மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் பொலிசாருக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்கிறது.
வாழைச்சேனைப் பகுதியில் பெண் ஒருவர் தாக்கப்பட்டதையடுத்து உருவான கலவரத்தில் காவல்துறையினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது. வாழைச்சேனை காவல்துறை நிலையத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்ற போது காவல்துறையைச் சேர்ந்த நால்வரும், பொதுமக்களில் மூவரும் காயமடைந்தனர்.
காவல்துறையினரின் வாகனம் ஒன்றும், பயணிகள் பேரூந்து ஒன்றும் இந்த மோதல்களின் போது சேதமடைந்தன.
பெண்களைத் துன்புறுத்திவந்ததாகக் கூறப்படும் ஒருவரைப் பிடித்த பொதுமக்கள் அவரை காவல்துறையினரிடம் கையளித்தனர். இருந்தபோதிலும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியமையால் குறிப்பிட்ட நபரை தம்மிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைப் பொலிஸார் ஏற்க மறுத்ததையடுத்தே காவல்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இன்று கடையடைப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போராட்டங்களைத் தலைமைதாங்கவோ இலங்கை அரசிற்கு எதிரான மக்களின் உணர்வுகளை அரசியலாக முன்னெடுக்கவோ தமிழ் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகள் முன்வரவில்லை. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் சாதிக்கின்றது. தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டங்களை நாடு தழுவிய மக்கள் போராட்டங்களாக முன்னெடுக்கவும் தலைமை வகிக்கவும் புதிய அரசியல் தலைமையின் அவசியத்தை இவை உணர்த்துகின்றன.