிவாகும்.
இருபத்தி இரண்டு ஆண்டுகளின் முன்னர் கொலைசெய்யப்பட்ட விமலேஸ்வரனுக்கு அஞ்சலிகள்.
ஈழ மக்கள் பேரின வாத அரசின் பிடிக்குள் மனிதப் பேரவலத்தைச் சந்திக்கும் இன்றைய சூழலில், இணையங்களை இரத்தம் வடியும் குழுவாதச் சண்டைக் களமாக மாற்றுவதில் எமக்கு உடன்பாடில்லை. ஆயினும் நீண்ட காலத்தின் பின்னரும் ஆவணமாகக் கூடிய ஆபத்துள்ள இணையத்தில் உண்மைகள் உண்மைகளாக வெளிவரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
இனியொரு : விமலேஸ்வரன் குறித்த உங்கள் அனுபவங்கள்?
சோதிலிங்கம்: முதலில் புளொட் மாணவர் அமைப்பில் செயற்பட்டார். பின்னதாக அகதிகள் புனர்வாழ்வு வேலைகளில் ஈடுபட்டார். பின்னர் சிலகாலம் ஒதுங்கியிருந்த விமலேஸ்வரன் பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புக்குழு உருவாக்கப்பட்ட போது அதில் என்னோடு இணைந்து செயற்பட்டார். அவ்வமைப்பு உருவாக்கப்பட்ட போது முதலில் நானும் விமலேஸ்வரனும் மாணவர் அமைப்பை ஒழுங்குபடுத்துவது காலத்தின் தேவை என உணர்ந்த போது தீவிரமாக மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டோம். நான் அவ்வமைப்பின் தலைவராக இருந்தேன்.
விமலேஸ்வரன் தேசியப் போராட்டத்தில் பங்காற்ற வேண்டும் என்று முனைப்புடன் செயற்பட்ட தேசியவாதி. தேசிய விடுதலைக்கான திசைவழி நோக்கி தனது உழைப்பைச் செலுத்த வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருந்தவர். தேசியப் போராட்டத்தினூடான சமூக மாற்றத்தைத் தனது அடிப்படையாகக் கொண்டிருந்தவர். அன்று மாணவர்களாக இருந்த எம்மிடம் பூரணமான தெளிவு ஒன்றிருந்ததில்லை எனினும் அடிப்படை விடயங்களில் உறுதியாக இருந்தோம். விமலேஸ்வரனைப் பொறுத்தவரை ஒரு நடைமுறைப் போராளி. தத்துவார்த்த விடயங்கள் அவை தொடர் நீண்ட விவாதங்கள் என்பவற்றிற்கு அப்பால் நடைமுறையில் மாணவர்களோடும் மக்களோடும் இணைந்து வேலை செய்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டியவர்.
அதன் பின்னதாகக் கிராமிய உழைப்பாளர் சங்கத்தில் எம்மோடு இணைந்து கிராமிய மட்டங்களில் வேலைசெய்தார். அங்கு அந்த மக்களுடனேயே தங்கியிருந்து அவர்களில் ஒருவனாக வேலைசெய்தார். அதனால் தான் அவர் மரணச்செய்தி கேட்டதுமே அவர் தங்கியிருந்த கிராமத்தவர்கள் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாது மரண வீட்டில் பங்குபற்றினார்கள். கொழும்பிற்கு நான் தலைமறைவாக வந்தபோது அவரும் என்னோடு வந்தார். ஆனல் அவரால் மக்கள் வேலைகளை மறந்து நகரச் சூழலில் வாழப்பிடிக்காத நிலையில் நான் திரும்பிச் செல்லப் போகிறேன் என்று கூறிச் சில நாட்களிலேயே திரும்பிச் சென்றுவிட்டார்.
அவர் இன்றைக்கு இருந்திருந்தால் அவரின் மக்கள் பற்று அரசியல்ரீதியாக வளர்ந்த போராளியாகவும் தலைவனாகவும் கூட மாற்றியிருக்கும். விமலேஸ்வரனின் தலைமைப் பண்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இனியொரு : விமலேஸ்வரன் கொல்லப்பட்டதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்?
சோதிலிங்கம்: அன்று மாகாண சபைக்கான தேர்தல்களை இந்திய இராணுவ அதிகாரம் திட்டமிட்டிருந்தது. அவ்வேளையில் விமலேஸ்வரன் போன்றோர் அத் தேர்தலில் போட்டி போடலாம் என்ற என்ற பயம் புலிகளுக்கு இருந்திருக்கலாம். இவ்வாறு ஒரு கருத்துத் தான் அப்போது நிலவியது.
இனியொரு : விமலேஸ்வரன் என்.எல்.எப்.ரி என்ற தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் எந்த அங்கத்திலாவது உறுப்பினராக இருந்தத்துண்டா?
