தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, போர்க் குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள் போன்ற முக்கியமான பிரச்சினைகளை மழுப்பியும் மறைப்புச் செய்தும், பூசிமெழுகிச் சமாளித்துமே கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. இவ் அறிக்கையானது அழிவுகளையும் அவலங்களையும் அனுபவித்து பாதிப்புகளுடன் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணங்களையோ புனரமைப்பு புனர்வாழ்விற்கான அர்த்தமுள்ள முன்மொழிவுகளையோ முன்வைக்கவில்லை. இதன் மூலம் மஹிந்த சிந்தனை அரசாங்கத்தின் பேரினவாத நிலைப்பாட்டையும் அதன் யுத்தகால செயற்பாடுகளையும் நியாயப்படுத்தி நிலை நிறுத்தும் போக்கையே ஆணைக் குழு அறிக்கை வெளிப்படுத்தி நிற்கிறது.
இவ்வாறு புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆணைக் குழு பெரிதாகச் சாதித்துவிடப் போவதாக அரசாங்க தரப்பில் கூறப்பட்டு வந்த போதிலும், அதன் ஆணைக் குழு உட்படாத விடயங்களில் மூக்கை நுழைத்து பேரினவாத மேலதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்தாத விதத்திலேயே கருத்துக்களை முன்வைத்துள்ளது. அதாவது சமாதான நடவடிக்கைகளின் தோல்வியும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே அதன் ஆணைக்கு உட்பட்ட விடயங்களாகும். ஆனால் அதற்கும் அப்பால் சென்று போர்க் குற்றங்கள் பற்றிய பக்க சார்புக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் அரச பாதுகாப்பு படைகளினால் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டவில்லை என்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்திற்கும் அதன் ஆயதப் படைகளுக்கும் நற்சாட்சிப் பத்திரம் கொடுத்துள்ளது. அதேவேளை கடத்தப்பட்டும் காணாமல் போயும் உள்ள ஆயிரக்கணக்கானோர் பற்றிய நழுவலான கருத்துக்களையே ஆணைக் குழு கூறியுள்ளது. அத்துடன் கடத்தல்கள், காணமால் போனமை, கைதுகள் பற்றி இவ் ஆணைக்குழுவின் முன் அளிக்கப்பட்ட சாட்சியங்களை முறையாகப் பரிசீலித்து உரிய சிபாரிசுகளைச் வழங்க ஆணைக்குழு தவறியுள்ளது.
பொத்தம் பொதுவாக தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதாகக் கூறும் அறிக்கையில் அவை எவை என்பன பற்றியோ அவற்றின் பாரதூரத்தன்மை பற்றியோ எதுவும் கூறப்படவில்லை. தமிழ் மக்களின் உடனடி நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான எவ்வித வழிமுறைகளையும் அதற்கான முன்மொழிவுகளையும் இவ் அறிக்கை கொண்டிருக்கவில்லை. மாறாக தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரசாங்கத்தினதும் ஆயுதப் படைகளினதும் செயற்பாடுகளை உறுதி செய்யும் வகையிலான கருத்துக்களை முன்னெடுப்பதில் அறிக்கை தனது முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளது.
இலங்கை வரலாற்றில் அவ்வப்போது பிரச்சினைகள் பூதாகரமாகிக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவற்றைத் திசை திருப்பவும் மூடிக்கட்டிக் கொள்வதற்கும் உருவாக்கப்பட்டு வந்த ஆணைக் குழுக்களின் வரிசையில் நல்லிணக்க ஆணைக்குழுவும் ஒன்றேயாகும். அதற்கப்பால் இவ் ஆணைக்குழுவின் அறிக்கையானது எவ்வகையிலும் முக்கியத்தும் பெறக்கூடிய ஒன்றல்ல. அத்துடன் காலத்தையும் பொது மக்களின் பெருந் தொகைப் பணத்தையும் விரயமாக்கிக் கொண்டதற்கு அப்பால் இவ் அறிக்கையில் கற்றுக் கொள்வதற்கு எதுவுமே இல்லை.
தமிழ்த் தேசிய இனத்தினதும் ஏனைய ஒடுக்கப்படும் முஸ்லிம், மலையகத் தமிழ் தேசிய இனங்களினது உரிமைகளையும் கோரிக்கைகளையும் மறுத்து இன மத மொழி முரண்பாடுகளை மோதல்களாக் கூர்மைப்படுத்தி வந்ததன் விளைவாகவே நாட்டிற்கும் மக்களுக்கும் அழிவுகளும் பின்னடைவுகளும் எற்பட்டு வந்தன. இவற்றைக் கவனத்தில் கொள்ளாது உரிய பாடங்களைக் கற்கவோ நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ இயலாது. உண்மையான நல்லிணக்கம் நாட்டில் எற்பட வேண்டுமாயின் சமத்துவம் – சுயநிர்ணய உரிமை – சுயாட்சி என்பவற்றின் அடிப்படையில் சகல தேசிய இனங்களினதும் உரிமைகள் உறுதி செய்யப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனை விடுத்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றம் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டள்ள மழுப்பல்கள், நியாயப்படுத்தல்கள், கண்துடைப்புகள், திசை திருப்பல்கள் போன்றவற்றை முன்னெடுத்தால் தேசிய இனப்பிரச்சினைத் தளத்தில் மேலும் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் மட்டுமன்றி மக்களின் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியே ஏற்படும். அத்தகைய நிலையினை உலக – பிராந்திய மேலாதிக்க வல்லரசு சக்திகள் தமக்கான வாய்ப்புகளாகவும் தலையீடுகளாகவும் மாற்றிக் கொள்ளவே எத்தனிப்பார்கள். இது முழு நாட்டிற்கும் அனைத்து மக்களுக்கும் பெரும் அபாயத்தையே கொண்டு வந்து சேர்க்கும் என்பதை எமது கட்சி முன்னெச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்