வவுனியா இராணுவத் தலைமையகத் தாக்குதல் : ராடர்கள் அழிப்பு-புலிகள் தரப்புத் தகவல்

வவுனியாவில் உள்ள படைத் தலைமையகத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்காகக் கடமையாற்றிக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ராடர் இயக்குனர்களும் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலில் காயமடைந்துள்ளார்கள். காயமடைந்த இருவரும் உடனடியாகக் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிய வருகின்றது. படைத்தரப்புத் தகவல்களின்படி பத்துப் படையினரும் பொலிஸார் ஒருவரும் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர் என்றும் விடுதலைப்புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் பத்து சடலங்களைத் தாம் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தவிரவும் 15 படையினரும் 8 பொலிஸாரும் 5 விமானப்படையினரும் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலின் போது வன்னியில் இருந்து 115 எறிகணைகளை புலிகள் வீசியதாகவும் அவை அனைத்தும் ஜோசப் முகாம் பகுதியைச் சுற்றி வீழ்ந்ததாகவும் வவுனியாவின் எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் முகாம் பகுதியில் அமைந்திருந்த முகாமின் தலைமைக் கட்டிடம், ராடர் நிலையம் என்பன முற்றாக சேதம் அடைந்ததுடன் இலங்கை விமானப்படையின் இரண்டு விமானங்களும் சேதம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை புலிகள் அதிகாலை 2.30 மணியளவில் வான் தாக்குதலை நடாத்தியதும் மும் முனைகளிலிருந்து சிறிலங்காவின் படைத்தளத்தை நோக்கி ஆட்லறி செல் வீச்சு புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் விமானப்படையின் இரண்டு விமானங்களும் ராடர் தொகுதியும் சேதமுற்றதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இன்று காலை 10.45 மணிமுதல் மன்னார்-வவுனியாவிற்கான சகல போக்குவரத்துக்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
புலிகள் தரப்பு விடுத்துள்ள அறிக்கையில், சிறிலங்காப் படையினரின் வன்னித் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படையின் வான் கண்காணிப்பு ரடார் நிலையத்திற்கு இலக்கு வைத்து இன்று அதிகாலை 3.05 மணிக்கு கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ரடார் நிலையம் அழிக்கப்பட்டது எனவும் தொடர்ந்து கரும்புலிகளின் உதவியுடன் வான் புலிகளின் வானூர்தித் தாக்குதல் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்றன எனவும் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இத்தாக்குதல்களில் சிறீலங்கா படையினர் இருபதிற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்தார்கள் எனவும் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.