சோதிலிங்கம்: எனக்குத் தெரிந்த வரை அவருக்கு அவ்வமைப்பின் சில உறுப்பினர்களோடு நெருக்கமான தொடர்பு இருந்தது என்பதைத் தவிர அவ்வாறு உறுப்பினராக இருந்தார் என்பது உண்மையில்லை. அவ்வாறு அவர் எனக்கு எப்போதும் கூறியதில்லை. அதற்கான எந்தச் சாத்தியமும் இருந்ததில்லை. தவிர, புளட் மற்றும் பாசறைக் குழுவின் கிராமிய உழைப்பாளர் சங்கத்தில் அரசியல் வேலைகள் செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
இனொயொரு: விஜிதரன் கடத்தப்பட்ட போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் யார்?
என்னோடு விமலேஸ்வரன். நாவலன், சுந்தரமூர்த்தி, ஔவை, தெய்வேந்திரம், இவர்களோடு கலா, ஸ்டேல்லா, ரயாகரன், பிரபாகரன் போன்றோர் உட்பட பலர். கிட்டத்தட்ட 2 தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த போராட்டத்தில் அனைவருடைய பெயர்களும் எனக்கு நினைவில் இல்லை.
இனியொரு : ரயாகரன் விஜிதரன் குறித்த பல்கலைக் கழக மாணவர் போராட்டத்தைத் தானே தலைமை தாங்கி நடத்தியதாகக் குறிப்பிடுகிறார். இது குறித்து உங்கள் கருத்து?
சோதிலிங்கம்: இது முற்றிலும் பொய். உண்மையில் போராட்டம் அந்த அமைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் எனதும் விமலேஸ்வரன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது. அதன் பொதுவான போக்கும் அவ்வாறே அமைந்தது. ரயாகரனின் செயற்பாடுகளால் மாணவர்கள் மத்தியில் சில நெருக்கடிகளை நாம் சந்திக்க நேர்ந்தது என்பதே உண்மை.இவ்வளவு நீண்ட காலத்தின் பின்னர் இவற்றையெல்லாம் விலாவாரியாக பேசுவதை நான் உண்மையில் விரும்பவில்லை. தவிர, ஏனையோரின் பங்களிப்புகளைப் போல அவரின் பங்களிப்பையும் நான் மறுக்கவில்லை.
இனியொரு : மாணவர் போராட்டம் நடைபெறுவதற்கு ஏதாவது அரசியல் சக்திகள் பின்னணியில் தலைமை வகித்தனரா?
சோதிலிங்கம்: அந்த நேரத்தில் நான் ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இணைந்திருந்த காரணத்தால் அது அவர்களோடு அடையாளப்படுத்திப் பேசப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அரசியல் சக்திகளும் போராட்டத்தில் செல்வாக்குச் செலுத்தவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப், பாசறைக் குழு, என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புகள் உட்பட பலர் சில உதவிகளைச் செய்திருந்தாலும் போராட்டம் மாணவர்களின் தன்னெழுச்சியாகவே அமைந்தது. மாணவர் தலைவர்கள் அரசியல் ரீதியான வளர்ச்சியடைந்தவர்களாக இருந்ததனால் அதனை புதிய நிலையை நோக்கி வளர்தெடுக்க வாய்ப்பிருந்தது.
“அவ்வேளையில் பாசறை விஜி என்பவருடன் ஏற்பட்ட தொடர்புகாரணமாகஇ பாசறை அமைப்பின் துணையோடு உருவான தேசிய மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பின் அமைப்பாளர் குழுவிலும் பின்னர் கிராமிய உழைப்பாளர் சங்கத்திலும் தனது அரசியல் பங்களிப்பை வழங்கினார்.”
எனக்குத் தெரிந்தவரை தேசிய மாணவர் மன்றம் அமைப்பில் விமலேஸ்வரன் இருக்கவில்லை. நாவலன் உடனான அவரது தனிப்பட்ட தொடர்பு காரணமாக சில உதவிகள் செய்தார்.
விமலேஸ்வரன் மீண்டும் கொலை
//சோதிலிங்கம்: அன்று மாகாண சபைக்கான தேர்தல்களை இந்திய இராணுவ அதிகாரம் திட்டமிட்டிருந்தது. அவ்வேளையில் விமலேஸ்வரன் போன்றோர் அத் தேர்தலில் போட்டி போடலாம் என்ற என்ற பயம் புலிகளுக்கு இருந்திருக்கலாம். இவ்வாறு ஒரு கருத்துத் தான் அப்போது நிலவியது.//
இதைப் போல ஒரு திட்டமிட்ட நாசூக்கான பொய்யை சோதிலிங்கம் ஏன் கூறுகிறார் என்பது புரியவில்லை.
விமலேஸ்வரனுக்கு தேர்தலில் போட்டியிடும் எந்த எண்ணமும் இருந்ததில்லை. அப்படி இருந்ததாக யாரும் கூறுவார்களாயின் அது விமலேஸ்வரன் தேர்தல்கள் பற்றியும் போராட்டம் பற்றியும் கொண்டிருந்த கருத்துக்களுக்கு முற்றும் எதிரான அப்பட்டமான அரசியல் திசைதிருப்பலாகத்தான் இருக்கமுடியம். இவ்வாறு விமலேஸ்வரன் என்ற போராளியை இப்படி யாரும் காலில் போட்டு மிதித்திருக்க முடியாது.
