”சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் இடையே நடந்த மோதல் நிகழ்வுக்கு முதலமைச்சர் கருணாநிதி தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற காவல்துறையினர்- வழக்கறிஞர்கள் மோதலை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, “வழக்கறிஞர்கள் வேட்டை என்ற போர்வையில்’ சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் இதர நீதிமன்ற வளாகங்களுக்குள் காவல்துறை அத்துமீறி நுழைந்து அங்குள்ள நீதிபதி, வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு வந்திருந்தவர்கள் என அனைவரையும் படுகாயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள பொருள்களுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கியது உள்ளிட்ட பல்வேறு அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்கள் சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் தான் எனக் கூறியுள்ளது.
நான்கு காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், நீதித்துறையின் மீது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட முரட்டுத்தனமான தாக்குதல் என்பதால் இந்த உயர் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.
இதற்கு நேர்மாறாக, காவல்துறையினரை காப்பாற்றும் விதத்தில் நீண்டதொரு அறிக்கையை தன்னுடைய முரசொலி பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. “காவல்துறையினர் தங்கள் கடமையை செய்து கொண்டிருக்கும் போது பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சில சம்பவங்களை வைத்து, காவல்துறையினரின் பணிக்கு களங்கம் கற்பிக்கக்கூடாது” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.
காவல்துறையினர் வெறும் கருவிகள் தான். அவர்களின் அரசியல் எஜமானர்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டுதான் காவல்துறையினர் நடந்து கொண்டனர். இந்த அனைத்து சம்பவங்களிலும் அரசியல் எஜமானர் தி.மு.க அரசிற்கு தலைமை வகிக்கும் கருணாநிதிதான். கருணாநிதிக்கும் இது நன்றாக தெரியும். நீதிமன்றம் காவல்துறையின் மூத்த அதிகாரிகளை குற்றவாளிகள் என்று கூறியிருந்தாலும், இந்த விவகாரம் இத்துடன் முடியப் போவதில்லை என்பது கருணாநிதிக்கு தெரியும்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்களுக்கான பொறுப்பு நேரடியாக கருணாநிதியை தான் சென்றடையும். எனவேதான் நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்க கருணாநிதி தயங்குகிறார்.
கருணாநிதி தான் எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி விரும்பினால், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து அங்கு உள்ளவர்கள் மீது தாக்குதல் தொடுக்க உத்தரவு வழங்கியது தான் தான் என்று நீதிமன்றத்திற்குச் சென்று தைரியமாக கருணாநிதி சொல்ல வேண்டும். இல்லையென்றால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க கருணாநிதி தயாராக இருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் முதலமைச்சர் தான் இந்தச் சம்பவத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்; பதில் சொல்ல வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-வெப்துனியா