யாழ்பானத்தில் ராணி தியேடரில் ஓடிய , இலங்கைக் கலைஞ்சர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள்நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றில்,பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற ‘வாடைக்காற்று’ படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெரிய இழப்பு என்று இள வயதில்என்னைப்போல அந்தப் படம் பார்த்த பலருக்கு தெரியும்.
செங்கை ஆழியன் என்ற கலாநிதி கந்தையா குணராசா எழுதிய வீரகேசரிப் பிரசுரமா வந்த வாடைக்காற்று நாவலாக வாசித்த காலத்திலேயே கொஞ்சம் ஜனரஞ்சகமா. கிளாசிகல் சுவாரசியமா இருந்த அதை , நாவலின் பெயரானா வாடைக்காற்று பெயரிலேயே திரைப்படமாக்க, கதை நெடுந்தீவில் நடப்பதால் அங்கேதான் ஏ. வீ. எம். வாசகம் என்ற காமராமான் ,கமராவை வைச்சு சுழட்டி எடுத்து இயற்கைக்கு உயிர் கொடுத்து இருப்பார் எண்டு நினைத்திருந்தேன், உண்மையில், வெள்ளித் திரையில் கறுப்பு வெள்ளை படத்தொகுப்பிலும் மின்னிய ,கடல் கரை, அதை தழுவும் அலைகள், பனங் காணிகள், கன்னாப் பத்தைகள் ,பனை வடலிகள், கோவேறு கழுதைகள்,பிளமிங்கோ பறவைகள், மணல் கும்பிகள் எல்லாம் ,கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது என்று படித்த போது ஆச்சரியமா இருந்தது.
வாடைக்காற்று காலத்தில் மன்னாரில இருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, காதல் ,ஒரு கற்பழிப்பில் சூடு பிடிச்சு, ஒரு கொலையில் முடியும் இதுதான் கதை . கதை இரண்டு பருவங்களில் ,பிளமிங்கோ பறவைகள் ரசியாவின் சைபிரியாவில் இருந்து நெடுந்தீவு வந்து இறங்க,அவைகளின் வரவோடு கதை தொடங்கி , மனிதர்களின் விரிசல்களோடு கதை நடக்கும். சில வருடம் முன் மன்னாரில் இருந்து வந்து வாடிவீடு கட்டி தொழில் செயத சம்மாட்டி செமியோன் ஆக பொப் இசைப் பாடகர் மனோகரன் நடிக்க , உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா என்ற பெண்ணாக சந்திரகலா நடித்து இருந்தார். செமியோனுக்கும்,பிலோமினாவுக்கும் இடையில் இருந்த ஒரு வித காதல் கலந்த உறவு, அவளது அப்பா , அண்ணன் ஆகியோருடன் செமியோன்க்கு ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது.
உள்ளூர்க்காரரான பொன்னுக்கிழவர் ஆக நடித்த “முகத்தார் வீடு ” புகழ் ஜேசுரட்னம், பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிற அவர், உள்ளுரில் கோவேறு கழுதையில் சுற்றித் திரியும், பத்தைக் காடுகளில் முயல் பிடிக்கிற அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலம் ஆக நடித்த அண்மையில் மறைந்த கே எஸ் பாலச்சந்திரனுக்கு அவளை கலியாணம் செய்து வைக்கவேண்டுமென்று ஆசைப்பட, மன்னாரில் இருந்து வந்த சம்மாட்டி வேதக்கார செமியோன்,சைவக்கார நாகம்மாவையும் மனம்மாற்றி மயக்கிக் கொண்டுபோக சண்டை தொடங்குது.
இந்தப் படத்தில மரியதாஸ் என்ற பாத்திரத்தில் நடித்த ,வைத்திய நிபுணர்,சில வருடம் முன் லண்டனில் மறைந்த டாக்டர் இந்திரகுமார் சிமியோனுகுப் போட்டியா வர சம்மாட்டியா நடித்து இருந்தார், ஒரு டாக்டர் எதுக்கு தமிழ் சினிமாவில நடிச்சார் எண்டு இன்னுமே விளங்கவில்லை. செமியோன் சம்மாட்டி வழக்கமாக மரியதாஸ் வாடி போடும் இடத்திலே பலாத்காரமா வாடி போட்டுத் தொழில் செய்ய, பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுக்க, இவளவு நாட்டாண்மை செய்தும் செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே அதிகம் லாபம்,தொழில் வெற்றி கிடைக்க தொடங்க கதையில் வாடைக்காற்று அடிக்க தொடங்குது.