புலிகள் விமலேஸ்வரன் தேர்தலில் குதிக்கக்கூடும் என்ற பயத்திலேயே விமலேஸ்வரனை கொலை செய்ததாக அப்படிப் பேசப்பட்டதாக போகிற போக்கில் கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். புலிகள் தங்கள் அரசியல் எதிரிகளைஇ தங்களை ஆட்டம் காண வைத்த ஒரு மாபெரும் போராட்டத்தை அரசியல் அராஜகங்களுக்கு எதிராக நடாத்த துணிவும் வைராக்கியமும் உடையவர்களை அழித்தார்கள் என்பது தான் ஒரேயொரு காரணமே ஒழிய தேர்தலில் விமலேஸ்வரன் குதிக்கக்கூடும் என்றதற்காக அழித்தார்கள் என்பது ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தும் தந்திரமான பிரச்சாரம். ஒன்று விமலேஸ்வரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் என்று ஒன்று இருந்தது என்று கூறுவதன் மூலம் விமலேஸ்வரன் கொண்டிருந்த அரசியல் வெறும் சுயநலம் கொண்ட தேர்தல் நோக்குகளே என்பதான பார்வையை பட்டும் படாமல் விதைப்பது. மற்றையது புலிகளின் கொலைக்கான பாசிசக் காரணங்களை புலிகளுக்கு தத்துவ விளக்கு பிடித்து சோதிலிங்கம் இன்றும் வக்காலத்து வாங்குவது.
புலிகளின் பட்டியலில் விமலேஸ்வரன் பெயர் சேரக் காரணம் தேர்தலில் விமலேஸ்வரன் குதிக்கலாம் எனப் புலிகள் சந்தேகித்ததே காரணம் எனில் ஏனைய உண்ணாவிரதப் போராளிகளும் அமைப்புக்குழுவில் இருந்தவர்களும் புலிகளால் தேடப்படவும் கொலை செய்யப்படவும் அவர்களும் தேர்தலில் குதிப்பதற்கு இருந்தார்கள் என்ற காரணத்தாலா?
விமலேஸ்வரன் அனைத்துவித மக்கள் விரோதத்துக்கும் எதிராக அணிதிரண்ட மாணவர்களுக்கு ஒரு முன்னோடிப் போராளியாகவிருந்தான் அவர்களை தனது சக போராளிகளோடு இணைந்து அணிதிரட்டினான் என்ற அப்பட்டமான காரணத்தை முழுங்கிவிட்டு தேர்தலில் போட்டி போடவிருந்ததே காரணமாயிருக்கலாம் என்று கூறி புலிகளின் குரோதத்தை இலாவகமாகவும் மிக நாசூக்காகவும் தந்திரமாகவும் மூடி மறைக்கும் வேலையை சோதிலிங்கம் இங்கு செய்கின்றார்.
இக் காரணத்தை நாவலனும் ஏற்றுக்கொண்டால் நாவலன் போன்றோர் விரட்டப்பட எது காரணம் என்பது புரியவில்லை.
//
விமலேஸ்வரன் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டத்தின் வன்மத்திற்குப் பலியாக்கப்பட்டுள்ளனர்.// இது நாவலனின் கூற்றாயின் அது சரியானது
நண்பரே! உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன். அதேவேளை சோதி சொல்லுகின்ற தகவல் சரியானது. வடகிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு அண்மியகாலத்தில் இவ்வாறான கண்மூடித்தனமான பரந்துபட்ட படுகொலை பயங்கரம் கட்டவிழ்த்து விடப்பட்டதென்பது உண்மை..விமலேஸ் படுகொலைசெய்யப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் என்னை சந்தித்தபோது இதே போன்றதொரு அபிப்பிராயத்தை கொண்டிருந்தார். சில தினங்களில் கொழும்பு செல்லவும் திட்டமிட்டிருந்தார். புலிகளுக்கும் விமலேஸ் ற்குமான முரண்பாடு அடிப்படையில் ம்க்கள்விரோத அரசியலுக்கும் சமூக உணர்வுள்ள தேசிய போராளிக்குமான முரண்பாடுதான். இருபத்தியிரண்டு வருடங்களிற்கு பின்னரும் எழுதுகின்றபோது மன இறுக்கத்திற்குள்ளாவதால் விரிவாக இப்போது எழுதமுடியவில்லை.
விமலேஸ்வரன் குறித்த கருத்துப் பதிவு நேர்காணல் என்ற வடிவில் வெளிவந்திருக்கின்றதாயினும் முக்கியத்துமுடையது. நன்றிகள்.
