இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.அதனால்தான் இந்தியாவை மூன்றாம் உலக நாடு என்கிறோம். உலக மயம் அறிமுகம் ஆன 91-ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் ஒரு முக்கியத்துவமும் கவனமும் கிடைத்துள்ளது. அதற்குக் காரணம் தனியார் தாரளாமயக் கொள்கை மூலம் இந்திய வளங்களை உலக நாடுகள் பங்கீடு செய்து கொள்வதுதான்.
ஆனால், இந்தியாவின் இதயமான வேளாண் தொழில் நசிந்து விலைவாசி உயர்வு, கல்வி வீழ்ச்சி. தனிநபர் வருவாய் இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, என பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்குள் பெரும்பான்மை இந்தியர்கள் சிக்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் இந்தியாவில் ஏழ்மையான மாநிலங்கள் குறித்தும் வளர்ச்சி குறித்தும் நிதி ஆயோக் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.வளர்ச்சிக்குறியீட்டின் அடிப்படையில் இந்தி பேசும் மாநிலங்கள் மிக மிக பின் தங்கியிருக்கிறது.இந்தி, இந்து, இந்துத்துவம் இவைகளை போற்றுகிற மாநிலங்களாகவும் பாஜக எளிதில் வெற்றி பெறும் மாநிலங்களாகவும் இவைகள் உள்ளன.
இந்தியாவிலேயே அதிக வறுமை உள்ள மாநிலங்களில் முதலிடம் பீகாருக்கு கிடைத்துள்ளது அங்கு 51.91 சதவிகித ஏழைகள் உள்ளார்கள். இரண்டாவது இடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது அங்கு 42.16 சதவிகிதம் ஏழைகள் உள்ளார்கள். மூன்றாவது இடம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு கிடைத்துள்ளது அங்கு 37.79 சதவிகித ஏழைகள் உள்ளார்கள். அதற்கு அடுத்த இடத்தில் மத்திய பிரதேசம், மேகாலாயா அஸ்ஸாம் என அடுத்தடுத்து பாஜக ஆளும் மாநிலங்களிலேயே வறுமையும் ஏழமையும் கல்வியறிவின்மையும் கோலோச்சுகிறது.
இந்த பட்டியலில் வறுமையை ஒழித்த மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது கேரளம் இங்கு 0.71 சதவிகிதம் ஏழைகள் உள்ளார்கள். தமிழ்நாடு வறுமை ஒழிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது இங்கு 4.89 சதவிகிதம் ஏழைகள் உள்ளார்கள்.கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தனி நபர் வருவாய், ஊட்டச்சத்து, பிரசவ கால மரணங்கள் குறைவு என இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தென்னிந்தியாவின் கேரளமும் தமிழ்நாடும் முதல் இரு இடங்களில் உள்ளன.
இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழி என பாஜகவினர் கூறி வரும் நிலையில் இந்தி பேசும் மாநிலங்கள் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் லட்சக்கணக்கானோர் தென் இந்தியா நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்கள். தமிழ்நாடு, கேரளம் என இரு மாநிலங்களிலும் கடற் தொழில் முதல் கட்டுமான தொழில் வரை இவர்கள் எங்கும் பரவி வருகிறார்கள். இது என்ன விதமான பின் விளைவுகளை உருவாக்கும் என்பது தெரியவில்லை.