டாக்டர் இந்திரகுமார் அவரது தொழில்சார் துறையாகிய மருத்துவத்துறையில் நிபுணராக விளங்கியதுபோதும்,தமிழ் மொழியின் மீதும், நடிப்புத் துறைமீதும் அதிகம் விருப்பம் இருக்க அவருடைய திறமைக்குச் சான்றாக அவர் மரியதாஸ் ஆகா நடித்த வாடைக்காற்று திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றுக் கொடுத்திருக்கு. எழுத்தாளராகவும், மருத்துவராகவும் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய டாக்டர் இந்திரகுமார் 1983 கலவரத்தில் லன்டனுகுப் புலம் பெயர்த்து 25 வருடங்கள் அங்கே பிரபல வைத்திய நிபுணரா வேலை செய்த அவர்தான் வாடைக்காற்றுபடத்தில , உயர்த்திக் கட்டிய சரத்தோட , சேட்டும் போடாமல், ” அப்புவைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வியா ” எண்டு ஒரு ” பன்ச் டயலக் ” எப்பவுமே அவரின் காதலி நாகம்மாவிடம் குறும்பாகக் கேட்டு ,கடற்கரை எங்கும் மணல் வெளியில்க் காவியம் எழுதிய மரியதாஸ் எண்டு பலருக்கு தெரியாமலே போனது…..
சுடலைச் சண்முகம் என்ற பாத்திரமாக ஜவாஹர் பெர்னாண்டோ நடித்து இருந்தார் ,உண்மையில் அந்தப் பாத்திரம் தான் படத்தின் கதையில் முக்கியமான பல திருப்பங்களைக் கொண்டுவரும் .ஊர்த் திருவிழா நடக்கிற நேரம் , செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிற இரவு இருட்டு நேரத்தில , இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட. அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன சிமியோனின் மீன் கொத்தி பறவை போல அழகான காதலி பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விட நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்ல , விருத்தாசலம் பாத்திரமாகவே மாறி கேஸ் எஸ் பாலச்சந்திரன் அதில் நடித்து இருகிறார்..
இவளவு குழப்பமும் வெளியூர் மீனவர்களால் உள்ளுரில் நடக்க அதை எங்கள் செங்கை ஆழியன் கதையாக எழுத வெள்ளித்திரையில் பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் டைரக் செய்து, கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றி, ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன்எழுதிய, பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க பாட, இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் திரைக்கதை எழுத , ஒரு சம்பவம் , ஒரு கதை உயிர் ஆகி எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட வாடைகாற்று அசைக்கமுடியாத இலங்கைத் தமிழரின் சரித்திர சாதன..
இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தின் ” தீம் மூசிக் “ஆனா, இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் ஜோசப் ராசேந்திரன் பாடிய இதயம் பிழியும்” வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே ,நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓரத்திலே …” என்ற பாடலைப் பின்னணியில் நீலக்கடல் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் போது, விருத்தாசலம் ஆசையோடு கனவோடு காத்திருந்த அவரின் காதலி மரியதாஸ் சம்மட் டியோடு போக மனநிலை நொந்துபோக , சம்மடடி செமியோனும் பிலோமினா கற்பழிக்கப் பட்டுக் கொலை செயப்பட இழப்பினால் வருந்த, மரியதாஸ சம்மாட்டி நாகம்மாவை ஊரை விட்டுப் கூடிக்கொண்டு போக ,கூளைக்கிடாய் என்ற பிளமிங்கோ பறவைகளும் தங்கள் சொந்த ரஸ்சிய நாட்டு சைபிரியாவுகுப் போக ,மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது. வாழ்கை தொடருது ….
கண்களில் கண்ணீரை வரவழைத்து , உலகம் மறந்து கடற்கரை மணல் வெளி எங்கும் வலியோடு யதார்த்தமாய் வாழ்க்கை சொன்ன அழகின் அற்புதம் வாடைக்காற்று’ , தென்னிந்திய சினிமா ஜிகிணா முகப் பூச்சு , அளவுக்கு அதிகமான மேக் அப் , நேரம் கெட்ட நேரத்தில கனவுக் காட்சி, ஹீரோவுகுக் கும்மியடிக்கும் குறுப் டான்ஸ் , இதுபோல ஒண்டுமே இல்லாமல் , மீனவ மக்களின் வியர்வையின் வாசத்தை, அவர்களின் இளகிய இதயத்தை திரையில உணரவைத்த அந்தப் படம், ஒரு கவிதை போல ஜோசிக்க வைத்து முடிவு இன்னொரு பருவத்தின் தொடக்கமாகி முடிகிறது…………………
நாவுக் அரசன்
28-02-2014
ஒஸ்லோ.
https://www.facebook.com/arasan.eliyathamby