விமலேஸ்வரன் குறித்தும் அவர்கள் போன்ற இன்னும் பலர் குறித்தும் எழுதப்படுவது அவசியமானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே கருதுகின்றேன்.
1980 களின் பின்பு இனஒடுக்குமுறைகள் அதிகாpக்கத் தொடங்கிய காலத்திலிருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் அவையும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இன ஒடுக்குமுறைக்கெதிராக குறிப்பிடத்தக்க போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். பின்னால் சமூகப்பணிகள் பலவற்றிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
பின்னால்> ஆயுதம் தாங்கிய இயக்கங்களின் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை தோன்றியது. ரெலோ இயக்கத்தின் அராஜகச்செய்றபாடுகள் குறித்து எதிர்ப்புப்போராட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
பின்னால் புலிகளின் ஒடுக்குமுறைகள் அதிகரித்த காலத்தில் விஜிதரன் கடத்தலுடன் புலிகளுக்கெதிரான போராட்டத்தினை ஜோதிலிங்கம் மற்றும் விமலேஸ்வரன் போன்றோர் மேற்கொண்டனர்.
விஜிதரன் கடத்தலுக்கெதிரான போராட்டங்களை நடத்தியவர்கள் ஏதோ ஒருவகையில் இயங்கங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்களாக இருந்தனர். தாங்கள் இணைந்திருந்த இயக்கங்களுடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அது குறித்த பகிரங்கமான எந்த கருத்தாடல்களையும் அவர்கள் மேற்கொண்டதாக அறியமுடியவில்லை. எனவே அப்போராட்டம் ஏனைய இயங்கங்கிளனால் வழிடத்தப்படும் புலிகளுக்கெதிரான போராட்டமாக நோக்கப்பட்டது.
பின்னர் விமலேஸ்வரன் தலைமறைவாக வாழ்ந்துவந்தார்.
இந்திய இராணுவ ஆட்சிக்காலத்தில் அவர் தலைமறைவு வாழ்வைக் கைவிட்டு வெளியே வந்தார். அப்போது விமலேஸ்வரன் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி> அவர்கள் விமலேஸ்வரனின் நடமாட்டத்திற்கு அனுமதியளிந்திருந்ததாக நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன். ஆயினும் அச்செய்தியின் உன்மைத்தன்மை பற்றி உறுதிசெய்ய முடியாது.
ஆயினும் சிறிது காலத்தின் பின் அவர் தெருவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய கொலைக்கு புலிகளே காரணம்.
ஜோதிலிங்கம் கூறுவது போல அவர் மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட இருந்தார் என்றோ> அல்லது வேறு எந்த குற்றச்சாட்டுக்களுமோ முன்வைக்கப்படவில்லை. அவர் சுடப்பட்ட இடத்தில் ஒரு பிரசுரம் இருந்ததாக ஒரு நினைவு மட்டும் உண்டு. நீண்ட ஒரு காலத்தின் பின் கதைக்கிறோம்!
ஜோதிலிங்கத்தின் கூறுவது போல் விமலேஸ்வரன்> மாகாணசபைத்தேர்தலில் போட்டியிட இருந்தார் என்ற பயத்தின் காரணமாக கொலை செய்யப்பட்டடிருக்கலாம் என்ற கருத்து நிலவியதாக நான் அறியவில்லை.
விமலேஸ்வரன் தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் சில உறுப்பினர்களோடு நெருக்கமான தொடர்பு இருந்து என்பதுவும் ஒரு புதிய தகவலே.
விமலேஸ்வரன்> இனஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்களில் மட்டுமல்லாது இயங்கங்களின் அராஜகங்களிற்கு எதிராகவும் சனநாயக வழிமுறையிலான போராட்டங்களில் ஈடுபட்டவர். அவர் குறித்து ஜோதிலிங்கம் கூறியுள்ள இரு கருத்துக்களும் தவறான ஒரு பதிவை ஏற்படுத்தக்கூடியவை. எனவே தனது கூற்றுக்களுக்கான ஆதாராங்களை ஜோதிலிங்கம் முன்வைப்பது அவரது கடமை.
காத்திருப்போம்.
விஜய்
சிறி,
யாரையும் புண்படுத்துவதோ யாருடைய புஜபல பராக்கிரமத்தையும் நிறுவுவதோ இந்தப் பதிவின் நோக்கமல்ல. வரலாற்றின் குறித்த கட்டத்திற்குரிய உண்மை செத்துப் போய்விடக் கூடாது என்பது மட்டுமே இதன் முழுமையான நோக்கம்.
இந்த அடித்தளத்திலிருந்து அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள முனைவோம்.
விமலேஸ்வரன் மாகாணசபைத் தேர்தலில் போட்டி போடும் எண்ணம் கொண்டிருந்தார் என்பதை சோதி எந்தச் சந்தர்ப்பத்திலாவது இங்கு கூறவில்லை. அவர் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஊகத்தில் புலிகள் அவரைக் கொலை செய்தனர் என்பதே இங்கு கூறப்படுகிறது.
விமலேஸ்வரன் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களின் முன்பு மு.திருநாவுக்கரசு என்ற விரிவுரையாளர் – அப்போது அவர் புலிகளுடன் முரண்பட்டிருந்தார்- என்னை அழைத்து நான் விமலேஸ்வரன், சோதிலிங்கம் போன்றோர் மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் இனால் பயன்படுத்தப்படலாம் என்றும் வேட்பாளர்களாகக் கூடப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாகப் புலிகள் கருதுவதாகவும் அதனால் கொலைசெய்யப்படக் கூடிய வாய்ப்புக் கூட இருப்பதாகவும் கூறுகிறார். இதனால் அவதானமாக இருக்கும் படியும் முடிந்தால் தலைமறைவாகும்படியும் கூறுகிறார்.
அதற்கு நான், எங்களது அரசியல் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கும் இந்திய இராணுவத்திற்கும் எதிரானது என்பதை அவருக்குக் கூறுகிறேன். அதற்குப் புலிகள் அப்படியெல்லாம் சிந்திக்க மாட்டார்கள் என்றும் இது அக்கறையின் நிமித்தமான அறிவுரை என்றும் கூறுகிறார். அப்போது விமலேஸ் என்னோடு தங்குவது வழமை. கோப்பாயில் கிராமிய உழைப்பாளர் சங்க வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக எனது அறையில் அல்லது இருபாலையில் பாலாவின் வீட்டில் தங்கியிருப்பது வழமை. அன்று உடனடியாகவே பாலாவின் வீட்டில் விமலேஸ்வரனிடம் இதைக் கூற அவர் அதனைப் பெரிதுபடுத்தவில்லை. திருநாவுக்கரசு பயந்த சுபாவமுடையவர் என்பதால் எப்போதும் அவ்வாறுதான் கூறுவார் என்கிறார்.
இது குறித்து நான் சிலரிடம் கூறுகிறேன். குறிப்பாக ராஜன் ஹூல் போன்றவர்களிடமும் கூறுகிறேன். இரண்டு நாட்களின் பின்னர் பல்கலைக்கழகத்தின் பின்வீதியில் என்னைக் கண்ட திருனாவுக்கரசு அங்கிருந்த ரட்ணம் இன்ஸ்ரிர்யூட்டிற்கு அவசரமாக வரச் சொல்கிறார்.
அங்கு தன்னிடம் விமலேஸ்வரன், நான் இன்னும் சிலர் குறித்து மாத்தையா விசாரித்தாகவும் தேர்தலுக்கு முதலில் இவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறார். உடனடியாக விமலேஸ்வரன் பாடம் நடத்திக்கொண்டிருந்த “ரியுடரிக்கு”ச் சென்று இதைக் கூறுகிறேன். நல்லூரில் ஒருவரின் வீட்டுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகவேண்டும் என்றும் வந்ததும் எனது அறையில் அது பற்றிப் பேசுவோம் என்கிறார். அங்கு செல்லும் வழியில் அவரிடம் சில மணிநேரங்களின் முன்பதாகக் கல்விகற்றுக்கொண்டிருந்த மாணவன் ஒருவரின் இரட்டைச் சகோதரர் சட்டநாதர் கோவிலின் அருகாமையில் வைத்து அவரைக் கொலைசெய்துவிட்டதாகக் எனது அறைக்கு வந்து கதவைத் தட்டிய திரளான மாணவர்கள் கூறுகின்றனர்.
இதனை முதலில் ராஜன் ஹூலிடம் சென்று கூறுகிற நான் பின்னதாகத் தலைமறைவாகிறேன். சிறிது சிறிதாக வெளியில் வந்து பல்கலைக் கழக மாணவர் விடுதியில் மரண பயத்தோடு வாழ்ந்திருக்கிறேன். சிலவேளைகளில் இரவு நேரங்களில் உரும்பிராய் போன்ற கிராமங்களுக்கும் சென்றுவருவதுண்டு. பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இந்திய இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு சித்திரவைதை செய்யப்பட்ட துயர்படிந்த சம்பவங்களும் உண்டு. ஆக, விமலேஸ் கொல்லப்பட்டதற்கும் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே எனது கருத்து. அவர் பல்கலைக்கழகப் படிப்பை முடிக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து கொலை செய்ய்ப்பட்டிருக்கிறார்.
என் போன்றவர்களெல்லாம் எதோ வகையில் உயிர்தப்பி இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கிழக்கு மாகணத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக எத்தனை போராளிகள் முகம் தெரியாமல் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? போராடப் போன எத்தனை சமூக பிரக்ஞை உள்ளவர்களை குறுந்தேசிய வாதம் பலிகொண்டுள்ளது?அடையாளம் தெரியாமல் எரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாம் சித்திரவதை அனுபவித்தோம் தப்பிவந்தோம் என்பதெல்லாம் பெருமைப்படக் கூடிய விடயங்களல்ல. அங்கே நின்று போராட முடியாமல் எமது மத்தியதர வர்க்க உணர்வு எம்மை அன்னிய நாடுகளை நோக்கித் துரத்திவிட்டிருக்கிறது என்பது தான் உண்மை.
சிறி, விமலேஸ்வரன் தேர்தலில் போட்டியிட எத்தனித்தார் என்பதை சோதி எங்கே சொல்கிறார்? சிந்தித்துப் பாருங்கள். பதிவின் ஒரே நோக்கம் சாகடிக்கப்படும் உண்மைகளுக்கு உயிர்கொடுப்பதே தவிர வேறேதுமில்லை. நிங்கள் பேசுவதோ வேறொன்றைப்பற்றி. சோதியின் அரசியலோடு எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவர் கூறும் விபரங்கள் தவறானவையல்ல.
சிறி, குறுங்குழுவாதம், ஒற்றைத் தன்மை போன்ற நிலப்பிரபுத்துவச் சிந்தனை முறைகளிலிருது வெளியே வருவோம். இங்கு நான் பெரிது நீ பெரிது என்ற வாதங்களை ஓரமாக ஒதுக்கிவைப்போம்.
சிறி, தயவு செய்து உங்களிடம் தாழ்மையாகக் நான் கேட்பதெல்லாம் இதுதான்!
நாம் எந்த மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வி கற்றோமோ அந்த மக்களின் துயரத்தில் பங்கொகொள்ளாமல் தொலைவில் வாழ்வதற்காக வருத்தப்படுவோம். ஒரு இக்கட்டான காலப்பகுதியில் எம்மாலான குறைந்தபட்சப் பங்களிப்பை வழங்க முடிகிறதே என்பதையிட்டுப் பெருமைகொள்வோம்.
சிறி, நாம் எத்தனை விடயங்களைப்பற்றிப் பேசலாம்? இன்று உலகம் ஒரு புதிய சிந்தனையை எதிர் நோக்குகின்றது. நமது அனுபவங்களை அச்சிந்தனை முறையை வளர்த்தெடுக்கப் பயன்படுத்திக்கொள்வோம்.
இரா வேலுச்சாமி என்பவரின் கவிதை ஒன்று நினைவிற்கு வந்துபோகிறது.
“மலையைகிளப்பும் மகத்துவம் இருந்தும் எலிவேட்டைக்காக மட்டும் ஏன் இணைப்பேற்படுத்திக் கொள்கிறோம்”
தோழர் ரயாகரன் கருத்துகளையும் சேர்த்து படித்தால் தான் உண்மை தெரிய வரும்.
விமலேஸ்வரன் ஒரு ‘வித்தியாசமான’ மக்கள் போராளி-…
விமலேஸ்வரன் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் சேர்ந்தபோது…
‘தமிழ் மக்கள் ஐனநாயக முன்னணியின்’ கருத்தை அறிந்திருந்தான். இவர் விடுதியில் தங்கியிருந்தபோது, உரித்திரபுரம் 8ம் வாய்க்காலைச் சார்ந்த ஒருவர் (பெயர் தவிர்க்கப்படுகிறது) ‘தமிழ் மக்கள் ஐனநாயக முன்னணிக்கு’ அப்பொழுது வேலைசெய்து வந்தார். இவ் நபர் விடுதிக்கு வெளியிலும், இவரின் தங்கை விடுதியிலும் (நான்கு வயது சிறியவர்) இருந்து வந்தனர்.
இந்நபரின் ஊடாகவே விமலேஸ்வரன் ‘தமிழ் மக்கள் ஐனநாயக முன்னணிக்கு’ அறிமுகமாகினார்.
பின்னர்….
அந்நபர் பிரன்ஸ் சென்றபோது…
விமலேஸ்வரன் (தனிப்பட்ட – மேற்சொன்ன தொடர்புகளுக்கு வெளியே- சொந்தக் காரணங்களின் நெருக்கடியால்)
புளட்டுடன் இணைந்திருந்தார். இக்காலகட்டத்தில் இப்பிரதேசம் புளட்டின் அளுமையும், ‘தமிழ் மக்கள் ஐயநாயக முன்னணியின்’ , ”கூட்டுக்குழுவின்” வேலைப்பிரதேசமாகவும் இருந்தது (புத்தூர் நிலப்பிரச்சனையில், புளட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலா… போன்ற அமைப்புக்கள் இணைந்து வேலை செய்தன…)
தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளாத கருத்துடன் இணைந்த விமலேஸ்வரன்,( ‘தமிழ் மக்கள் ஐனநாயக முன்னணி’ காலத்தில்) புளட்டுடன் இணைந்து, கடைசிக்காலத்தில்..என்.எல்.எவ்.ரீ யின் கருத்தை ஏற்றிருந்தார்.
விமலேஸ்வரனின் மரணம் ஒர் அரசியற் படுகொலை! இதை யாரும் நிராகரிக்கமுடியாது. அவ்வாறு நிராகரிப்பது அரசியற் காரணங்களைக் கொண்டதாகவே இருக்கமுடியும்!
இருப்பினும் விமலேஸ்வரின் மரணத்துக்குக்கு, ஒரு மத்தியதர வர்க்கக் காதல் விவகாரமும் – பக்க – கரணமாக இருக்குமா? (புலியின் பக்க வியாபாரத்துக்காக) என்பதும் ஆராய்வுக்குரியது….
மதியதனியுடன் உண்ணாவிரதமிருந்த 9 போரும் புலிகளால் கடத்தப்பட்பட்டிருந்தனர். இதில் ஒருவரும், பின்னர் சிங்கப்பூர் வாசி ஒருவரின் ஆளுமை இங்கு ஆய்வுக்குரியது… (பெயர் தனிமனித சுதந்திரத்துக்காக – முதலாளித்துவ சுதந்திரம்-) நோர்வேயின் சட்டதிட்டத்தின் படி இதை வெளியிடுவது, சிலவேளைகளில் சட்டச் சிக்கலைக் கொடுக்கலாம்… (அதனால் தவிர்க்கப்படுகிறது)
மொத்தத்தில் விமலேஸ்வரன் இச்சமூகத்தின் நிலப்பிரபுத்துவ மற்றும் தரகுமுதலாளித்துவ வரம்ரபுகளை மீறி, இதை எதிர்த்துப்போராடியவன் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை.
இதைவிடவும், ஐனநாயகத்துக்காக மரணத்துடன் போராடிய ஒரு நேர்மையான போராளி – விமலேஸ்வரன்…..
ரூபன்
28 07 10
ரூபன் முதலில் எந்தப் பிரச்சனை குறித்துப் கருத்துப் பரிமாற்றம் செய்ய முனையும் போதும், நாம் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது முக்கியமானது. நம் அனைவரதும் மத்தியில் இழையோடும் நிலப்பிரபுத்துவ குழுவாதச் சிந்தனை முறை என்பது தொடர்பான தொடர்ச்சியான போராட்டம் எமக்கு மத்தியிலேயே அவசியமாகிறது என்பது எனது கருத்து. இலங்கையில் உருவான தேசிய விடுதலை இயக்கங்கள் அனைத்திலும் இந்தக் குழுவாத நோய் பரவியிருந்தது. இதன் பிரதான எதிர்விளைவு தான் எந்த முற்போக்கு இயக்கமும் இலங்கையில் நிலைபெற முடியாமைக்குக் காரணங்களில் ஒன்று. நீங்கள் மட்டுமல்ல நானும், எனக்குத் தெரிந்தவர்களும் கூட இந்தச் சிந்தனை வட்டத்திற்குள் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பது எனது கருத்து.
இந்தச் சிந்தனை முறையின் அருவருப்பான முகம் தம்மைத் தாமே தலைவர்களாக அறிவித்துக் கொள்ளும் கோமாளிகளைக் கூட உருவாக்கியிருக்கிறது. விமலேஸ்வரன் என்ற போராளியின் அரசியல் பங்களிப்பு என்பது மதிப்பிடக் கூடிய எல்லைக்கு வெளியே இருப்பதாக நான் கருதவில்லை. பாசறை குழுவுடனும் அதனால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களில் விமலேஸ்வரன் எவ்வளவு ஈடுபாட்டுடன் எந்த மட்டத்தில் வேலைசெய்தார் என்பது எனக்குத் தெரியும். அது கூட முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல. வரலாற்றின் ஒவ்வொரு முக்கியமான காலகட்டமும் முக்கியமான மனிதர்களை உருவாக்குகிறது. அன்றைய வரலாற்றுக் கட்டத்தில் விமலேஸ்வரனின் பாத்திரம் முக்கியமானது. விமலேஸ்வரன் என்.எல்.எப்.ரி என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்வது ஒன்றும் பெரிய விடயமல்ல ஆனல் உங்களுக்கு அதனூடான குழு நிலை அடையாளம் தேவைப்படுகிறது.
அதனால் இல்லாத ஒன்றை மறுபடி மறுபடி மந்திரம் போல உச்சாடனம் செய்கிறீர்கள். ரூபன். நாம் புதிய சிந்தனை முறை ஒன்று தேவை என்பதற்கான முக்கியமான காலகட்டம் ஒன்றில் வாழ்கிறோம். பல சமூக அரசியல் விவகாரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு புறத்தே ஒதுக்கிவைத்துவிட்டு எதாவது ஒரு வகையில் அழிவை ஏற்படுத்தும் குழுவாத மனோபாவத்தையே நீங்கள் முதன்மைப்படுத்துவதாகத் தெரிகிறது.
உலகமயத்தின் பிற்காலகட்டம் பல கோரமான சமூகவிரோத சக்திகளை உருவாக்கியுள்ளது. அதிலும் அமைப்புமயப்பட்ட, அனுபவம் மிக்க அரசியலைக் கொண்டவர்கள் அவர்கள்.. “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒடும்” எமது மனோபாவத்தைக் களைவது அவசியமானது.
நான் நினைக்கிறேன், எமது தனிமனித அல்லது குழு நிலை அடையாளம் என்பதை முதன்மைப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள
1. நட்பு சக்திகளை இனம்கண்டுகொண்டு அவர்களுடனான நட்பு முரண்பாட்டை வளர்சியை நோக்கி நகர்த்திச் செல்வோம்.
2. எதிரிகளை இனம்கண்டு கொண்டு அவர்களுடனான பகை முரண்பாட்டை மக்கள் மத்தில் அம்பலப்படுத்துவோம் அல்லது அவர்களுக்கு எதிரான பொது ச் சிந்தனை முறை ஒன்றை வளர்த்தெடுப்போம்.
3.இவை இரண்டுமே வரலாற்றுக் காலகட்டங்கள் குறிக்கும் புறச் சூழல்களிற்கு ஒப்ப மாறுபடும் என்ற உண்மையின் அடிப்படைக்கான தத்துவார்த உரையாடல்களை முன்னெடுப்போம்.
இவற்றிற்காக நானும் நீங்களும் பங்களிப்போமாயின் நமது வாழ்க்கையை அது அர்த்தப்படுத்தும்.
“விமலேஸ்வரன் என்.எல்.எப்.ரி என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்வது ஒன்றும் பெரிய விடயமல்ல ஆனல் உங்களுக்கு அதனூடான குழு நிலை அடையாளம் தேவைப்படுகிறது.”
சுத்திச் சுத்தி நீங்கள் என்.எல்.எப் ரீ ரஜாகரன் என்று கேள்வி கேட்டதே உங்களிற்குக் குழு நிலை அடையாளம் தேவைப்படுகிறதாற் தானே.
1. இந்த கருத்தை முதலில் சோதிலிங்கம் பதிய முனைந்த போது இக்கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டன.
2 ரயாகரன் என்ற தனிநபர் மட்டுமல்ல ஒரு குழுவாகவிருந்தால் கூட தவறான தகவல்கள் முன்வைக்கப்படும் போது அதுவும் நான் சாட்சியாக இருந்த தகவல்கள் முன்வைக்கப்படும் போது அது குறித்த விடையங்களைத் தெளிவுபடுத்தல் தவறானதல்ல.
அவ்வாறு தெளிவுபடுத்தலை அடையாளப்படுத்தலாக நான் கருதவில்லை.எனக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. நான் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் வாழும் ஆயிரக்கனக்கானோர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள ஆயிரம் அரசியல் நிகழ்வுகள் உள்ளன. ஆனால் அவை அவசியமற்றவை. எனது மத்தியதர வர்க்க உணர்வுதான் என்னை இலங்கையிலிருந்து இங்கு துரத்திவந்திருக்கிறது. அதே வேளை பல அரசியல் சுனாமிகளுக்கு மத்தியில் இலங்கையில் கிராமிய உழைபாளர் சங்கத்தை பாதுகாத்து இன்று நேபாள மாவோயிஸ்டுக்களோடு இணைந்து வேலைசெய்கின்ற அளவிற்கு உருவாகியிருகும் அதன் கடைநிலை உறுப்பினராக இருந்த முரளியின் கடந்த 20 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைபற்றி எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.
நாவலனுக்கு…
“விமலேஸ்வரன் என்.எல்.எப்.ரி என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்வது ஒன்றும் பெரிய விடயமல்ல ஆனல் உங்களுக்கு அதனூடான குழு நிலை அடையாளம் தேவைப்படுகிறது.”
நான் எந்த அமைப்புக்காகவும் வக்காலத்து வாங்கவில்லை -நாவலன்.
விமலேஸ்வரனின் இக்காலத்தில் நான் அந்த அமைப்பிலிருந்தே வெளியேறி இருந்தவன்.
ஆனால் வரலாறுகள் ‘அரசியற் சோடிப்புக்காக’ வெளிவரும்போது, (இதுவும் ஓர் அரசியல் காரணத்துக்காக)
நாம் எமக்குத் தெரிந்த உண்மைகளையும், யதார்த்தத்தையும் பேச முனைகிறோம்.
விமலேஸ்வரனை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை எனக்கில்லை.
ஏனெனில் கடந்த கால அரசியல் போக்கு என்ன என்பதை, புலிகளின் இறுதிக்காலத்தில் நான் தெளிவாகவே பேசியுள்ளேன்.
வெளிப்படையாகச் சொல்வதானால்…
சரியோ, பிழையோ எனது கருத்தை இருட்டடிப்புச் செய்யும், எந்தப் பக்கத்துடனும் நான் நட்புக் கொள்ள முடியாது!
எனது கருதுத்தை சொல்ல முடியாத பக்கத்தில், நீங்கள் வைக்கும் வியாக்கியானம் ‘வேடிக்கையாக’ இருக்கிறது!!
இல்லையா?
ரூபன்
30 07 2010